“ரச” னை உள்ளவர்களுக்கு…

“ரச” னை உள்ளவர்களுக்கு…(நான் எழுதியது இல்லை)

ரசம் எத்தனை வகைப்படும்?

சிலர் அங்கிருந்து ஒன்பது வகை; நவரசம் என்று கிண்டலாக சொல்வது கேட்கிறது. நான் கேட்டது குடிக்கிற ரசம், நடிக்கிற ரசம் அல்ல. நமக்குத் தெரிந்த ரச வகைகளை வரிசைப்படுத்தினால் முதலில் இருப்பது தக்காளி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம், பருப்பு ரசம் அடுத்து வருவது இஞ்சி ரசம், எலுமிச்சை ரசம், மங்களூர் ரசம் அப்புறம் மைசூர் ரசம்…

சில நட்சத்திர ஓட்டல்களில் மிளகு ரசத்தை அழகான பீங்கான் கோப்பையில் தந்து மொளகு தண்ணி சூப்பு என்று பரிமாறுகிறார்கள். விலை அதிகமில்லை, ஜென்டில்மேன், வரிகள் போக வெறும் இருநூறு ரூபாய் தான். சிலர் சூப்பை ரசம் என்று தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறார்கள். ரொம்ப தப்பு. சூப்பு வேறு. ரசம் வேறு. சூப்பை ஒரு டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம். ரசத்தையும் குடிக்கலாம். ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்து ரசம் சாதமாக சாப்பிடலாம். ஆனால் சூப்பை அப்படிச் சாப்பிட முடியுமா? உவ்வேக்..

சுவாரஸ்யமான நிகழ்வுகளை ரசமான சம்பவம் என்று சொல்கிறார்கள். ரசானுபவம் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். யாரும் சாம்பார் அனுபவம் அல்லது தயிரானுபவம் என்று சொல்வதில்லை. இலக்கிய விற்பன்னர்கள் கம்பனின் கவிநயத்தை கம்பரசம் என்று சிலாகிக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு தோன்றிய சில ரசப் பெருமைகள். அவ்வளவுதான். என்னுடன் ரச வாதத்துக்கு வரவேண்டாம். ரசாபாசமாகி விடும். எனவே சமரசமாகப் போய் விடுவோம்.

சுருக்கமாக ‘ரச’னை உள்ளவர்கள் கண்டுபிடித்ததுதான் ரசம். ரசம் என்ற சொல் எப்படி வந்தது? சமஸ்கிரதத்தில் ரஸ் என்றால் சாறு என்று பொருள். தமிழ் வைஷ்ணவர்கள் ரசத்தை சாத்தமுது என்று அழகாக சொல்கிறார்கள். ரசத்துக்கு என்ன ஒரு இனிமையான தமிழ்ச்சொல்.

குழந்தையாய் இருக்கும்போது அம்மா ஊட்டிய ரசம் மம்மு இப்போதும் நினைவில் இருக்கிறது. ஆனால் தயிர் சாதம் சாப்பிட்ட ஞாபகம் வரவில்லை. காரணம் ரசத்தில் உள்ள நிறம், மணம், சுவை, தயிர் சாதத்தில் கிடையாது. சிலர் தயிர் சாதத்தை தத்தியோன்னம் என்றும் அழைக்கிறார்கள்., ஏன் என்று தெரியவில்லை. மந்தமாக இருப்பவர்களை தத்தி என்று ஏன் சொல்கிறார்கள். அதுவும் சத்தியமாகத் தெரியாது.

தென்னிந்தியா முழுக்க தங்கு தடையின்றி ஊடுருவிய ரசம் ஏன் வடக்கு பக்கம் செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம் சப்பாத்தியில் ரசத்தை ஊற்றினால் அமேசான் காடுகளில் உள்ள சதுப்பு நிலம் போல ஆகிவிடும். சாதத்தை தவிர வேறு எதுவும் ரசத்துடன் சேராது என்பது நிதர்சனம்.
ஏன் தயிர் வடை அளவுக்கு ரசவடை பிரபலமாகவில்லை. காரணம் தயிர் எதனுடனும் எளிதில் ஜெல் ஆகாது. அப்படியே அம்மாஞ்சியாக ‘தனியே தன்னந்தனியே, நான் காத்து காத்து நின்றேன்’ என்று உட்கார்ந்து கொண்டிருக்கும். ஆனால் ரசமோ ஊணுக்குள் நுழைந்து உயிருக்குள் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாகிவிடும். அதன் காரணமாக ரசம் ஊற்றிய வடை மனது இளகி சொதசொதவென்று ஆகி விடும்.

