சிறுகதை 3 : தாரா – சிவஷங்கர் ஜெகதீசன்
கலைச்செல்வி ‘தாரா’ வாக மாறி 9 வருடங்கள் ஆகியிருந்தது. தாரா ஒரு ரியாலிட்டி ஷோவில் வந்த மாடல் என்றே ஊருக்கு தெரிந்திருந்தது.
9 வருடங்களுக்கு முன்
“இந்த நாட்டிற்காகவும், இந்த நாட்டு மக்களுக்காகவும், கல்விக்காகவும் சேவை செய்வேன், ஆசிரியராகவும்…சமூக சேவகியாகவும் நாட்டிற்காக உழைப்பேன். இதுவே என் வாழ்க்கை லட்சியம்.” என்று பள்ளி ஆண்டு விழாவில் பேசி கைதட்டல் வாங்கியிருந்தாள்.
அந்த கல்வி ஆண்டு விழா முடிந்த ஒரே வருடத்தில் தந்தை ராஜாராமன் இறந்திருந்தார். தாய் உமா பல வருடங்கள் முன்னரே இறக்க தனி மனுஷியாகிப்போனாள் கலைச்செல்வி.
கல்லூரி முதலாம் ஆண்டு B.Sc Maths படித்துக்கொண்டிருந்தாள். தந்தையை இழந்ததில் படிப்பும் நின்று போனது.
8 வருடத்திற்கு முன் அறிமுகமானவன் தான் ஆசிஃப்.

‘சொல்லுங்க’ என்றான் ஆசிஃப்.
‘இல்ல. அப்பா திடீர்னு இறந்துட்டாங்க..நான் டீச்சர், ப்ளே ஸ்கூல் இப்படி சேர்ந்து வேலை பாக்கணும்னு நினைக்கிறேன்.. இனிமே படிப்ப நிறுத்திட்டு நல்ல வேலைக்கு போகணும்’ தன் ஆசையை சொன்னாள் தாரா.
‘நீங்க நல்ல லுக்ல இருக்கீங்க. கொஞ்சம் மேக்கப் போட்டா இன்னும் நல்லா இருப்பீங்க. உங்க Name Change பண்ணனும். மத்தபடி I am sure, you will shine in this career’ என்றான்.
‘தாரா’ என முதலில் பெயர்மாற்றம் நடந்தது. போட்டிருந்த கண்ணாடி கான்டெக்ட் லென்ஸ் ஆனது.
மேக்கப், ட்ரெஸ் எடுக்க ஆசிஃப் கொஞ்சம் பணம் கொடுத்தான்.
சில மாடல் ஏஜென்சிகளுக்கும், Ad ஏஜென்சிகளுக்கும் அழைத்துப்போய் தாராவை அறிமுகத்தினான். சில ஃபேஷன் ஷோக்களில் தாரா பின் வரிசையில் அமர்ந்து பார்த்தாள். இசையமைப்பாளர்களின் கச்சேரிகளில் Audience சிரிக்கும் நேரத்தில் கேமராமேன்கள் தாராவின் சிரிப்பை காட்டினர்.
ஃபேஷன் ஷோக்களில் வாய்ப்பு கிடைத்தால் ஒரே நாளில் பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை சம்பாதிக்கலாம் என ஆசிஃப் சொல்லியிருந்தான்.
இப்படி ஒரு முறை பெங்களூர் அழைத்துக்கொண்டு போன போது தாராவிற்கும் தனக்கும் ஒரே அறையை புக் செய்தான் ஆசிஃப். மாலை முதல் தண்ணி அடிக்க ஆரம்பித்தவன் அவளையும் குடிக்க வைத்து அன்றிரவு அவளை கெடுத்து விட்டான்.
அடுத்த நாள் சுயநினைவு திரும்பிய தாரா வெகுநேரம் அழுதாள். தன் வாழ்க்கையை சீரழித்துவிட்டான் எனக்கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.
ஆசிஃப் மேசையில் இருந்த பிரட் சேன்ட்விச்சை எடுத்து சாப்பிட்டு க்கோண்டே சொன்னான்..
