
சிறுகதை 28 : நூதனத்திருட்டு – சிவஷங்கர் ஜெகதீசன்
பிரபல பெட்ரோல் பங்க், மேடவாக்கம், சென்னை
மதியம் 2 மணி
வெயில் வழக்கத்தை விட அதிகமாயிருந்தது. மக்கள் நடமாட்டம், வாகனங்கள் எண்ணிக்கை காலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குறைந்திருந்தது. வெங்கடேஸ்வரா செர்வீஸஸ் என்ற பெயரில் இந்த பெட்ரோல் பங்கை 5 வருடங்களுக்கு முன் ஃப்ரான்ஸைசி ஒப்பந்தம் மூலம் எடுத்திருந்தார் எழிலன். பனிரெண்டு பேரை பணியிலமர்த்தி இரு மேனேஜர்களை பங்கை கவனிக்க பணியில் அமர்த்தியிருந்தார்.
கடந்த ஆறு வருடங்களில் 60000 புதிய பெட்ரோல் பங்குகள் இந்தியாவில் உருவாகியிருந்தன.
45 சதவீத வளர்ச்சியை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றிருந்தன. 3 முன்னணி எரிபொருள் நிறுவனங்களின் லாபமும் பன்மடங்கு பெருகியிருந்தது.
மேனேஜர்கள் தியாகராஜனும், விநோத்தும் எழிலனிடம் தினமும் ஒரு முறையாவது பேசி விடுவார்கள். வரவு, செலவு போக ஒரு நாளைக்கு ₹ 1 லட்ச ரூபாய் டார்கெட் வைத்து ஆரம்பித்தவர்கள் இப்போது ஒரு ஒரு நாளைக்கு ₹5 லட்ச ரூபாய் லாபம் எனப் பார்த்து வந்தனர்.
எழிலன் மேனேஜர்களிடம் சுதந்திரமாக பங்கை விட்டு விட்டு தொலைப்பேசியில் மட்டுமே வரவு செலவுகளை விசாரித்து வந்தார்.
இந்த பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு மூலைகளிலிருந்து வந்து மக்கள் வீடு வாங்கி குடியேறியிருக்கின்றனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள். இதன் மூலம் கடந்த 10 பத்து வருடங்களில் அபரீதமான வளர்ச்சியும், பிதுங்கி வழியும் கூட்டமும் கொண்ட ஊராட்சி யாக மேடவாக்கம் மாறியிருந்தது.
மதிய நேரத்திலும் கணிசமான கூட்டம் பெட்ரோல் நிரப்ப வந்த வண்ணமிருந்தது.
இரு சக்கர வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றிருந்தன. அருள் சளைக்காமல் ஒவ்வொரு வாகனத்திலிருப்பர்களையும் வரவேற்று எவ்வளவு அளவு பெட்ரோல் போட வேண்டும் என விசாரித்து துரிதமாக செயல்பட்டான்.
“₹ 300 ரூபாய் க்கு போடு”
“ஓகே சார். ஜுரோ பாத்துக்கோங்க சார்” என்று வாகனங்களில் பெட்ரோல் நிரப்பிய வண்ணமிருந்தான்.
திவாகர் புதிதாக அந்த பெட்ரோல் பங்கில் ஜாயின் செய்திருந்தான். முதல் நாள் மேனேஜர் தியாகராஜனுக்கு வணக்கம் வைத்துக் கொண்டேயிருந்தான். எங்கே போய் எந்த பம்ப் எடுத்து போடுவது யாரும் தன்னை வரவேற்கவோ பேசவோ தயங்குகிறார்களே என நினைத்திருந்தான்.
இரு சக்கர வாகனங்களுக்கு காற்றடிப்பதும் மும்முரமாக சென்று கொண்டிருந்தது. ஜார்ஜ் காற்றடித்துக் கொண்டே அருளை ஓரம் பார்வையால் பார்ப்பான். அதற்குள் அடுத்த கஸ்டமர் வந்து விட அவர்களை கவனிப்பான்.
திவாகர் ஜார்ஜ் தான் பேசுவதற்கு சரியான ஆள் என ஜார்ஜ் பக்கம் ஒதுங்கியிருந்தான்.
