ரஜினி என்னும் Fantasy World Hero
எது உண்மையான சினிமா எதை புறக்கணிக்க வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும் என்பதே தெரியாத நிலையில் தான் தமிழின் உச்ச நடிகர்கள் உள்ளனர். தமிழ் ரசிகர்களையும் நல்ல சினிமாவை உணராதவர்களாக தான் 30 வருடங்களாக உச்சநடிகர்கள் தமிழ்ப் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் இப்படி ரசனை தெரியாதவர்களாக மாறியிருப்பதற்கு முக்கிய காரணம் கடந்த 30 வருடங்களாக ரஜினி நடிக்கும் படங்கள். மற்ற மாநிலத்தினர், மற்ற நாட்டினர் ரஜினி படங்களின் காட்சிகளை முதன் முதலில் பார்த்த மாத்திரத்தில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
ரஜினி Super Human ஆக செய்யும் பல சேட்டைகள் மற்ற மாநிலத்தவர்களை, மற்ற தேசத்தினரை சிரிக்கவே வைக்கிறது. Super Man, He-Man, Extra Ordinary hero வாகவே திரையில் ரஜினியை 30 வருடமாக ஆக்ஷ்ன் காட்சிகளில் காட்டி வருகிறார்கள். “அண்ணாத்தே” படத்தில் தமிழர்களே ரஜினியின் ரசிகர்களே அவரைப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
“ராகவேந்திரர்” என்ற தனது 100வது படத்தை பெரிதும் எதிர்பார்த்த ரஜினி அது படுதோல்வியடைந்ததும் அதிர்ச்சியாகிறார். அது ரஜினியை யோசிக்க வைக்கிறது. அடுத்த படத்தை வெற்றியடைய வைக்க என்னென்ன வழிகள் உண்டு என யோசித்து இதற்கு முன் உருவான “முரட்டுக்காளை” என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
“முரட்டுக்காளை” தான் மக்கள் எதிர்பார்க்கும் படம், இது தான் வெற்றிப்படங்களின் ஃபார்முலா என்ற முடிவுக்கு ரஜினி வருகிறார். அடுத்தடுத்த படங்களையும், கதைகளையும் இதைப்போலவே அமைக்கிறார் ரஜினி.
அன்று ஆரம்பித்தது ரஜினியின் Fantasy சினிமா. Hero Introduction song, தேவையற்ற பஞ்ச் டயலாக்குகள், காமெடியன்களோடு இரட்டை அர்த்த வசனங்கள், ஹீரோயின்களோடு இரட்டை அர்த்த காமெடிகள், சிகரெட்டை தூக்கி வானத்தில் போட்டு விட்டு வில்லனாட்களை அடித்த பின்பு சிகரெட்டை திரும்ப வாயால் கல்விக் கொள்வது போன்ற அசட்டுத்தனங் களை செய்ய ஆரம்பிக்கிறார்.
இந்த மாதிரியான யதார்த்த வாழ்க்கைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத Fantasy காட்சிகளை “ஸ்டைலாக இருக்கிறது, மாஸாக இருக்கிறது” எனத் தானும் நம்பி மற்றவர்களும் “இது தான் மாஸ்” என புரிந்து கொள்ளுமாறு செய்கிறார்.
ரஜினிக்கு கதை சொல்லப் போகும் இயக்குநர்களும் இந்த மாதிரி போலியான பொய்யான சண்டைக்காட்சிகளையும், ஆக்க்ஷன் காட்சிகளையும் சொல்லி ரஜினியின் சம்மதத்தை வாங்கி ரஜினியே திரும்ப மீள் முடியாத வகையில் “செயற்கையான சினிமா” வை தமிழ் ரசிகர்களுக்கு திரும்பத்திரும்ப கொடுக்கிறார்கள்.
ரஜினியின் படங்களின் காட்சிகள் யதார்த்த வாழ்க்கைக்கு சற்றும் தொடர்பில்லாத காட்சிகளாகவும் , படங்களாகவும் வர ஆரம்பித்தது “முரட்டுக்காளை” க்கு பிறகு தான்.
90களில் வந்த படங்களை எளிதாக ஒரு Structure க்குள் கொண்டு வந்து விடலாம். ரஜினியின் சொத்துக்களை எதிரிகள் கைப்பற்றி இடைவேளையின் போது ரஜினியை நிர்க்கதியாய் ரோட்டில் நிறுத்தி இருப்பார்கள். கட்டிய வெள்ளை ஜிப்பா, வேட்டியோடு மழையில் ரஜினி சிரித்துக் கொண்டே நடந்து வருவார்.(படம்: முத்து, சிவாஜி, பாபா, அருணாச்சலம், லிங்கா). ஒரு சோகப் பாடல் ரஜினி மழையிலோ, புயலிலோ நடந்து வரும் போது இருக்கும்(படம்: முத்து, சிவாஜி, பாபா, அருணாச்சலம், லிங்கா). அவருக்கு காமெடியன்கள் ஆறுதல் சொல்லி சில ஐடியாக்கள் கூறுவார்கள்.
