வாசிப்பனுபவம் 3: நதியில் விளையாடி கொடியில் தலைசீவி – எஸ். ராஜகுமாரன்
முதலில் நூலின் ஆசிரியர், இயக்குநர் ராஜகுமாரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
ஆசிரியர்: எஸ். ராஜகுமாரன்
Category: கட்டுரைகள்
பக்கங்கள்: 160
விலை : ₹ 150
பதிப்பகம்: பாவைமதி வெளியீடு
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை போலே மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே”
கண்ணதாசனின் அற்புதமான வரிகளில் வரும் பாடலிலிருந்து தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.
தனது பால்ய பருவத்தில் நடந்த சம்பவங்கள் இடம், பெயர், அனுபவம் என வரையறுத்து மறக்காமல் அத்தனை பால்ய நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
பிறந்து வளர்ந்த தெரு பற்றிய சிந்தனைகள், அக்காவின் கோலங்கள் குறிப்பாக கலர் பொடி இல்லாத காலக்கட்டத்தில் வண்டக்கோலங்களுக்காக…நீல இங்க்கை கோலத்தில் ஊற்றி நீலப்பொடியாக்கியது, கரித்தூள் கருப்புக்கு, சமையல் மஞ்சள்..மஞ்சள் கலர் வண்ண பொடியாகிறது…என எழுதியிருந்தார். Neccesity is the mother of invention.
அக்காவை இழந்தது பற்றியும் குடும்பத்தினரோடு பொங்கல் வைத்து கொண்டாடிய விதம் பற்றிய எழுதிய விதம் அருமை.
சினிமா பார்க்க இளம் வயதில் உளுந்து, பாசிப்பயிறு மூட்டைகளிலிருந்து ஒரு துடிப்பை அளவுக்கு அள்ளி அதை மளிகைக் கடைக்காரரிடம் விற்று பணமாக்கி சினிமா பார்த்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். 👍🏻👏🏻💐
நீங்களும் இது மாதிரியான பால்ய அனுபவங்களை பெற்றிருக்கக்கூடும் என முடிக்கும் இடத்தில்…படித்துறைகள் பலவானாலும் ஓடும் நதியும் துணைக்கும் நீர்ப்பூக்களும் ஒன்று தானே…என முடிக்கிறார்…👍🏻💐👏🏻
தந்தை கவிஞர் வ.கோ. சண்முகம் அவர்களை பற்றி எழுதியதிலிருந்து அவருடைய மொழிப்பற்று, மொழியாளுமை தெரிகிறது. இவருடைய தந்தையின் கவிதைப் படைப்புகளை படிக்கும் ஆவல் அதிகரிக்கிறது.
“பொறிச்சகடலை” பாஸ்கர் என்பவரின் கதை அருமை. எல்லா ஊரிலும் தியேட்டரில் வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த அநியாயத்தை கேட்க ஒரு பாஸ்கர் இருக்கிறார்.
80களில் வளர்ந்த ஆசிரியர் இசைஞானி இளையராஜா அவர்களை பற்றி எழுதவில்லையென்றால் தான் ஆச்சர்யம். ரத்தத்தில் வெள்ளை அணு, சிவப்பணுக்களோடு இளையராஜாவின் இசை அணுவும் கலந்திருக்கிறது என்கிறார்.
மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன நிகழ்ச்சியை அட்டகாசமாக விவரித்திருக்கிறார். காமண்டி, காமதகனம், காமுட்டி கொளுத்துதல், மன்மதன் பண்டிகை என்றபெயரில் தமிழ்நாட்டில் நடக்கும் காமதகனம் மற்றும் அதை ஒட்டி நடத்தப்படும் “லாவணி” இசை பற்றிய விவரிப்பகள் அருமை.
தான் படித்ததில் ரசித்த வரிகளையும் ஆங்காங்கே கொடுத்திருந்தார்.. எனக்கு பிடித்த வரிகள் கீழே…
“எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது!
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்து விடும்!
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்!”
– கவியரசு கண்ணதாசன்
(நெஞ்சில் ஓர் ஆலயம்)
“இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை!
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!”
– வைரமுத்து
ஒவ்வொரு சம்பவங்களின் தொகுப்பும் அருமை. தனது பால்யப்பருவத்தை இந்த கட்டுரைகளின் மூலம் நம் கண்முன்னே நிறுத்துகிறார் ராஜகுமாரன்.
