சிறுகதை 20: பற்றாக்குறை – சிவஷங்கர் ஜெகதீசன்
01-May-2300
திருவள்ளூர் மாவட்டம். காலை 5 மணி.
படுக்கையிலிருந்த கெளதம் தண்ணீருக்காக தனது தொடுதிரையை எடுத்தான். இன்று எப்படியும் 20 லிட்டர் தண்ணீராவது எடுத்து விட வேண்டும் என ட்ரில்லிங் கருவிகளை எடுத்து வைத்துக் கொண்டான். கூடவே நிஷாவும் கிளம்பினாள். சென்னையின் முக்கிய இடங்களிலிருந்து திருவள்ளூருக்கு கௌதமின் தந்தை இடம் மாறி வந்து 20 வருடங்கள் ஆகின்றன. அதற்கு முக்கிய காரணம் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் போனதே.
35 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் தேடி திருவள்ளூர் அருகே இடம்பெயர்ந்திருந்தனர். வட தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இங்கே மட்டுமே சில அடி ஆழத்தில் இருந்தது.
தண்ணீர் தொடர்பான நோய்களால் 100 வருடங்கள் முன்பே பாதிப்புகளும், சண்டைகளும் தொடங்கி விட தண்ணீர் தொடர்பான நோய்களால் மக்கள் லட்சக்கணக்கில் இறக்க ஆரம்பித்தனர். பல லட்சங்களில் தண்ணீருக்காக செலவழிக்கவும் மக்கள் பழகியிருந்தனர்.
ஒரு காலத்தில் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் 95 சதவீதம் வற்றிப் போயிருந்தது. தண்ணீருக்கு தேவையான அடிப்படை ஆதாரங்கள் அனைத்திலும் முறைகேடாக கட்டிய வீடுகளும், அடுக்கு மாடி குடியிருப்பு களும் ஆக்கிரமித்திருந்தது. கௌதம் தனது ட்ரில்லிங் மிஷின் களை எடுத்து வைக்க நிஷாவும் தயாராகி கிளம்பினாள்.
இந்த வருடம் 5 லிட்டர் சுத்தமான தண்ணீர் மட்டுமே தினமும் வழங்கப்படும் என திருவள்ளூர் மாநகராட்சி அறிவித்திருந்தது.
மழை எனும் நீராதாரம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 10 நாட்கள் மக்களுக்கு கிடைத்தது. அது தூறல், சாரல் மழையாக இல்லாமல் தொடர்ந்து பேயும் அடைமழையாக இருந்தது. அந்த மழையில் அரசாங்கங்களும் மக்களும் சேமிக்கும் மழைநீர் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு உதவியாக இருந்தது.
அதன் பிறகு தண்ணீருக்காக பல இடங்களுக்கு சென்று ஆழ துளையிட்டு தண்ணீர் எடுப்பதும், சண்டைகளும், கூச்சல்களும், குழப்பங்களும், தண்ணீரில்லாமல் நாவரண்டு இறப்பவர்களும் அதிகமாயிருந்தார்கள்.
கெளதம்-நிஷா தண்ணீரைத் தேடிப் போய் 1 மணி நேர பயணத்தில் கௌதம் தொடுதிரையில் பார்த்த இடத்தை அடைந்தனர். காலை மணி என்பதால் யாரும் இன்னும் தங்கள் தொடுதிரையில் நிலத்தடி நீர் அளவுகளை பார்க்க ஆரம்பித்திருக்க மாட்டார்கள். இனி எழுந்த பிறகே ஒவ்வொரு வரும் இந்த இடத்தை நோக்கி வருவர். அதற்குள் முதலாவதாக கௌதம்- நிஷா வந்து சேர்ந்தனர்.
நிஷா ஏற்கனவே தனது தங்கை ஜோத்சனாவிற்கும் சொல்ல அவளும் தன் காரில் அந்த இடத்தை நோக்கி திரை உதவியுடன் வந்து கொண்டிருந்தாள்.