‘இதெல்லாம் இந்த இன்டஸ்ட்ரீல சகஜம். நீ மட்டும் ஓத்துழைச்சா கோடி கோடியா சம்பாதிக்கலாம்’
‘அதுக்கு வேற ஆளப்பாரு’..என முகத்திலேயே துப்பினாள்.
விருட்டென்று கிளம்பி ரூமுக்கு வெளியே போய்விட்டாள். தன் பொருட்களை பையில் போட்டுக் கொண்டு சென்னைக்கும் கிளம்பி விட்டாள்.
ஆசிஃப் ரொம்ப கேசுவலாக பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியும் திரும்ப வருவா என்று மனதுக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
ஒரு மாதத்தில் எந்த வேலையும் கிடைக்காததால் ஆசிஃபிடமே வந்தாள் தாரா.
ஆசிஃப், இளங்கோவன் மற்றும் ரிச்சர்ட் இருவரிடமும் தாராவை அழைத்துப் போனான். இளங்கோவன் ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.
ரிச்சர்ட் ஒரு Ad ஏஜென்சி நடத்தி வந்தான். இருவரும் தாராவிற்கு விளம்பரங்களில் நடிக்கவும், படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வாங்கி த் தருவதாக வாக்களித்தனர்.
இளங்கோவன் ஒரு சனிக்கிழமை தன் நீலாங்கரை பண்ணை வீட்டிற்கு வரச் சொன்னார்.
“ஆசிஃப், இளங்கோவன் சார் அவருடைய guest house க்கு கூப்டிருக்கார். நீயும் கூட வர்றீயா?”
‘தைரியமாக போ தாரா. பயப்படாம போ. அவர் சொன்னபடி கேளு. அவருக்கு நிறைய ப்ரொடியூசர்ஸ், விஐபிஸ், அரசியல்வாதிங்கன்னு நிறைய பேர் தெரியும்.’
‘ஆனா…’
‘அவர் நினைச்சா நயன்தாரா ரேஞ்சுக்கு நீ எங்கேயோ போயிடுவ.. பயப்படாம போ.’
உற்சாகப்படுத்தினான் ஆசிஃப். ஏற்கனவே இளங்கோவன் இது பற்றி ஆசிஃப்பிடம் பேசியிருந்தார்.
நீலாங்கரை பண்ணை வீடு.
தாரா செல்லும் போதே சரக்கு வாசனை ஹாலில் தெரிந்தது. இளங்கோவன் கையில் கோப்பையுடனே வந்து தாராவை கட்டியணைக்க முயன்றார்.
‘சார்..என்ன பண்றீங்க?’
‘என்னம்மா..ஆசிஃப் ஏதும் சொல்லலையா?’ என்றார்.
நாள் முழுவதும் தாரா அவருடன் ஒத்துழைக்க வேண்டியிருந்தது. ₹50, 000 ரூபாய் கொடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து சில நேரம் அழுதாள். ஆசிஃபை போன் செய்து திட்டுவதா, இல்லை நடந்ததை சொல்லி அழுவதா, இல்லை பட வாய்ப்புகள் தரச்சொல்லி இளங்கோவன் சாருக்கு பிரஷர் கொடுக்க சொல்வதா என யோசிக்க ஆரம்பித்தாள்.
அன்று முதல் தாரா எதற்கும் துணிந்தவளானாள்.
“பணம் மட்டுமே இந்த உலகில் பிரதானம், கற்பாவது, மண்ணாங்கட்டி யாவது..என பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டாள்.
ஆசிஃபும், ரிச்சர்டும் ..தாரா வலிய வந்து வாய்ப்புகள் கேட்பதை பயன்படுத்திக் கொண்டார்கள். ரிச்சர்ட் கோவா, பெங்களூரு, மும்பை, நொய்டா என தாராவை அழைத்துக் கொண்டு போய் சீரழித்தான்.
பல பெரிய புள்ளிகளுக்கு வார இறுதியில் தாரா தான் என்டர்டெயின்மென்டாகி போனாள். பல நேரம் தனியாக ஹோட்டல் ரூம்களில் அழுதாள்.
