
சிறுகதை 19 : கிணத்துக்கடவு – சிவஷங்கர் ஜெகதீசன்
கிணத்துக்கடவு, கோவை மாவட்டம். காலை 11 மணி.
சிவப்பிரகாசம் பல வருடங்கள் நிலக்கடலை போட்டு பார்த்தார். பருவம் தவறய மழையால் நிறைய நஷ்டமே ஏற்பட்டது. விவசாயம் மிகப் பெரிய சவாலான தொழிலாக மாறக்காரணம் பொய்த்துப் போகும் மழையும் பருவம் தவறிய மழையுமே என காரணம் கூறினர் அவ்வூர் மக்கள்.
நல்ல மகசூலில் காய்கறிகளும், பயிர்களும் விளைவித்துக் கொண்டிருந்தவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர். தேவையான தண்ணீர் கிடைக்காமலும், நிலத்தடி நீர் பல நூறு அடிகளுக்கு பைப்புகள அமைத்து போர் போடவேண்டியிருந்தது.
பலர் இனி விவசாயத்தை நம்பி புண்ணியமில்லை என ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய ஆரம்பித்தனர். சிலர் சென்னையில் கால் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தனர். சொந்த ஊரில் டிராவல் ஏஜென்சி மூலம் கார் ஓட்டினார்கள். விவசாயியாக வாழ்க்கையை ஆரம்பித்து சொந்த நிலத்தில் பயிர் செய்து தானும் தன் குடும்பத்திற்கும் அதன் மூலமாகவே பசியாறி வாழ்க்கை ஓடியது.
பருவம் தவறி பெய்த மழையால் நிலக்கடலை விவசாயத்தில் பலத்த நஷ்டம் சந்தித்திருந்தார் சிவப்பிரகாசம். தன் நண்பன் முத்து தக்காளி விவசாயம் செய்து பார்க்கலாம் என ஆரம்பிக்க அதைப்பற்றி தெரிந்து கொண்டு தக்காளி விதைகளை வாங்கி வைத்திருந்தார். தொழு உரம், டிராக்டரில் உழவு செய்தது, பாத்தி அமைக்க என இதுவே செலவு ரூபாய் பத்தாயிரத்தை தாண்டி விட்டது.
நடவு செய்ய நாலு பேரை அழைத்திருந்தார். நடவு முடிந்தவுடன் காம்ப்ளக்ஸ் உரம் வாங்குவது, களை பிடுங்குவது, பூச்சி மருந்து தெளிப்பது, இரண்டாம் முறை களை எடுப்பது என முழு மூச்சில் வேலை செய்ய வேண்டி இருந்தது. சிவப்பிரகாசத்தின் மகள் ரேவதியும் அப்பாவுடன் விவசாய வேலைகளை வார கிடைசியில் சேர்ந்து கொள்வாள்.
தக்காளி பயிர் செய்யப் போகிறோம் என்றதும் ரேவதிக்கு செமக் குஷி. இது வரை நிலக்கடலை மட்டுமே பயிர் செய்து கொண்டிருந்ததிலிருந்து காய்கறிகளுக்கு அப்பா மாறியதால் விவசாய நிலத்துக்கு அப்பாவுடன் அடிக்கடி வரத் தொடங்கினாள் ரேவதி.
இரண்டாம் களை பிடுங்கும் போது வேலையாட்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் 10 வயது சிறுமி ரேவதி. வேலையாட்கள் அலுப்பு தெரியாமல் பேசிக் கொண்டே வேலை பார்ப்பது, அவர்கள் களைகளை அப்புறப்படுத்தும் விதம் என ரேவதி லயித்து பார்க்க ஆரம்பித்தாள்.
ஆடிப்பட்டம் என்பதால் செடிகளுக்கு கம்பி கட்டும் செலவும் இருக்கும். இல்லையெனில் மழையில் செடிகள் கீழே விழுந்து நாசமாகி விடும். சிவப்பிரகாசம் கையிலிருந்த பணம் கரைந்து கொண்டிருந்தது. குச்சி கட்ட 30000 வரை செலவானது.
என்.பி.கே மூட்டை,பொட்டாஷ், மருந்து தெளிப்பது என செலவு எகிறியது. சிவப்பிரகாசம் இந்த தக்காளி விவசாயத்தை தொடர முடியுமா என பயந்தார். அந்த ஊரில் உள்ள அத்தனை விவசாயிகளும் மழை வந்து தக்காளி சாகுபடி களை அழித்து விடுமா என பயந்து கொண்டிருந்தனர்.