ரஜினி உத்வேகம் பெற்று வில்லனை பார்த்து “சொடுக்கு” போட்டு சபதமிடுவார். இடைவேளை.
பிறகு அவருக்கு தெரியாமலேயே சில சொத்துகள் அவர் பெயரில் இருப்பது அவருக்குத் தெரிய வரும். ஒரு பாடலில் முன்னேறி வில்லனுக்கு இணையான பணம், புகழை அடைவார்(படம்: அண்ணாமலை).
வில்லன் தாங்க முடியாமல் ரஜினியை அழிக்க ஆட்களை அனுப்புவார். ரஜினி அவர்களை ஸ்டைலான(போலியான, மலிவான) சண்டைக்காட்சிகள் மூலமாக அடித்து நொறுக்குவார்.
ஷூ லேசை loose செய்து விட்டால் ஷூ பறந்து போய் அடித்து விட்டு திரும்ப வரும்(பாபா).
வாலிபாலை ஒரு முறை அடித்தால் அது ஒரு நாலு முறை அடித்து விட்டு திரும்ப ரஜினி கைக்கு வரும்(பாபா).
ரஜினி தரமான படங்களில் நடித்திருப்பார் என நினைப்பதே பெரிய தவறு. தரங்கெட்ட சினிமா ரசிகர்களாய் தமிழர்கள் மாற முதல் காரணமே ரஜினி தான்.
சிவாஜி என்ற படத்தில் வரும் “ரதி..தீ..தீ” என்ற பாடல் ரஜினியின் படங்களின் போலி ஸ்டைலுக்கும், சற்றும் உணமையில்லாத திரை ரஜினிக்கும் சிறந்த உதாரணமாக சொல்லலாம்.
இந்தப்பாடலில்
1. ரஜினி ஸ்ரேயாவை காப்பாற்ற முகமூடி அணிந்த வில்லன் குழுவை எதிர்க்கிறார். ரஜினி டான்ஸ் ஆடிக்கொண்டே தன் துப்பாக்கியை மறைந்திருக்கும் ஒருவர் மீது விடுகிறார். அது பறந்து போய் மறைந்திருப்பரை சுட்டுவிட்டு திரும்ப ரஜினியின் கைகளுக்கே வருகிறது…ரஜினி துப்பாக்கியுடன் BGM டான்ஸை முடிக்கிறார்.
2. தரைத்தளத்தில் இல் சிறிய துப்பாக்கி மற்றும் ஸ்ரேயாவுடன் இருக்கும் ரஜினி …First Floor, Second Floor என நின்று கொண்டிருக்கும் எதிரிகளை கீழிருந்து சுடுகிறார். மாஸ்க் மற்றும் உயர் ரக துப்பாக்கி வைத்திருக்கும் இருபது பேர் “தொபீல்…தொபீல்” என முதல் தளத்திலிருந்தும் , இரண்டாம் தளத்திலிருந்தும் கீழே விழுந்து இறக்கிறார்கள்.
3. வில்லன் குரூப் ரஜினியை சுடவேயில்லையா? அவர்கள் சுடுவதெல்லாம் என்னாயிற்று என்றால் அதற்கு ஒரு காட்சி வருகிறது.
ரஜினி ஸ்ரேயாவுடன் ஆடிக் கொண்டிருக்கும் போது வில்லனாட்கள் சுடும் தோட்டா பாய்ந்து வர ரஜினி ஒரு மதுக்கோப்பையை எடுத்து காட்டுகிறார். தோட்டா அந்த மதுக் கோப்பையில் விழுகிறது. ரசிகர்களை பார்த்து கண்ணடிக்கிறார் ரஜினிகாந்த். நாம் தான் இதைப் பார்த்து விட்டு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்.
4. இந்த பாடலின் உச்சகட்டமாக வில்லனாட்கள் கூட்டம் கூட்டமாக ரஜினி ஸ்ரேயாவை நோக்கி வர ஒரு கனரக துப்பாக்கியை தோளில் சுமந்து ஒரு முறை Fire செய்கிறார். அந்த குண்டு போய் ஒரு காரில் அடித்து கார் பற்றிக் கொண்டு பிரண்டு பிரண்டு போய் வில்லனாட்கள் அத்தனை பேரையும் சாகடிக்கிறது.
5. லிங்கா படத்தில் வரும் “மோனா..மோனா” என்ற பாடலும் இதே போல் ஒரு 100 பேரை ரஜினி விதவிதமாக கொல்வது போல் வடிவமைக்கட்ட காட்சிகளாக இருக்கும்.
