முதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்

முதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்

பாபு தாம்பரம் ரெயில் நிலையத்தில் படி ஏறிக்கொண்டிருந்தான்.

இன்று அவனுடைய பிறந்த நாள். வெள்ளை நிற டீஷர்ட் – ஜீன்ஸ் அணிந்திருந்தான். Treat வைப்பதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்க்கு சென்று கொண்டிருந்தான்.

கிருஷ்ணாவிற்கு போன் செய்ய நினைத்தான். கூட்ட நெரிசலில் அது சாத்தியமில்லை. ட்ரெயினில் சீக்கிரம் போய் அமர்ந்து கொள்ள வேகமாக இறங்கினான்.

காலையிலேயே போனில் பிறந்த நாள் வாழ்த்துகளை சொன்னான் கிருஷ்ணா. இந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள பிஸ்ட்ரோ ரெஸ்டாரன்டிற்கு ஏற்கனவே ஒரு முறை அலுவலக நண்பர்களுடன் சாப்பிட வந்ததால் அதை இந்த பிறந்த நாள் ட்ரீட்டிற்கு பரிந்துரை செய்திருந்தது பாபு தான்.

மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்

ட்ரெயினில் ஒரு வழியாக ஏறி அமர்ந்து போன் செய்தான் பாபு.

“ஹலோ, ரெடி ஆகிட்டயா? “

“இப்ப தான்டா குளிச்சு முடிச்சேன். நுங்கம்பாக்கத்தில இருக்கிற ரெஸ்டாரன்ட் தான? நான் பதினைஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன். கிளம்பிட்டியா?” என்றான் கிருஷ்ணா.

“கிளம்பிட்டியா வா? ட்ரெயின்ல இருக்கேன். முக்கால் மணிநேரத்துல ரெஸ்டாரண்ட்ல‌ இருப்பேன். சீக்கிரமா கிளம்பி வா”.

“ஓகே. நீ கிண்டி தாண்டினவுடனே வாட்சஸப்ல message பண்ணு. நான் உடனே கிளம்பி வர்றேன்”.

“கணேஷ் வர்றானா?” ஆர்வமாக கேட்டான் பாபு.

“அவன் போன் ரிங் ஆகிட்டே இருக்கு. எடுக்கல”.

“ஓகே. ட்ரெயின் கிண்டி வந்தவுடனே மெசேஜ் பண்றேன்”

போன் கட் செய்தான் பாபு.

மணி 12:30 pm. அந்த பிஸ்ட்ரோ ரெஸ்டாரண்ட் பளிச்சென்று இருந்தது. பாபு சரியான நேரத்திற்கு வந்துவிட்டான்.

மறுபடியும் கிருஷ்ணா விற்கு கால் அடித்தான்.

“எங்கிருக்க?”

“வந்துட்டேருக்கேன்.. கோடம்பாக்கம் ஹைரோடு சிக்னல்ல இருக்கேன். ரீச் ஆகிட்டயா?”

“ம்ம்”

“தோ வந்துடறேன். வெயிட் பண்ணு”.

போனை கட் செய்துவிட்டு காரை வேகமாக இயக்கினான் கிருஷ்ணா.

கிருஷ்ணா காரை பார்க் செய்து விட்டு இறங்கினான். கறுப்பு நிற டீஷர்ட் -ஜீன்ஸ் அணிந்திருந்தான். ரெஸ்டாரண்டுக்குள் பாபுவை கண்டுபிடித்து அவனுடைய டேபிளுக்கருகே வந்து சேர்ந்தான்.

கிருஷ்ணாவை பார்த்த பாபு…
“எவ்ளோ நேரம் டா? என்றான்.

“சிக்னல்ல மாட்டிகிட்டேன். ஆர்டர் பண்ணிட்டயா?” கிருஷ்ணா கேட்டான்.

“இல்லடா. மெனு பார்த்திட்டுருந்தேன்”

“போன்ல இங்க எதோ ஸ்பெஷல்னு சொன்னியே?”

“ஆமா. Mexican Bada Nachos”

“ஸ்டார்டர்ஸ் ஏதாவது சொல்லலாமா?” என்றான் கிருஷ்ணா.

இருவரும் ஆர்டர் செய்தார்கள்.

“இந்த ஏரியால ட்ரான்ஸ் ஜென்டர்ஸ் அதிகமோ?” கிருஷ்ணா கேட்டான்.

“ஆமாடா. சூளைமேடுல நிறைய பேர் இருக்காங்க. ஏன் வர்ற வழியில பாத்தியா?” என்றான் பாபு.

“ம்..இதுங்களோட இம்சைடா…தனியா மட்டும் மாட்டினோம்…காலி..”

“ஏன் அப்படி சொல்ற?”