இந்த செலவுகளை எல்லாம் லாபம் என ஏதாவது மிஞ்சுமா என விவசாயிகளுக்கு கலக்கம் ஏற்பட்டது.
முத்து சிவப்பிரகாசத்திற்ககு நிறைய தெளிப்பு மருந்துகளை பரிந்துரைத்தார். இது வரை செழித்துவளர்ந்திருந்த செடியில் காய் காய்க்க தொடங்கியிருந்தது.
ராமர் டூவிலரில் வந்து கிணத்துக்கடவு விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை வாங்கி சந்தையில் விற்கும் இடைத்தரகர். ஒவ்வொரு விவசாயியின் நிலத்தையும் பார்த்து வந்த ராமர் சிவப்பிரகாசத்தையும் விசாரிக்க தொடங்கினர்.
“எப்ப பறிக்க போறீங்க? ” என்றார் ராமர்.
“ஓ… இப்ப தான் காய் வர ஆரம்பிச்சிருக்கு…இன்னும் பத்து நாள் ஆகும் பா…”
“சொல்லி அனுப்புங்க. எத்தனை கூடை வரும்?”
“60 கூடை வரும்னு நினைக்கிறேன். நம்ம முத்து தோட்டத்துலயும் தக்காளி தான் போட்டிருக்கு. விசாரிச்சீங்களா? ” என்றார் சிவப்பிரகாசம்.
“அவரு கம்பெனிக்காரங்ககிட்ட குடுத்துக்குவாரு. நீங்களும் காய்கறி போட ஆரம்பிச்சததுலேர்ந்து கேட்கறீங்களேன்னு வந்தேன்.”
“பறிக்க ஆள் இருக்கா?”
“கேட்டுகிட்டு இருக்கேன் தம்பி. ஆள் தெரிஞ்சா சொல்லு. நடவு, களை புடுங்கங்கறதுக்கே யாரும் வர்ற மாதிரி இல்ல. கஷ்டப்பட்டு கெஞ்சி ஒவ்வொருத்தரையும் வரவெச்சிருக்கேன் பா.”
“நீங்க கவலைம்படாதீக..நம்ம குமரேசன்கிட்ட சொல்லி வைங்க.எல்லாம் நல்லபடியா ஆள் பாத்து குடுப்பான்”
“ஆள்லாம் கூட முன்ன பின்ன சமாளிச்சுடுவேன். மழை வந்து தக்காளிய அழிச்சுட கூடாது. நிறைய செலவு பண்ணிட்டேன்”
“அதெல்லாம் கவலைப்படாதீக. பார்த்துக்கலாம்.”
“சரித் தம்பி”
“சொல்லி அனுப்புங்க. போயிட்டு வர்றேன்” என்று கிளம்பினார் ராமர்.
“இந்த அங்கிள் யாருப்பா?” ரேவதி கேட்டாள்.
“இவருதாம்மா நம்ம தக்காளியெலலாம் வாங்கிட்டு சந்தைல கொண்டு போய் விக்க போறவரு”
“தக்காளி எப்ப்பா ரெட் கலராகும்?”
“இன்னும் 10 நாள்லம்மா”
“இந்த அங்கிள் அவ்ளோ தக்காளியையும் எப்படி தூக்கிட்டு போவாங்க?”
“வண்டி எடுத்துட்டு வருவாங்கம்மா…அந்த அங்கிள்”
“இன்னும் பத்து நாள்ல இந்த அங்கிள் மாதிரியே நிறைய பேர் வந்து அப்பா கூட இருந்து தக்காளிய பறிச்சு கூடையில போட்டு இந்த அங்கிள்கிட்ட குடுக்க போறோம்”
“நம்ம முத்து அங்கிளும் வருவாங்களா?”
“ஆமாம்மா. அந்த அங்கிளும் இங்கே தான் இருப்பார்”
சில செடிகளுக்கு மறுபடி ஒரு முறை மருந்து தெளிக்க வேண்டியிருந்தது. நிலக்கடலை மற்றும் மஞ்சள் விதைத்த காலங்களில் இவ்வளவு மெனக்கெட்டதில்லை. நல்ல லாபத்தை ஒரு ஏக்கருக்கு இந்த பயிர்கள் கொடுத்து கொண்டிருந்த காலம் போய் பயிர்களை காப்பாற்றுவதே பெரிய வேலையாகி போனது.