இப்படிப்பட்ட காட்சிகளையும் படங்களையும் இந்த இயக்குநர்கள் யோசிப்பதற்கு இதற்கு முன்னால் வந்த ரஜினியின் தரங்கெட்ட படங்களே காரணம். “ராகவேந்திரர்” என்ற படத்தை பெரிதும் எதிர்பார்த்த ரஜினி அது தோற்றதும் இப்படிபட்ட “மாஸ்”(Fantasy) படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். அப்படி வந்த அடுத்த படம் “முரட்டுக்காளை”. அதன் பிறகு அதே ஃபார்முலா வில் ஒரு Fantasy உலகம், Style என கூறிக் கொண்டு வந்த காட்சிகளும் படங்களுமே அதிகம். அத்தனை காட்சிகளும் நிஜத்தில் பொருந்தாதவை.
“உழைப்பாளி” என்ற படத்தில் விசு கொண்டு வரும் செக்கில் சைன் போட “தன் பேனாவை சுழட்டி விடுகிறேன், அது போய் சைன் போட்டு விட்டு திரும்ப என் பாக்கெட்டிலேயே வந்து அமர்வது போல் காட்சி வையுங்கள்” என ரஜினி இயக்குநர் பி.வாசு விடம் கூறியிருக்கிறார். அது அபத்தமாக இருக்கும் என பி.வாசு உணர்ந்து அந்த மாதிரியான காட்சி வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்.
ஸ்டைல் என்ற பெயரில் இப்படி முழுக்க முழுக்க ” செயற்கையான காட்சிகளே ரஜினியின் so called “மாஸ் சினிமா” வாக இருக்கிறது. இதையே சிறு வயதிலிருந்து பார்த்த தமிழர்கள் இதையே மாஸாக நினைக்கிறார்கள். புதிய ஹீரோக்களும், ரஜினியைப் போலவே Intro Song, 200 பேருடன் fight scene, போன்ற ஆக்ஷ்ன் காட்சிகளை வைக்க இயக்குநர்களை வர்புறுத்துகிறார்கள்.
ரஜினி இப்படியென்றால் ரஜினி படங்களை கடந்த 30 வருடங்களாக பார்ப்பவர்கள், ரஜினியின் ரசிகர்கள் அதற்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு “மேற்கு தொடர்ச்சி மலை”, “டுலெட்”, “ஜெய்பீம்”, “அறம்” , “காக்கா முட்டை”, “Court”, “Bhaag Milkha Bhaag”, “Lunch Box” “கூழாங்கல்”, “Paan Singh Tomar” போன்ற படங்கள் ரிலீஸாவதே தெரியவில்லை.
1995 க்கு பிறகு ஒவ்வொரு படங்கள் வரும் போதும் அரசியலுக்கு வருவதாக சமிக்ஞை செய்து, இரட்டை அர்த்த வசனங்களை படத்தில் வைத்து ரசிகர்களை தொண்டர்களாக மாற்றவும் முயர்ச்சித்தார். ரஜினி ரசிகர்களும் இவர் பின் சென்றால் கட்சி, பதவி என கணக்குப் போட்டு அவரை ஏற்றி விட்டனர். 25 வருடங்களாக ஒவ்வொரு பட ரிலீஸுக்கு முன்னரும் பேட்டிகள் கொடுத்து தன் இருப்பை காட்டிக் கொண்டு “System சரியில்லை” என உளறிக் கொண்டே இருந்தார்.
அரசியலுக்கு வருபவர்களுக்கு சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களும் தெரியாவிட்டாலும் தலைப்பு செய்திகளில் வருவதாவது தெரிந்திருக்க வேண்டும். ஏர்போர்ட்டில் “அந்த ஏழு பேர் விடுதலை?” என ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஜாமின் கோரியவர்களை பற்றி நிருபர்கள் கேட்க…”எந்த ஏழு பேர்?” என ரஜினி திருப்பிக் கேட்க ரஜினியை சோசியல் மீடியாவில் கலாய்த்து தள்ளினார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு படம் முன்னரும் வரும் பேட்டிகளும், “அரசியல் ” கருத்துகளும் ரஜினியின் திரைப்படம் ஓட ரஜினி அடிக்கும் ஸ்டண்டுகளாகவே பார்க்கப்பட்டன.
ரஜினி ரசிகர்கள் ரஜினி படம் ரிலீஸாவதற்கு முன்பு மண் சோறு சாப்பிடுவது, காவடி எடுப்பது, பால் குடம் சுமப்பது, போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்வது, ரஜினி பட டீ-ஷர்டுகளுடன் வலம் வருவது என செய்யும் அசட்டுத்தனங்களும் அதிகம்.