தான் படங்களிலும், விளம்பரங்களிலும் நடிக்காமல் ஹை கிளாஸ் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என உணர்ந்தாள். ஆனால் மீள முடியாத தொலைவுக்கு இந்த தொழிலில் சென்று விட்டதாக தோன்றியது.
எட்டு வருடங்கள் ஓடியது. இப்போது வயது 26.
ரிச்சர்ட் மூலம் போன வருடம் பிரபல தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருந்தாள். அந்த ஷோவில் பங்கேற்ற பெண்கள் முதல் நாளிலிருந்தே இவளை ஒதுக்கி விட்டனர். இந்த ரியாலிட்டி ஷோ மூலம் கொஞ்சம் பாப்புலரிட்டி கிடைத்தது. தாரா என்றால் பிரபல மாடல் அழகி என் மக்கள் மனதில் பதிவாகியிருந்தது.
பலர் சகட்டு மேனிக்கு சோசியல் மீடியாக்களில் இவளைப் பற்றி எழுதியும் வந்தனர்.
இளங்கோவனுடன் ரிசார்டில் தங்கியிருந்த போது எடுத்த படங்கள் ஃபேஸ்புக், டிவிட்டரில் வெளி வந்தன.
தன் முழுப்பெயரும் களங்கப்பட்டு விட்டதாக உணர்ந்தாள் தாரா.
ஆசிஃப் மூலமாக படங்கள் கசிந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு அவனிடம் போனில் சண்டை போட்டாள்.
‘உனக்கென்ன பெரிய ஹைடெக் மாடல்னு நினைப்பா? என்கிட்ட வேலை கேட்டு வந்ததெல்லாம் மறந்துட்டியா?’
‘என் போட்டோஸ்… இளங்கோவனோட இருந்ததெல்லாம் உங்கிட்ட தான் இருந்துச்சு. உனக்கு தெரியாம போட்டோஸ் வெளிய போக வாய்ப்பேயில்லை…உண்மைய சொல்லு..எவ்ளோக்கு வித்த? ‘ சண்டை போட்டாள் தாரா.
‘எனக்கு தெரியாது. ரிச்சர்ட் தான் உன் போட்டோவை நெட்ல விட்டிருக்கணும், அவன்கிட்ட கேளு.’ பொய் சொன்னான் ஆசிஃப்.
இளங்கோவன் வெளிவந்த படங்கள் தன் படங்களே இல்லை என பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். தாரா யார் என்றே தெரியாது என்றும், ரியாலிட்டி ஷோக்களை எல்லாம் பார்ப்பதில்லை என்றும் மீடியாக்களுக்கு சத்தியம் செய்தார்.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
ஒரு பிரபல YouTube Channel நிருபர்கள் ஆசிஃபை தொடர்பு கொண்டனர். தாராவை இழிவுபடுத்தி பேச வேண்டும், Sensational வீடியோவாக வீட்டிலிருக்கும் அனைவரும் மீண்டும் மீண்டும் பார்த்து ஷேர் செய்யும் வீடியோ வாக அது இருக்க வேண்டும் என பேட்டி எடுத்தனர்.
தாரா கடந்த ஏழு வருடங்களில் மாடல் என்ற போர்வையில் பல விஐபிக்களுக்கு ஒத்துழைத்ததை, மாடல் கோஆர்டினேட்டர் என்ற போர்வையில் கமிஷன் பெற்றதை ஆசிஃப் Youtube Channel க்கு 35 நிமிடங்கள் புட்டு புட்டு வைத்திருந்தான்.
ஆசிஃபிற்கு போன் செய்து சண்டையிட்டாள். நீ தான் விஐபிகளுடன் சேர்ந்து என்னை கழட்டி விட்டாய் என ஆசிஃப் பழி போட்டான்.
அடுத்த நாள் அந்த YouTube Channel நிருபர்கள் தாராவை தொடர்பு கொண்டு தாராவின் பதிலைக் கேட்டனர்.
ஆசிஃப் தன்னை ஏமாற்றி பணம் பிடுங்கி விட்டான். வேறு யாரோ அவனை ஏமாற்றியதற்கு தன்னை பழிவாங்குகிறான். என்னை களங்கப்படுத்திவிட்டான் என தாரா YouTube Channel களில் கர்ஜித்தாள். இளங்கோவனைப் பற்றிய கேள்விகளும் வந்ததால் அவரையும் YouTube இல் திட்டித் தீர்த்தாள் தாரா.