அப்புறம் இன்னொரு விஷயம். ரசமலாய் என்ற ஒரு இனிப்புக்கும் நம்ம ரசத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதை மண்டையில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அடிச்சக்கை என்ற வார்த்தை எப்படி வந்தது என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. பாராட்டும் விதமாக சொல்லும் இந்த வார்த்தையில் ரசத்தின் அடிசக்கையை பற்றிய தத்துவார்த்தமான விளக்கம் ஏதேனும் பொதிந்துள்ளதா தெரியவில்லை. ஏனென்றால் எல்லோரும் தெளிரசம் எடுத்த பின் கடைசியில் மிஞ்சுவது ஒதுக்கப்பட்டு விடும் அடிச்சக்கை தான்.
கொஞ்சம் தூக்கலாக சீரகமும் மிளகும் சேர்த்த ரசம் தான் தற்போதைய கபசுர குடிநீருக்கெல்லாம் கொள்ளுத் தாத்தா.

கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள மூன்று பிரபல மருத்துவமனைகளில் உணவுடன் தரப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நம்புங்கள், ஜீரகம், பூண்டு, மஞ்சள், மிளகு சேர்த்த ரசம் தான். மிகுந்த வரவேற்பு பெற்ற இந்த மருந்தை சப்ளை செய்தவர் நம்ம ஊர் அமெரிக்க அஞ்சப்பர் செஃப் அருண் ராஜ துரை.

இப்போதும் சுரமும் வயிற்றுக் கோளாறும் ஏற்பட்டால் மருத்துவர் மற்றும் பாட்டி சொல்வது “நைட்ல டையட்டுக்கு லைட்டா வெல் குக்குட் ரசம் ரைஸ் எடுத்துக்கோங்க.” (பீஸ் ஐநூறு ரூபாய்) “தாஙக்ஸ் டாக்டர்”

“கண்ணு, ராத்திரிக்கு குழைவா ரசம் சாதம் சாப்பிட்டு படுத்துக்கோப்பா.”
“சும்மா கிடந்து கத்தாத பாட்டி..”
ரசம் எப்போதும் நம் இலையில், தட்டில் சாதத்துக்கு சேர்த்துக்கொள்ள இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக பரிமாறப்படும் ஐட்டம் தான். இதைசாம்பார் போல அரக்கப்பரக்க சூடாக ஊற்றி பிசைந்து சாப்பிடக் கூடாது. சாதத்தை லேசாக விரவி முதலில் கொஞ்சமாக ஒரு கரண்டி ரசத்தை குவிந்த கையில் வாங்கி “‘மைக் டெஸ்டிங்’ என்று குடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் இன்னும் என்று சிறிது சிறிதாக சாதத்தில் சேர்க்க வேண்டும். சிமெண்ட் கலவை செய்யும் ஒரு கொத்தனார் நேர்த்தியுடன் அது ஒரு பதத்துக்கு வந்தவுடன் (தளதள என்று ததும்பி நிற்கும்) லேசாக சூடான ரசத்தை மீண்டும் ஒரு காட்டு காட்டிய பிறகு சாப்பிட வேண்டும்.
ரசம் நன்றாக இருந்துவிட்டால் பந்தியை விட்டு எழுந்து கொள்ளுமுன் கூச்சப்படாமல் ஒரு டம்ளரில் கேட்டு வாங்கிக் குடிக்க வேண்டும். (இல்லைன்னா, பின்னாடி வருத்தப்படுவீங்க) ருசிக்காக மட்டுமல்ல, ஜீரணத்துக்கும் இது உதவும். ரசப் பட்டியலில் தினம் தினம் டெல்டா, டெல்டா பிளஸ் போல புதிது புதிதாக சேர்க்கை உண்டாகி இப்போது இருநூறுக்கும் மேல் பட்டியலில் இருக்கிறது. பைனாப்பிள் ரசம், முருங்கைக்காய் ரசம், புதினா ரசம், முருங்கைக்கீரை ரசம் என்று. இதைத் தவிர ஏற்கனவே உள்ள பட்டியலில் வேப்பம்பூ ரசம் மற்றும் கொள்ளு ரசம் சேர்த்துக் கொள்ளவும். கொள்ளு ரசம் ஆந்திராவில் மிகப் பிரபலம். அங்கு இதை உலவச் சாறு என்பார்கள்.