சில தயாரிப்பாளர்களும், தியேட்டர் ஓனர்களும் ரஜினி ரசிகர்களின் மனநிலையை சரியாக கணிப்பதாலேயே எதிர்பார்ப்பை வீணாக அதிகப்படுத்தி டிக்கெட் கட்டணத்தை ₹1500, ₹2000 என விற்க வைத்து ரசிகர்களை வாங்கவும் வைக்கின்றனர். முதல் வாரத்தில் அரசின் துணையோடு பல மடங்குகளாக ஏற்றப்பட்ட விலையில் டிக்கெட்டுகளை தியேட்டகர்களில் விற்பனை செய்கின்றனர்.
தமிழ் ரசிகர்களை இப்படி “அண்ணாத்தே” போன்ற செயற்கையாக பின்னப்பட்ட கதைகளை, காட்சிகளை காட்டிக் காட்டி ஏமாற்றியது இனி எடுபடாது என்று தோன்றினாலும் இதே ஃபார்முலாவுடைய படங்களைத் தான் ரஜினி இனியும் தேர்வு செய்வார். “ஜெய்பீம்” போன்ற படங்களை கொண்டாடாமல் முற்றிலும் செயற்கையான ரஜினி படங்களை கொண்டாடுவதை தமிழர்கள் நிறுத்த வேண்டும்.
சிறந்த கதையம்சம் கொண்ட, யதார்த்தமான , உண்மைக்கருகிலிருக்கும் படங்களே உலகளவில் கொண்டாடப்படுகின்றன.
ரஜினியின் ஸ்டைலை செயற்கையாக பயன்படுத்திய காட்சிகளே அதிகமாக அவரின் படத்தில் இருக்கின்றன. மற்றவர்களை விட ரஜினியின் தனித்தன்மை அதிகமாக இருந்தாலும் ஸ்டைல், மாஸ் ஹீரோ என்ற இமேஜில் “முரட்டுக்காளை” முதல் மாட்டிக் கொண்ட அதிலிருந்து மீள முயற்சிக்கவே இல்லை. அவரை பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஒவ்வொரு படத்திற்கு முன்னரும் அதிகப்படுத்தி அவர்களையும் பயன்படுத்திக் கொண்டனர்.
70 வயதான ரஜினி இனி நடிப்பதை நிறுத்திக் கொள்வதே சரியாக இருக்கும்.ரஜினியின் ஜிகினா படங்களை தமிழ்ச்சமூகம் புறக்கணித்தால் தான் இப்படிப்பட்ட படங்களை எடுப்பவர்கள் நிறுத்திக் கொள்வார்கள். கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா, தர்பார் என தொடர் தோல்விகளே சமீபத்திய ரஜினி படங்களின் நிலை.
Blue Sattai மாறன் போன்ற கடுமையான திரை விமர்சகர்கள் வந்த பிறகு தான் தேவையில்லாத பாடல்கள், கதாநாயனுடைய Intro Song, 200 பேரை கதாநாயகன் பறந்து, பறந்து அடிப்பது, 5 பாடல்கள், 3 Fight போன்ற ஃபார்முலாக்கள் படங்களில் இருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் செயற்கையான படங்களை அடையாளம் கண்டு ஒதுக்க தொடங்கியுள்ளனர்.
30 வருட தமிழ் ரசனை பற்றிய பதிவு இது. யார் வணிக ரீதியாக வெற்றி பெற்றார்கள், எது கலைப்படம், வணிகப்படம் எனப் பிரித்து காட்டும் பதிவு இல்லை. 2021 இல் ரஜினியின் ரசிகர்களே ரசிப்புத்தன்மையை நல்ல சினிமாக்களை பார்த்து உயர்த்திக் கொண்டு விட்டனர். ரஜினி தான் பழைய Cliche விசயங்களை செய்து கொண்டு தன் ரசிகர்களையும், தமிழ் ரசனையை குறைத்து மதிப்பிட்டுள்ளார். அதற்கு சாட்சியே “அண்ணாத்தே” எனும் மகா காவியம்.
தயாரிப்பாளர்கள் இனியும் ரஜினியின் செயற்கையான Fantasy படங்களுக்கு ஆதரவு தந்தால் “அண்ணாத்தே” போல இன்னும் இரண்டு, மூன்று குப்பை படங்கள் வரும். தமிழ் ரசிகர்களையே முகம் சுளிக்கவைத்து தமிழ்படங்களென்றாலே மற்றவர்கள் முகம் சுளிக்கும்படி கேலிப்பொருளாக மாற்றி விடுவார்கள்.
#தமிழ்சினிமா #தமிழர்கள் #சிவஷங்கர்ஜெகதீசன்
#TamilCinema #Tamizhargal #SivashankarJagadeesan