ஆசிஃப் ரிச்சர்டையும் சில YouTube Channel களுக்கு அறிமுகப்படுத்தி அவனையும் பல கதைகளை சொல்ல வைத்தான். ரிச்சர்டும் கோவாவில் நடந்தது, பூனேவில் நடந்நது என தாராவை ஒரு கீழ்த்தரமான வேசியாக சித்தரித்தான்.
இளங்கோவன் தாராவைத் தனக்கு தெரியவே தெரியாது என்றும், இந்த படங்கள் நெட்டில் வெளியானதிலிருந்து தன் மனைவி தன்னிடம் பேசுவதில்லை என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். இளங்கோவன் ஆதரவாளர்கள் தாராவை கொன்று விடுவதாக போனில் மிரட்டினர்.
மக்களுக்கும் YouTube Channel களுக்கும் கொண்டாட்டமாக முதல் lockdown 1.0 கழிந்தது.
தாரா காய்கறிகள் வாங்க சூப்பர் Market சென்றாலும் அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு சிரித்தனர். முன்னர் போனபின் பின்னர் வேகமாக சிரித்தனர்.
தாரா மிகவும் அவமானப்பட்டதாய் உணர்ந்தாள். ஆசிஃப், இளங்கோவன், ரிச்சர்ட் மூவரையும் தீர்த்து கட்ட முடிவு செய்தாள்.
ஒரு முறை சென்னையில் சண்முகம் என்ற ஒரு லாரி டிரைவர் அறிமுகமாகியிருந்தான். அவனைக் கொண்டு ஆசிஃபை தீர்த்துக்கட்ட வேண்டும் எனப்போன் செய்தாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் டூவீலரில் வந்த ஆசிஃபை சண்முகம் சரியாக இடித்தான். டூவிலருடன் பறந்து போய் விழுந்த ஆசிஃப் சம்பவ இடத்திலேயே பலியானான்.
ரிச்சர்ட் வீட்டு வேலைக்காரிக்கு ₹25,000 கொடுத்து ஒரு திரவத்தை ரிச்சர்ட் குடிக்கும் விஸ்கியில் கலக்கச்சொன்னாள். ரிச்சர்டும் அடுத்த நாளே இறந்தான்.
இளங்கோவன் இப்போது தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளாததால் இளங்கோவனை விட்டு விடலாம் என நினைத்தாள்.
ஆனால் சோசியல் மீடியாக்களில் தன் பெயர் கெட்டுப்போனதற்கு இளங்கோவனின் அடியாட்களே முக்கிய காரணம்.
இன்று தன்னை சூப்பர் மார்க்கெட் களிலும், பழமுதிர்ச்சோலையிலும், ஹோட்டல்களிலும் பார்த்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரிக்கிறார்கள், ஏளனமாகப் பார்க்கிறார்கள், சிலர் தன்னைப் பார்த்து விட்டு நண்பர்களை பார்த்து விட்டு
‘எவ்ளோ ரேட்? கோவா போலாமா? பூனே போகலாமா?’ எனக்கேட்டு சிரிக்கிறார்கள்.
இதற்கெல்லாம் இளங்கோவன் மற்றும் அவருடைய ஆட்கள் தான் காரணம் என நினைக்கத் தொடங்கினாள்.
தாராவிற்கு தொண்டை அரிக்க ஆரம்பித்தது, ஜுரம் அடிக்க ஆரம்பித்தது.
இளங்கோவன் ஊட்டியில் இருக்கும் தன் ஹோட்டலுக்கு தனியாக சென்றிருப்பதாக இளங்கோவன் வீட்டில் வேலை செய்தவர்கள் மூலம் தகவல் கிடைத்தது. இ-பாஸ் எடுக்க முயற்சித்தாள். கிடைக்கவில்லை.
கார் எடுத்துக் கொண்டு GPS போட்டுக்கொண்டு ஊட்டிக்கே வண்டியை விட்டாள்.