“பணத்தையெல்லாம் புடுங்கிடு…ங்க டா. இம்சை” நொந்து கொண்டான் கிருஷ்ணா.

“திருநங்கைகளும் நம்ம சமுதாயத்தோட ஒரு அங்கம் தாண்டா. நம்ம ஒரு மேம்பட்ட சொஸைட்டியா மாறணும்னா இவங்களையும் மதிக்கணும். நாம மட்டும் முன்னேறினா பத்தாது. அவர்களையும் முன்னேற்றணும்.”

“இதுங்கள பத்தி உனக்கு என்ன தெரியும்? வெளியூர் ட்ரேயின்ல கிடைசியா எப்ப வந்த? வேலூர், அரக்கோணத்திலேர்ந்து – சென்ட்ரல் ஸ்டேஷன் வரைக்கும் வர்றதுக்குள்ள இதுங்க நம்மள ஒரு வழி பண்ணிடும்.”

” என்ன சொல்ல வர்ற?”

“நம்மகிட்ட இருக்கிற பணத்தை குடுக்கிற வரைக்கும் போகவே போகாதுங்கடா. நம்மள அவமானப்படுத்தி பணத்தை புடுங்கிட்டு போகும்க.நீ அரக்கோணத்திலேர்ந்து – சென்ட்ரல் ஸ்டேஷன் ரூட்ல ட்ராவல் பண்ணியிருக்கியா?” என்றான் கிருஷ்ணா.

“எல்லா திருநங்கைகளும் அது போல இல்லடா. அரசாங்க வேலைல நிறைய பேர் இருக்காங்க. டாக்டர்ஸ், NGO நடத்தறவங்கனு நிறைய பேர் இருக்காங்க. சுயதொழில் செஞ்சு முன்னேறினவங்க நிறைய பேர் இருக்காங்க. சிலர் செய்யற தப்புக்காக எல்லாரையும் குறை சொல்லாத”

“ட்ரெயின்ல மட்டும் இல்ல பாபு. ரோட்ல கூட இதுங்க சும்மா இருக்கிறதில்ல. ஒவ்வொரு கடையா போய் காசு கேட்டு புடுங்கறது…ரோட்ல போற வர்றவன எல்லாம் உருவ கேலி பண்றது… ஒவ்வொருத்தனும் இதுங்கள பாத்தா தெறிச்சு ஓடறான்”.

“ஒழுங்கா கவர்மெண்ட் வேலை கொடுத்தா ஏன் பிச்சை எடுக்கிறாங்க?”
என்றான் பாபு.

“பிச்சை எடுக்கிறாங்களா? காசை கேட்கிறதில்ல. குடுக்கலைன்னா புடுங்கிகிறாங்க. இதுங்க காசு புடுங்கறது மட்டுமா செய்யுதுங்க…நிறைய சமூக விரோத செயல்கள் செங்சிட்டுருக்குங்க… இதுங்கலையெல்லாம் சப்போர்ட் பண்ணாதடா.” கிருஷ்ணாவின் குரல் உயர்ந்தது.

“திருநங்கைகளும் பெண்கள் தான். அவங்களுக்கு இந்த அரசாங்கம் பெண்களுக்கு கொடுக்கிற அத்தனை திட்டங்களையும் இவங்களுக்கும் கொடுக்கணும். சென்னை வெள்ளம், வரதா புயல் வந்துச்சுல்ல…அப்ப இந்த ஏரியால இருக்கிறவங்களுக்கு உதவி செஞ்சது திருநங்கைகள் தான்”

“நைட் பத்தரை மணிக்கு மேல ரோட்ல இதுங்கலாம் என்ன செய்யுது தெரியுமா? இதுங்கல்ல எத்தனை பேர் குடும்பத்தோட இருக்குதுங்க?”

“ஏன்…ஆம்பளை, பொம்பளை தப்பு பண்றதில்லையா…யாரோ ஒரு சிலர் பண்ற தப்பை ஒட்டுமொத்த சமூகத்தின் மேலயும் போடக்கூடாதுல்ல?”

கிருஷ்ணா, பாபு அந்த ரெஸ்டாரண்டின் ஸ்பெஷல் ஐஸ்கிரீமை சாப்பிடுவிட்டு பில் சொன்னார்கள். பாபு பில் பே பண்ணினான்.

“எப்படி போறே? என் கூட வா. உன் office லயே ட்ராப் பண்றேன்”. கிருஷ்ணா அழைத்தான்.

“இல்லடா. நான் Uber பிடிச்சு போயிடறேன். நீ கிளம்பு”

“உன்னை Railway ஸ்டேஷன் ல விட்டுடுறேன் வா” கிருஷ்ணா மறுபடியும் அழைக்க பாபு ஏறிக் கொண்டான்.