கௌதம் ட்ரில்லிங் மெஷின் கருவிகளை வைத்து தோண்ட ஆரம்பித்த இடத்திற்கு பக்கத்தில் ஏற்கனவே பள்ளங்கள் நிறைந்து காட்டியளித்தன. மேலும் கீழுமான சமனில்லாத மண்பாதையில் இந்த இடத்தை அடையவே கௌதம், நிஷா, ஜோத்சனா கஷ்டப்பட்டார்கள்.
‘இங்க தான?’ நிஷா கேட்டாள்.
‘ஆமா. இங்கே தான்’
‘நீ டீரில் பண்ண ஆரம்பி. யாராவது வர்றாங்களான்னு நான் பாக்குறேன்’ நிஷா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
கௌதம் பெரும் சத்தத்துடன் ட்ரில்லிங் மெஷினை ஆபரேட் செய்தான். 30 அடியில் ஈரப்பதம் தெரிய தண்ணீர் மேல் எழும்பியது.
ஏரிகளும், குட்டைகளும் இருந்த இடமென்பதால் இங்கே தண்ணீர் சிறிது நேர தோண்டலிலே கிடைத்து வந்தது. இங்கே தண்ணீர் கிடைப்பதை பலரும் ரகசியமாய் வைத்திருந்தனர்.
திருவள்ளூர் அருகே இந்த இடத்தில் தண்ணீர் குறைந்த ஆழத்தில் வருகிறது என்ற தகவல் இணையத்தில் சென்று விடக்கூடாது என ஏற்கனவே பதிவிட்ட செய்திகளை கௌதம் தேடித்தேடி அழித்தான்.
கௌதம் தன் தந்தையிடமிருந்து இணையத்தில் ஹேக் செய்வது தொடர்பான தொழில்நுட்பங்களை கற்றிருந்தான். கௌதம் தந்தை மற்றும் தாய் நீர் சேமிப்பு குறித்து கற்றுக் கொடுத்த பாடங்களே இன்று தனக்கு பேருதவியாக இருப்பதாக கௌதம் நினைத்தான்.
தண்ணீரைப் பார்த்ததும் அதை கேனில் நிரப்ப நிஷா காரை நோக்கி விரைந்தாள். நிஷா தொலைதூரம் சென்று கேன்களை எடுத்து வர மற்றொரு குடும்பத்தினர் அங்கே வருவதை அறிந்தாள்.
ரவி மற்றும் சஞ்சனா விரைந்து வந்து கொண்டிருந்தனர்.
‘சீக்கிரம். தேர் ஷுட் பி வாட்டர் அவைலபிள் ஓவர் தேர். வீ நீட் டு ஹரி அப்’ ஸ்வேதா ரவியை விரட்டினாள்.
ரவி மற்றும் கௌதம் முதல் பார்வையிலேயே முறைத்துக் கொண்டனர். போன வாரம் இதே போல் திருவள்ளூருக்கு தெற்கே நீர் இருப்பதை அறிந்து சென்ற கௌதமிற்கு முன்னரே ரவி வந்திருந்தான். இருவரும் தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் வந்த சண்டையில் ரவியை கௌதம் அடிதாது விட்டு ஓடியிருந்தான். ஆனால் இன்று வேறொரு நாள். தண்ணீர் முதலில் முக்கியம் என்று நினைத்த ரவி அமைதி காத்தான்.
ஒரு பெரிய கேரவன் தாங்கள் நிற்கும் இடத்தை தேடி வருவதை கௌதம், ரவி இருவரும் உணர்ந்தனர். கேரவேனில் ஃபில் வந்து கொண்டிருந்தான். தனது குளிர்பானங்கள் கம்பெனிக்காக ஃபில் 5000, 10000 லிட்டர் தண்ணீரை பெரிய பீப்பாய்களில் அடைத்து அதை வைத்து தயாரித்த குளிர்பானங்கள் பல கோடிகளை அவனது நிறுவனத்துக்கு தந்தது.