மலைகளில் தன்னால் வண்டி ஓட்ட முடியாது என உணர்ந்து அங்கிருக்கும் டிரைவர் உதவியோடு இளங்கோவன் தங்கியிருந்த ஹோட்டலிலேயே ரூம் போட்டாள்.
அந்த ஹோட்டலே இளங்கோவனுக்கு சொந்தமானது தான். காலை உணவுக்கு எப்படியும் ரெஸ்டாரன்ட், லாபி தங்கியிருப்பவர்கள் வந்தாக வேண்டும். அப்போது இளங்கோவனை ஒரு வழி செய்யலாம் என்று நினைத்திருந்தாள்.
கொரோனா காலத்தில் ஹோட்டலில் யாரும் பெரிதாக இல்லை. 12 மணி நேரம் வண்டியில் வந்த அசதியில் ரூம் செக் இன் செய்து விட்டு பெட்டில் சாய்ந்தாள்.
மறுநாள் காலையில் கடும் ஜுரம், மூச்சு விட சிரமப்பட்டாள். கொரோனாவாக இருக்குமோ என பயந்தாள். இளங்கோவன் பார்வைக்கு படாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ய விரும்பினாள்.
ரிசப்ஷனில் அழைத்து பேசினாள்.
‘சொல்லுங்க மேடம்’
‘கொஞ்சம் ஜூரமா இருக்கு, இங்கே டாக்டர்ஸ் availability இருக்கா?’
’11 மணிக்கு பக்கத்துல கிளினிக்க்கு வருவாங்க மேடம். கொரோனா மாதிரி ஃபில் பண்றீங்களா மேடம்?’
‘ இல்ல. சரியா தெரியல’
‘ரூம்லேர்ந்தே டெஸ்ட் பண்ணிக்கலாம் மேடம். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் health care representative வந்தவுடனே ரூமுக்கு அனுப்பறேன்’
‘ஓகே’
‘மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி, பொங்கல், வடை இருக்கு. ரூமுக்கு அனுப்பட்டுமா மேடம்?’
‘ஆ..ன்..ஓகே. 3 இட்லி, 1 பொங்கல்’
‘ஓகே மேடம்.’
கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. நாளை முடிவு தெரியும், அது வரை உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்கள்.
அடுத்த நாள் கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்தது. நான் செத்தாலும் பரவாயில்லை, அதற்கு முன் இளங்கோவன் சாக வேண்டும் என முடிவெடுத்தாள். இளங்கோவனுக்கு நமக்கு வந்திருக்கும் கொரோனாவை பரப்பினாலே போதும், மூச்சு திணறலில் இறந்து விடுவான் என நம்பினாள். அடுத்த நாள் அதற்கான திட்டம் நீட்டினாள்.
ஆசிஃப், ரிச்சர்ட் கொலைகளை போலிஸ் துப்பு துலக்கியது. ஆசிஃபை இடித்த லாரி டிரைவர் சண்முகம் மும்பையில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டான்.
இரண்டு நாளாக போலீஸ் அடித்ததில் முகமெல்லாம் வீங்கி போய் இருந்தது. தாராவிற்காக கொலை செய்தேன் எனவும் தாரா பழி தீர்ப்பதற்காக ஆசிஃபை கொல்ல சொன்னதையும் போலீஸுக்கு தெரிவித்தான்.
போலீஸ் தாராவின் வளசரவாக்கம் வீட்டிற்கு வந்து போயிருந்தது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து, அவள் வரும் போது உடனே தகவல் கொடுக்க வேண்டும் எனச்சொல்லி இருந்தனர்.
அடுத்த நாள்.
சுறுசுறுப்பாக காலையிலேயே எழுந்து தயாரானாள். நேற்று சாப்பிட்ட paracetamol, மஞ்சள் பால், கொரோனாவிற்கு எதிராக வேலை செய்தது. தாரா தான் வைத்திருந்த Gown ஒன்றை அணிந்து மேக்கப் போட்டு தயாரானாள்.