“புதுசா சேர்ந்திருக்கியா?”
“ஆமாம் சார்” பயந்து கொண்டே சொன்னான் திவாகர்.
ஜார்ஜின் சிவந்த கண்கள், தாடி, சரியாக வாராத தலை, அலட்சிய பார்வை ஒரு பயத்தை திவாகருக்கு அளித்திருந்தது.
“அவனப் பாரு. அவன மாதிரி வேல செய்”
“ஆமா சார். காலைலேர்ந்து பாக்குறேன். செமயா வேல செய்யறாப்ல”
ஜார்ஜ் சத்தமாக சிரித்தான். திவாகர் புரியாமல் குழம்பினான்.
“எவ்ளோ சம்பளம் பேசியிருக்காங்க, மாசம்?”
“ஆறாயிரரூபா”
“எங்கேர்ந்து வர்ற?”
“சந்தோஷபுரம்”
“அப்பா என்ன பண்றாரு?”
“கார்பெண்டர்”
“அவன உத்துப் பாரு”
திவாகர் பார்வை அருளை நோக்கிச் சென்றது.
“எவ்ளோ சார்?”
“முந்நாறு”
பைக்கின் முன் சென்று இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் அடித்தான் திவாகர்.
வந்தவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.
கண்கள் மலர, தனது லெதர் பேக்கிலிருந்து சில்லறை எடுத்து 17 நூறு ரூபாய் தாள்களாக எடுத்து எண்ணினான். வந்தவரின் கண் முன் நின்று எண்ண ஆரம்பித்தான் அருள். வந்தவர் பொறுமையின்றி பைக் ஸ்டார்ட் செய்து இவன் எப்போது எண்ணி முடிப்பான், எப்போது கொடுப்பான் எனப் பார்த்து க் கொண்டிருந்தார்.
17 நூறு ரூபாய் நோட்டுகளை வந்தவர் கண் முன் எண்ணிய அருள், 16 நூறு ரூபாய் நோட்டுகளை வந்தவரிடம் நீட்டினான். இவரால் அருளுக்கு ₹100 லாபம். வந்தவரும் வாங்கிக் கொண்டு விரைவாக சென்று விட்டார்.
ஜார்ஜ் நமுட்டு சிரிப்பு சிரித்தான். திவாகருக்கு புரியவில்லை.
“அவன் எண்ணினானே, அது அத்தனையும் அவர்கிட்ட கொடுக்கல, பாத்தியா?”
“இல்லையே”
திவாகர் கவனிக்கவில்லை. மறுபடியும் உற்று கவனித்தான்.
அடுத்தவருக்கு பெட்ரோல் போட ஆரம்பித்திருந்தான் அருள்.
இம்முறை பெட்ரோல் போட்டுவிட்டு லாவகமாக சீக்கிரமாகவே பம்பை வண்டியிலிருந்து எடுத்து விட்டார்.
வந்தவர் 2 லிட்டர் பெட்ரோல் கேட்டார். 2 லிட்டர் பெட்ரோல் மீட்டரில் ரீடிங் முடிந்ததும் குழாயை சாய்வாக பிடித்தான் அருள். இதன் மூலம் 100 மில்லி பெட்ரோல் குழாயில் வெளி வந்து வண்டிக்கு போகாமல் குழாயில் தங்கியது. ரீடிங் 2 லிட்டர் போட்டது போல் காட்டியது.
“கவனிச்சியா?” என்றான் ஜார்ஜ்
“ஒரு மாதிரி சாய்வாக எடுக்கிறார், வண்டிலேர்ந்து”
“அவன் பணம் கொடுத்தவர்கிட்ட எண்ணின அதே பணத்தை திருப்பிக் கொடுக்கல. அவரு அவசரப்படறாருன்னு தெரிஞ்சுகிட்டு ஒரு நூறு ரூபா அடிச்சிட்டான். இரண்டாவது ஆளுக்கு சொன்ன பெட்ரோல் போடல”
“அப்படியா? ரீடிங் பார்ப்பாங்கல்ல? எண்ணிப் பார்ப்பாங்கள்ல பணத்தை?
