Obsessed – Short Film – Nathan G
Nathan அவர்கள் இரண்டாவது குறும்படமான “Obsessed” அனுப்பியிருந்தார். இவருடைய “மாசிலன் ஆதல்” குறும்படம் ஒரு சிறந்த ஒலியமைப்பு கொண்ட குறும்படம். ரசிக்கும்படி நேர்த்தியாக எடுத்திருந்தார்.

முதல் கொரோனா பெருந்தொற்று அலையில்
எல்லா குடும்ப தலைவர்களும், தலைவிகளும் எப்படி நடந்து கொண்டார்களோ அதை காட்சிகளால் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் நாதன்.
5 பேர் கொண்ட குடும்பத்தலைவனாக யாருக்கும் தொற்று வந்து விடக்கூடாதே என்று இவர் காட்டும் படபடப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவருடைய குடும்பத்தினர் அனைவரும் சிறப்பாக பங்காற்றியுள்ளனர். கர்நாடக இசையில் ஜண்டை வரிசை, கீதம் பாடும் பெண், டான்ஸ் ஸ்டெப்ஸ் போடும் பையன் என குழந்தைகள் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
Corporation இல் இருந்து வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்ய வருபவரிடம் இவர் நடந்து கொள்ளும் முறை அனைத்து வீடுகளிலுமுள்ள குடும்ப தலைவன், குடும்ப தலைவியை பிரதிபலிக்கிறது.
“கொரோனா உங்களுக்கு மட்டும் போகலையா?” என பால்காரர் கிண்டலடிக்கிறார்.. கொரோனா வந்த மாடி வீட்டு மாமா கூட ஜாலியாக வெளியே செல்ல தொடங்கி விடுகிறார்.
ஆனால் குழந்தைகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அப்பாவையும் பார்த்துக் கொண்டு அமைதியாக வீட்டிலிருக்கிறார்கள்.
Pipe இல் சோப்/லைசால் போடுவது/தெளிப்பது, கொலுவுக்கு கூப்பிட வந்தவர் சென்றவுடன் அந்த இடத்திற்கு mop போடுவது, பாதி கை வரை சோப் போட்டு கை கழுவுவது எல்லாம் நாம், அனைவரும் இந்த கொரோனா காலத்தில் செய்யும் அதிகப்பிரசங்கித்தனங்கள் தான்.
கண்ணுக்கு தெரியாத வில்லன் கொரோனா நம்மை நாமே பார்த்து சிரிக்கும் படி பல விஷயங்களை இந்த இரண்டு ஆண்டுகளில் செய்து விட்டது.
அவை அனைத்தையும் அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அக்டோபர் 2021 க்கு பிறகு குழந்தைகள் வர்புறுத்தலின் பேரில் மாடிக்கு சென்றாலும் அங்கே தரையை தொட்டு விட்டு பிறகு பயத்தில் கை கழுவுவது அருமை.
தொழில்நுட்ப விஷயங்களில் ஒலிச்சேர்க்கை, எளிமையான ஒளியமைப்பு, இயக்கம் என Obsessed குறும்படம் ஒரு அட்டகாசமான திரையனுபவம்.
குறும்படத்தின் லிங்க் கீழே.