இளங்கோவனை கொஞ்சம் மயக்கி இன்று அவனுடன் ஒரே அறையில் அவனை கிடத்தி அந்த மயக்கத்திலேயே அவனுக்கு கொரோனாவை பரப்பி விட்டுவிட்டால் போதும். மற்றவை கொரோனா பார்த்துக் கொள்ளும். 55 வயதை நெருங்கும் இவனை கொரோனா நிச்சயமாக கொன்று விடும். இவனை அதுவரை மயக்கி வைத்திருக்க வேண்டும் என திட்டம் போட்டாள்.
தூண்டிலில் சிக்கிய மீன் போல் லாபியில் இவன் வருவான் என்றே அமர்ந்திருந்த தாராவை இளங்கோவன் பார்த்தான்.
‘இங்கே எங்கே வந்தே?’
தன் மீது கோபம் குறையவில்லை என்பதையறிந்து அழ ஆரம்பித்தாள்.
‘இந்த ஆசிஃப் என்னைப் பத்தி என்னவெல்லாம் பேட்டி கொடுத்திருக்கான், தெரியுமா?
பொது இடத்தில் ரிசப்ஷனிடுகளுக்கு முன்னால் இவள் அழுவதை நிறுத்த இவளை சமாதானப்படுத்தி ரூமிற்கு அழைத்துச் சென்றான். ஆசிஃப் இறந்ததை இளங்கோவன் அறிந்திருக்கவில்லை. ரிச்சர்ட் பற்றியும் அவனுக்கு தெரியாது.
ஆசிஃப்பின் YouTube பேச்சுக்களால் நொந்து போன தாராவை சமாதானப்படுத்துவது போல் நடித்து இந்த வாரம் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என கணக்கு போட்டார் இளங்கோவன்.
அதே போல் இளங்கோவனுடன் சந்தோஷமாக இருப்பது போல் நடித்து கொரோனாவை பரப்ப திட்டம் தீட்டினாள் தாரா.
சில மணி நேரங்களில் லஞ்ச் முடித்து தாராவை லைட்டாக தொட்டார் இளங்கோவன். சிணுங்குவது போல் நடித்தவள் சில நேரங்களிலேயே முழுவதுமாக தன்னைக் கொடுத்தாள்.
இரண்டு நாட்கள் ஒரே அறையில் பல முறை தாராவை அனுபவித்தார் இளங்கோவன். வேண்டுமென்றே உடலுறவின் போது அவனை ஏத்தி விட்டு B.P நன்கு ஏறுமளவிற்கு செய்திருந்தாள். உடல் சுகத்தில் தன்னிலை மறந்தவனாய் இரண்டு நாட்கள் இன்பமாக இருந்தார் இளங்கோவன்
மூன்றாம் நாள் தொண்டை அரிப்பும், லேசான ஜுரமும் இளங்கோவனுக்கு தெரிந்தது.
முகமலர்ச்சியை கட்டுப்படுத்திய தாரா…மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகி விடும்…லைட்டான ஜூரமாக இருக்கும் என கழண்டுக் கொள்ள பார்த்தாள்.
தன்னுடைய ரூமிற்கு சென்று தூங்கி விட்டு வருவதாக போனாள். அசந்து தூங்கியவள் மாலையில் தான் எழுந்தாள். இளங்கோவன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.
தன் வாழ்க்கையை சீரழித்த மூன்றாம் ஆளையும் பழி தீர்த்துக் கொண்டதாக ரூம் செக் அவுட் செய்து சென்னைக்கு புறப்பட்டாள்.
ஊட்டியிலிருந்து இயக்கத்தில் தானே காரை ஓட்டினாள். வளசரவாக்கம் வர 12 மணி நேரம் ஆகியது.
பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் பார்த்த பார்வையிலேயே ஒரு திகிலும், சந்தேகமும் இருந்தது. போலீஸுக்கு தகவல் தெரிவிப்பார்கள் என யூகித்துக் கொண்டாள்.
2 மணி நேரத்தில் போலீஸ் வந்தது. தாராவின் வீட்டை பதுங்கியபடியே நெருங்கினர்.
திறந்திருந்த கதவை முழுமையாக திறந்து உள்ளே பார்க்க…
தாரா அசைவில்லாமல் தலை தொங்க ஹாலில் இறந்து கிடந்தாள்.