“எனக்கு ட்ரெயின்ல, ரோட்ல நடந்த எக்ஸ்பிரீயன்ஸ்
தான் மச்சி திருநங்கைகள வெறுக்க வெச்சிருக்கு”

“நல்லவங்க, கெட்டவங்கன்னு ஒன்று இல்லடா. சிலரோட வாழ்வாதாரம் அவங்கள திருட வைக்குது, பிச்சை எடுக்க வைக்குது, சூழ்நிலைக்காக பொய் சொல்ல வைக்குது. உன்னோட கருத்துலேர்ந்து எனக்கு மாற்றுக்கருத்து இருக்கு இந்த விஷயத்துல”

“நார்த் இண்டியால திருநங்கைகளுக்கு செம மரியாதை. எல்லா விசேஷங்களுக்கும் அவங்கள கூப்பிடறாங்க. இங்க தான் வேறவிதமான இமேஜ் அவங்களுக்கு இருக்கு”  தொடர்ந்தான் பாபு.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே காரை நிறுத்தினான் கிருஷ்ணா. காரிலிருந்து பாபு இறங்கி கொண்டான்.

“ஓகே மச்சி. வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு”

“ஓகேடா. பை”

ஸ்டேஷனை நோக்கி நடக்க தொடங்கினான்‌ பாபு.

ஸ்டேஷன் உள்ளிருந்து 3 திருநங்கைகள்‌ பாபுவை நோக்கி வந்தனர்.

“ஹீரோ…ஏதாவது குடு ஹீரோ…” என்றாள் ஒருத்தி…

அவர்களுக்கு 10 ரூபாய் கொடுக்கலாம் என பர்ஸை எடுத்தான் பாபு.

இருநூறு, ஐநூறு தாள்களாகவே இருந்தது.

“இருநூறு ரூபா குடுங்க. நாங்க சில்லறை தர்றோம்” என கேட்டாள் இன்னொருத்தி.

“அம்பது ரூபா எடுத்துக்கோங்க. மீதிய குடுங்க” என இருநூறு ரூபாய் தாளை கொடுத்தான் பாபு.

சில்லறை எடுப்பது போல் பாவனை செய்த திருநங்கை ஒருத்தி பணத்தை விருட்டென்று வாங்கினாள்.

மற்ற திருநங்கைகளின் முகம் மாறியது.

“ஏ…ஜாரே…ஜா…பெரிய ஹீரோன்னு நினைப்பு” என கத்த ஆரம்பித்தாள் ஒரு திருநங்கை.

பேரதிர்ச்சி பாபுவிற்கு. திருநங்கைகள் எதிர் திசையில் வேகமாக நடந்தார்கள்.

“சே.. கிருஷ்ணா சொன்னது சரி தான்…சனியனுங்க.. இருநூறு வா போச்சே..” என அதிர்ச்சியுடன்  நொந்து கொண்டான்.

கிருஷ்ணாவின் கார் கோடம்பாக்கம் சிக்னல் கட் எடுத்து சந்தில் நுழைந்த போது ஒரு டூவிலர் எதிரில் கட் செய்ய கிருஷ்ணா பிரேக் அடிக்க…அதையும் தாண்டி கார், டூவீலரின் பின்பக்கத்தில் மோதியது.

ஸ்டாண்ட் போட்டு விட்டு ஆக்ரோசமாக வந்தான் டூவிலர் காரன்.

“ஏன்யா..நான் தான் ரைட் இன்டிகேட்டர் போட்டு கட் பண்றேன்ல..இன்டிக்கேட்டர் பார்த்தும் வந்து மோதற? “

கிருஷ்ணாவிற்கு வியர்த்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் காருக்குள்ளேயே இருந்தான்.

எங்கிருந்தோ வந்த திருநங்கை டூவிலர் காரனை தடுத்தாள்.

“ஏன்யா…நானும் பாத்துட்டு தான் இருக்கேன்…அவரு மேல ஒரு தப்பும் இல்லை…நீ பாட்டுக்கு காருக்கு குறுக்கால வந்துட்டு…அவர்கிட்ட சண்டைக்கு போற. போய்யா…வண்டிய எடுத்துட்டு”

டூவீலர்க்காரன் வண்டியோடு நகர்ந்தான்.

“நீ போ சார். இந்த மாதிரி எவனாவது மாட்ட மாட்டானான்னு வம்புக்குன்னே அலையுவானுங்க…நீ போ சார்” கிருஷ்ணாவை பார்த்து சொன்ன அந்த திருநங்கை எதிர் திசை நோக்கி நடந்தாள்.

கிருஷ்ணா குற்ற உணர்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் அவளை எதிர்நோக்கினான். எச்சில் விழுங்கி‌ நிதானித்தவனாய் புன்முறுவலோடு அவள் நடப்பதை ரசிக்க ஆரம்பித்தான்.
Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.