ஃபில் இந்த பகுதியில் தண்ணீர் எடுப்பதை அமைச்சர்கள், சட்டமன்றத் உறுப்பினர்கள், கலெக்டர் என பலர் எச்சரித்தும் ஃபில் மற்றும் அவனது கம்பெனியில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் கேட்பதாக இல்லை. ஃபில்லுடைய பாஸ் மைக் என்னும் மைக்கேல் பல புதிய ஆழ்துளை கருவிகளை ஃபில் மற்றும் ஊழியர்களுக்கு கொடுத்து இந்தப் பகுதியில் நீர் எடுக்க அனுப்பினான். ஃபில்லுடைய கேரவேன் எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் நின்றது.
ஃபில் அசையாமல் கௌதம் மற்றும் ரவியை பார்த்துக் கொண்டிருந்தான்.
கௌதம் மற்றும் ரவிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் அட்டூழியம், அவர்கள் நீரை அபகரிக்க செய்யும் நாடகங்கள் தெரிந்திருந்தன.
கௌளதம்- ரவி இருவரும் சமாதானமானார்கள். ரவி சைகையில் பேச ஆரம்பித்தான். ஃபில்லுக்கு ரவியின் முதுகு தான் தெரிகிறது, முகம் தெரியவில்லை என்பதை ரவி உணர்ந்து கொண்டான். இப்போதைக்கு ஆளுக்கு இரண்டு கேன்களை எடுத்துக் கொண்டு கிளப்புவோம் என முடிவு செய்தார்கள். ஃபில் இதை எதிர்பார்க்கவில்லை.
ஜோத்சனா இதில் கேரவேனை பார்த்து சிரித்து விட ஃபில்லுக்கு இவர்கள் ஏதோ நாடகமாடுகிறார்கள் எனப்புரிந்து விடுகிறது.
கேரவேனை விட்டு இறங்கிய ஃபில் கௌதமை தள்ளி விட்டு தண்ணீர் பீப்பாய்களை அபகரிக்க முயன்றான்.
கௌதம், ரவி இருவரும் சேர்ந்து ஃபில்லை தாக்க முயற்சிக்கிறார்கள். ரவி யை ஒரே அடியில் கீழே தள்ளிய ஃபில் கௌதம் நிஷாவை சரமாரியாக தாக்குகிறான். ரவி எழுந்து திருப்பியடிக்க ஃபில் கேரவேன் நோக்கி தடுமாறி வந்தான்.
ஃபில் தான் வைத்திருக்கும் ரைஃபில்லை எடுக்க ரவி பாய்ந்து வந்து ஃபில் கழுத்தை சுற்றி வளைத்து ஃபில் யாரையும் சுட்டு விடாமல் அவனை கீழே தள்ளினான்.
இருவரும் பள்ளமும் மேடுமான மணல் வெளியில் கட்டிப்புரண்டார்கள்.
ஃபில் கையிலிருந்த ரைஃபில்லை சஞ்சனா பிடுங்க முயற்சிக்க ஃபில் வெறி கொண்டு அவளை தாக்குகிறான். ரைஃப்பில்லால் சஞ்சனாவை ஃபில் ஓங்கி அடிக்க அவள் கீழே சரிந்தாள்.
நிஷா, கௌதம், ஜோத்சனா மூவரையும் ரைஃபில்லால் குத்தும் பத்து நிமிடப் போராடத்தில் பொறுமையிழந்திருந்தான்.
ரவி, கௌதம், நிஷா, ஜோத்சனா பத்தடி. தொலைவிலிருக்க ஒருவர் பின் ஒருவராக சுட்டான் ஃபில்.
ரத்தம் பீச்சியடிக்க நால்வரும் கீழே விழுந்து இறக்கிறார்கள். ரொம்பவே டையர்டாகி போன ஃபில் ஐவரும் இறந்ததை உறுதி செய்த ஃபில் கேரவேனில் தண்ணீர் பீப்பாய்களுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
யாருமில்லாத மணல் வெளியில் கேரவேன் ஆரவாரமில்லாமல் சென்றது.