“ரீடிங் கஸ்டமர் சொன்னத போட்ட மாதிரி தான் காட்டும். மொத கஸ்டமர் சத்தியமா இவன் குடுத்த சில்லறைய எண்ணிப் பாக்கமாட்டான்”
திவாகர் ஆச்சர்யத்துடன் ஒரு கணம் ஜார்ஜை பார்த்தான். பிறகு எல்லாம் புரிந்தது போல் சிரித்துக் கொண்டான்.
திவாகர் சிரித்ததை கவனித்த செல்வி ஜார்ஜ், திவாகரை பார்த்தாள். அவளும் மெலிதாக இவர்களை நோக்கி புன்னகைத்தாள்.
“இங்கே இருக்கிற எல்லாரும் இப்படி பண்ணுவாங்களா?”
“தம்பி. உன்னை மாதிரியே இங்கே இருக்கிற எல்லாருக்கும் 6000 தான் சம்பளம். அதை வெச்சிக்கிட்டு என்ன பண்றது? இப்படிலாம் பணம் பாத்தா தான் உண்டு”
“தியாகராஜன் சார்?”
“அவர் நீ மாட்டிக்காத வரைக்கும் கண்டுக்க மாட்டாரு”
திவாகர் உலகம் புரிந்தவனாய் தலையை நிமிர்த்தினான்.
அடுத்த நாள்.
அருள் பணம் வாங்கும் பையை வைத்துக்கொண்டு திவாகருக்கு சில சூட்சமங்களை சொல்லித் தந்து பெட்ரோல், டீசல் போடச் சொன்னான்.
வேகமாக பெட்ரோல் பங்க் வந்த கார் இவர்களுக்கு நேரே நின்றது.
“டூ தௌஸண்ட் ருபீஸுக்கு போடுங்க” காரிலிருந்த பெண் கார் கண்ணாடியை இறக்கி விட்டு கூறினாள்.
“ஓகே மேடம்” என்றான் அருள்.
திவாகர் பதட்டத்துடன் பெட்ரோல் ஹோஸை எடுத்தான். இருநூறு ரூபாய்க்கு ஓட விட்டான். அது நின்றவுடன் அருள் என்ன பேசப் போகிறான் என ஆவலுடன் பார்த்தான்.
“மேடம், இருநூறு வா தான?” தெரியாதது போல் கேட்டான் அருள்.
“₹2000”
“இன்னோரு ₹1800 ரூபாய்க்கு போடுப்பா”
திவாகர் தலையாட்டினான்.
அருள் காரிலிருந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தான்.
“மேடம், இன்சூரன்ஸ் இருக்கு எடுத்துகறீங்களா?”
“வேணாம் பா”
“இஞ்சின் ஆயில் புதுசா வந்திருக்கு, வேணுங்களா?”
“வேணாம் பா”
“கார்ட்ல பே பண்றீங்களா? இல்ல கேஷா மேடம்?”
“கார்ட்”
“ஓகே மேடம்”
திவாகரும் அருள் பேசிக் கொண்டிருந்த போது பதட்டத்துடன் பெட்ரோல் போட்டு முடிந்திருந்தான்.
வந்த பெண் கார்டை அருளிடம் நீட்டினாள். அருள் கார்டை ₹2000 ரூபாய்க்கு ஸ்வைப் செய்து திரும்பக் கொடுத்தான். விர்ரென கிளம்பியது கார்.
செல்வி அருளையும் , திவாகரையும் பார்த்தாள். “சக்ஸஸ்” என்பது போல் கண்ணசைத்தான் அருள்.
உண்மையிலேயே அந்த காருக்கு போட்ட பெட்ரோலின் மதிப்பு ₹1800 தான். திவாகர் முதலில் ₹200 க்கு பெட்ரோல் போட்டு விட்டு அருள் இரண்டாயிரம் என கூறியவுடன் மீட்டரை Reset செய்யாமல் ₹200லிருந்து ₹1800 என்று மீட்டர் காட்டும் வரை பெட்ரோலை ஃபில் செய்திருந்தான். இதன் மூலம் இவர்களுக்கு ₹200 லாபம்.