நம் பாட்டிகள் காலத்தில் வத்தக்குழம்பை கல்சட்டியிலும் ரசத்தை ஈய சொம்பிலும் தான் செய்தார்கள். ஈய சொம்பில் செய்யும் ரசம் அவ்வளவு அபார ருசியாக இருக்குமாம். ஈயமும் புளியும் சேர்ந்து லேசாக கொதிக்கும்போது ஏற்படும் ஒரு சின்ன ரசாயன மாற்றம் தான் இந்த ருசிக்கு காரணம் என்று சொல்வார்கள். நாளடைவில் ஈயம் உடம்புக்கு மிக கெடுதி என்று பரவலாக பேசப்பட்டதால் ஈய சொம்பு வழக்கொழிந்தது.

ரசத்தை யார் கண்டுபிடித்தார்கள் என்ற சர்ச்சைக்கு இன்றளவில் சரியான பதில் இல்லை. சில ஆராய்ச்சிகள் மதுரையில் தான் பதினாறாம் நூற்றாண்டில் முதலில் ரசம் உருவானது என்கிறது. ஆனால் இன்றைக்கும் மங்களூர்காரர்களின் பந்தியில் ரசத்துக்கு தான் முதல் மரியாதை. அங்கு பந்தியில் சாதத்துக்கு முதலில் பரிமாறப்படுவது ரசம் தான். அதனால் ரசத்துக்கு புவிசார் குறியீடு தருவதாக இருந்தால் என் ஓட்டு அவர்களுக்குத்தான். ஆனால் மங்களூர் ரசத்தில் வெல்லம் சேர்ப்பதால் காரசாரம் குறைந்து ஒரு அசட்டுத் தித்திப்புடன் இருக்கும்.

முதல் முறையாக ஒரு மங்களூர் கல்யாணப் பந்தியில் இப்படி முதலிலேயே சாப்பாட்டுக்கு ரசம் ஊற்றிவிட, (பரிமாறுபவர் ஒருவர் வேறு என்னைப் பார்த்து ‘பேக்கா, பேக்கா’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார், நான் பேக்கு இல்ல என்று சொன்னதும் அவருக்கும் புரியவில்லை) அவ்வளவுதான் சாப்பாடு முடிந்தது என்று நினைத்து எழுந்துகொண்ட ஒரு அனுபவம் எனக்கு உண்டு. பேக்கா என்றால் கன்னடத்தில் வேணுமா என்று அப்புறம் தான் எனக்கு தெரிந்தது.
இன்றளவில் வெறும் ரசம் சாதம் மட்டும் அப்பளத்துடன் சாப்பிடும் ஏழை எளியவர்களுக்கு ரசம் ஒரு வரப்பிரசாதம் என்பதில் என்ன சந்தேகம். “வயிறு சரியில்லை. இன்னைக்கு எனக்கு சாதத்துக்கு வெறும் மிளகு ரசம் போதும். தொட்டுக்க ஏதாவது துவையல் பண்ணிடு” என்பது எல்லோரும் வீட்டில் அடிக்கடி சொல்லும் டயலாக் தான்.

ஒரு பந்தியில் நூறு வகை பதார்த்தங்கள் பரிமாறினாலும் நல்ல ருசியான ரசம் இல்லை என்றால் அது முழுமை அடையாது ரசம் நன்றாக இருந்துவிட்டால் ரசம் சூப்பர் என்ற குரல்களை பந்தியில் அங்கங்கே கேட்கலாம். ஒன்றும் வேண்டாம்.

சாப்பிட்டபின் கூச்சப்படாமல் தலைமை சமையல்காரரிடம் போய் ‘இன்றைக்கு ரசம் அருமை’ என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். அவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாவதைக் காணலாம்.

“ரச” னை உள்ளவர்களுக்கு…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.