ரப்பர் வளையல்கள் – அணிந்துரை – பாஸ்கர் சக்தி
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் ‘ரப்பர் வளையல்கள்’ சிறுகதைத்தொகுப்பிற்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். மனமார்ந்த நன்றிகள் சார்.
வணக்கம்
நண்பர் சிவஷங்கர் ஜெகதீசன் புத்தகக் கண்காட்சிகள், மற்றும் இலக்கியக் கூட்டங்களின் வழியே எனக்கு அறிமுகமான நண்பர். புத்தகங்களை தேடித் தேடி வாங்குவது. வாங்கியதை உடனே படித்து விட்டு அதற்கு சோஷியல் மீடியாவில் மதிப்புரை எழுதுவது என்று இயங்கும் சுறுசுறுப்பும் ஆர்வமும் கொண்ட இளைஞர். இப்படிப்பட்ட குணம் கொண்ட இவர் கதைகள் எழுதத் துவங்குவது தவிர்க்க இயலாத அடுத்த கட்டம். கிட்டத் தட்ட ஒரு பேரலல் பௌதிக விதி போன்றது அது என்றே நினைக்கிறேன்.
அதன் படி இப்போது அவர் கதைகள் எழுதியே விட்டார்.. நான் இன்னும் சில காலம் கழித்தே இது நிகழும் என்று நினைத்தேன். ஆனால நண்பர் வெகு சுறுசுறுப்பானவர். கொரோனா லாக் டவுன் அவரை இன்னும் சுறுசுறுப்பாக ஆக்கி விட மள மள என்று கதைகளை எழுதி இதோ தீபாவளி ரிலீஸ் என்று `சூரரைப் போற்று ‘ ரிலீசுக்குப் போட்டியாக களத்தில் இறங்கி விட்டார்.

இந்தக் கதைகளின் சிறப்பு என்று கருதுவது கிட்டத் தட்ட எல்லாக் கதைகளுமே வெவ்வேறு விஷயங்களைப் பற்றியவை. ஒன்று போல் இன்னொன்று இல்லை.இந்தக் காலகட்டத்தின் பல்வேறு விஷயங்களைப் பற்றியதாக அவை இருக்கின்றன என்பதே.
இன்னும் கொஞ்சம் பயிற்சி , நிதானத்துடன் எழுதினால் பல நல்ல கதைகளை இவரால் எழுத முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறவராக சிவஷங்கர் இருக்கிறார். இவரது முதல் முயற்சியை அன்புடன் வாழ்த்துகிறேன். நிறைய வாசிக்கிற துடிப்பான இளைஞர் . இப்போது துவங்கி இருக்கும் பயணம் செம்மையாக மாறி சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
-பாஸ்கர் சக்தி