அருள் காரிலிருக்கும் பெண்மணி மீட்டரை கவனிக்காமலிருக்க திசைதிருப்பும் வகையில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு சில நாட்களில் திவாகருக்கு இந்தத் திருட்டுகள் பழக்கமாகி விட்டது.
“ஆறாயிரம் சம்பாதிச்சு எப்ப சேத்து வச்சு , எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது? இப்படி பணத்தை எடுத்தா தான் சீக்கிரம் செட்டில் ஆக முடியும்” டீ குடிக்கும் போது அருள் திவாகரிடம் கூறினான்.
செல்வி பெட்ரோல் ஹோஸ் பைப்பை உயர்த்தி பிடித்து ஒவ்வொரு முறையும் 100 மில்லி, 200 மில்லி மிச்சம் பிடித்து அதற்கு தகுந்தாற் போல் பணத்தை எடுத்துக் கொண்டாள்.
கணேஷ் என்ற வயதானவர் நல்லவரா ? அவர் இந்த திருட்டுகளில் ஈடுபட மாட்டாரா என திவாகர் ஜார்ஜை கேட்டான்.
“அவரு பெட்ரோல் டேங்க் மீட்டரையே ரிக் செஞ்சுட்டாரு. ஒவ்வொரு தபாவும் கார்ட்னா ₹200 அடிச்சுடுவாரு”
என்றாள் செல்வி.
செல்வியும் ₹5000 கொடுத்து தான் வழக்கமாக வேலை செய்யும் டேங்கின் மீட்டரை ரிக் செய்ய போவதாக சொன்னாள்.
திவாகர் கணக்கு போட்டான். ஒரு நாளைக்கு ₹1000 என்று வைத்துக் கொண்டாலும் இதுவே ₹30000 நமக்கு எக்ஸ்ட்ரா பைசா வந்து விடும் எனத் நினைத்தான். வருடத்திற்கு ₹3,60,000 வருவானம் வரும், என்ன வாங்க வேண்டும் என அந்த வார இறுதியில் கணக்கு போட்டு வைத்திருந்தான்.
மேனேஜர் தியாகராஜனுக்கு தெரிந்தால் வேலை காலியா? அவர் எப்படி? ஜார்ஜிடம் கேட்டான்.
“அவரு டெக்னிக்கே வேற. கணேஷ் சார் போடற பம்புல ஒவ்வொரு தடவ போடறுதுக்கும் அவருக்கும் காசு”
“அது தான் அளவு குறைவாக போடற பம்பாச்சே”
“ஆமா.. அதனால தான்”
“யாராவது அளவு கம்மியாருக்குன்னு கண்புபிடிச்சுட்டாங்கன்னா?”
“கார்ல வர்ற பாதி பேர் பில்ல ஒரு தடவை பாத்து தூக்கி போடறதோட சரி, பெட்ரோல் அளவுக்கு பில் சரியாருக்கான்னு செக் பண்றது கூட
கிடையாது”
“பில் வெச்சு முதலாளிட்ட மாட்டிக்கிட்டாங்கன்னா?”
“தியாகு சார் கொடுக்கறது எல்லாமே அவர் எழுதி தர்ற பில் தான், அது சும்மா. எரிச்சுடுவாங்க. நிஜ பில் அப்புறமா ரெடி பண்ணிடுவாங்க”
தன் பயமும் விலகியது, சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டான் திவாகர்.
திவாகர் தன் அறையில் உள்ள நண்பர்களிடம் இவையனைத்தையும் சொன்னான்.
“பாத்து மச்சி. நீ மாட்டிக்காத.. இதெல்லாம் சரியில்ல” என்றார்கள்.
திவாகரும் பணத்தை கஸ்டமர் முன் சரியாக எண்ணுவது போல் எண்ணி ஒரு நூறை அமுக்கி விடுவது, ஹோஸ் பைப்பை பெட்ரோல் போட்டு முடித்தவுடன் மேல் நோக்கி பிடித்து 100,200 மில்லி ஒவ்வொரு முறையும் அடிப்பது , அதற்குண்டான பணத்தை லெதர் பையிலிருந்து எடுத்துக் கொள்வது என இருந்தான்.
இப்படியே இரண்டு மாதங்களில் ₹50, 000 சேர்த்திருந்தான். இந்த பெட்ரோல் பங்கின் போடப்படும் அளவு குறித்து பொது மக்கள் சிலர் நுகர்வோருக்கான ஃபாரம்களில் புகார் அளித்திருந்தனர்.
எழிலனுக்கு புகாருக்கான சம்மன் அளிக்கப்பட்டது. எழிலன் தன் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதை ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார். இந்த நூதனத்திருட்டுகளுக்கான அடிப்படை காரணமே அவர் தானென்றிருந்தது. அவரின் பேச்சில் யாரையும் எப்படியும் ஏமாத்தி விடலாம் …”இந்த உலகத்தினரில் பாதி பேர் முட்டாள்கள்” என்ற வாதங்களே இருந்தது.
இதனாலேயே மேனேஜர்கள் கேசுவலாக தவறு செய்ய ஆரம்பித்து மற்றவர்களையும் சின்னச் சின்ன நூதனத் திருட்டுகள் செய்யக் கற்றுக் கொடுத்திருந்தனர்.
புகார்கள் பல வந்ததால் காவல் துறை அதிகாரிகள் எழிலனை கைது செய்து பெட்ரோல் பங்கை சீல் வைத்தனர்.
இரவு நேர ரயில் வண்டியில் சொந்த ஊருக்கு செல்ல அமர்ந்திருந்தான் திவாகர். கையிலுள்ள பையில் இந்த இரண்டு மாதங்களில் திருடிச் சேர்த்த ₹30000.
எதிரில் அமர்நதவரை பார்த்து புன்னகைத்து விட்டு ஜன்னல் வழியாக வாட்டர் பாட்டில் கிடைக்குமா எனப் பார்த்தான் திவாகர்.
எதிரில் உள்ள கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் தென்படவே உடனே இறங்கி வாங்கி வரச் சென்றான்.
தண்ணீர் வாங்கி திரும்பி வந்தவனுக்கு அதிர்ச்சி. பணப்பையைக் காணவில்லை. எதிரில் இருந்தவனையும் காணவில்லை.
தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான். வியர்வை முகத்தில் அப்பிக் கொண்டது.
மொபைல் அடித்தது. அருள் அழைத்தான்.
“மச்சி, எங்கிருக்க?”
“ட்ரெயின்ல”
“போலீஸ்..பங்க் சீல் வெச்சுட்டாங்கடா..ஓனர Arrest பண்ணிட்டாங்க.. நாளைக்கு போலீஸ் நம்ம எல்லாரையும் விசாரிப்பாங்க… பாத்துக்க.பைக்லாம் இப்ப வாங்காத…ஏது காசுன்னு கேட்டு குடைஞ்செடுத்துடுவானுங்க.”
“ம்ம்”
“நம்ம மேட்டர் எதையும் சொல்லிடாத…டின்னு கட்டிடுவானுங்க..வெச்சுடறேன்”
திவாகருக்கு முழுவதுமாக வியர்த்திருந்தது. பணமிழந்து, வேலையும் போய்…விசாரணை வேறா? தலை சுற்றியது.
வியர்வையைத் துடைத்து இருக்கையில் தன் தவறுகளை நினைத்து தலைகுனிந்து அழுதான்.
திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
இந்த கதையில் குறைந்த சம்பள காரர் குறைவாக திருடுகிறார்
பெரிய மேனேஜர் பெரிய அளவில் திருடுகிறார் .,
மொத்தத்தில் எல்லாருமே திருடர்களே .
LikeLike
யம்மடியோவ் இப்படில்லாம் கொள்ளை நடக்குதா.. நான் கூட மீட்டர் அளவைமட்டும் சில குளறுபடி செய்து பணம் சம்பாதிப்பார்கள் என்று நினைத்தேன். உங்க கதையை படித்ததும் தெரிஞ்சுக்கிட்டேன்…
LikeLike