பத்து நாள் போனது. இந்த கொடிதக்காளிகளை பறிக்க ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார் சிவப்பிரகாசம்.
அங்காளம்மனை மனதில் நினைத்துக் கொண்டு செயல் வெற்றியடைய பிரார்த்தனை செய்தார்.
தக்காளிகள் பறிக்கப்பட்டு கூடைகளில் நிரப்பப்பட்டன. சொல்லி வைத்தாற் போல் 60 கூடைஙளிலும் தக்காளிகள் நிரம்பியிருந்தது. வேலையாட்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் சென்ற பின் ராமர் வந்திருந்தார்.
ஒரு கூடைக்கு என்று பேசிய பேரம் சரிவராமல் ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் எனப்பேசி முடித்தார்கள்.
ராமர் நான்கு நான்கு கூடைகளாய் எடுத்துக் கொண்டு தன்னுடைய டிவிஎஸ் வண்டியின் முன் பக்கத்தில் வைத்துக் கொண்டு கிளம்பினார். பெரிய லாபமில்லை என்றாலும் நன்கு காய்த்த தக்காளிகளை கூடைகளில் பார்க்கும் போது மனநிறைவுடன் வீடு திரும்பினார் சிவப்பிரகாசம். நிலக்கடலை, மஞ்சள் தவிர புதிதாக ஓர் காய்கறி சாகுபடி செய்து இன்று அதில் லாபம் பார்ப்பது ஒரு அகமகிழ்வை உண்டாக்கியது.
ரேவதி தக்காளிப்பறிப்பையும் ஆட்கள் அவற்றை கூடையில் நிரப்புவதையும் பார்த்துக் கொண்டிருந்தாள். திடிரென ஒரு கூடை அருகே சென்று தன்னுடைய நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை கூடையின் மேலிருந்த ஒரு தக்காளியில் ஒட்டினாள். தக்காளிக்கூடைகள் ரேவதிக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. அந்த வாரம் முழுவதும் தக்காளிகள் வளர்ந்த விதம் மற்றும் அதை ஆட்கள் பறித்து அடுக்கிய விதத்தை அம்மாவிடமும், தோழிகளிடமும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
ராமர் சந்தையை சென்றடைந்த போது சென்னையை சேர்ந்த வியாபாரிகளுக்கு விற்பதாக முடிவாகியது. பல இடைத்தரகர்கள், கார்பரேட் நிறுவனங்கள் கிணத்துக்கடவு க்கு நேராக வந்து மிகக் குறைவான விலைக்கு தக்காளிகளை வாங்கிச் சென்று லாபம் பார்த்தது.
ராமருக்காக காத்திருந்த சென்னை வியாபாரிகள் ராமரை கண்டதும் ஒருவர் பின் ஒருவராக பேரம் பேச தொடங்கினர். 14 ரூபாய்க்கு விற்பதாக முடிவெடுக்கப்பட சென்னையை சேர்ந்த வியாபாரிகள் தக்காளிகளை மூட்டைகளில் மாற்றி எடுத்துக் கொண்டனர்.
திருவான்மியூர், சென்னை. மாலை 7 மணி.
ரெட் கலர் மாருதி ஸ்விஃப்ட் கார் திருமான்மியூரின் முக்கிய பல்பொருள் அங்காடி வாசலில் நின்றது. கிழிறங்கிய சந்தியா பெரிய பையுடன் உள்ளே சென்றாள்.
மளிகைப் பொருள், காய்கறிகள் என வைக்கப்பட்டிருந்த அறைகளில் இருந்து எடுத்து தன் டிராலியில் எடுத்து அடுக்கி வைத்தாள். தக்காளி கள் ஒரு கிலோ பண்டலாக…மஸ்கிட்டோ மெஷ்…போன்ற வலை பின்னிய பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. ரேவதி தன் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிய தக்காளி அதில் தான் இருந்தது. ஃபெரஷ்ஷாக இருந்த தக்காளியை இனம் கண்டு எடுத்து ட்ராலியில் போட்டாள் சந்தியா.
திறன் பேசியில் கணவர் விக்கி அழைக்க..
“ஹலோ.”
“எவ்ளோ நேரம்?’ என்றார் விக்கி.
“இதோ..வந்துகிட்டே இருக்கேன்”
“எங்கேயிருக்க?”
“மார்கெட் வழியா வந்தேன். அதான் காய்கறி, மளிகை சாமான் கொஞ்சம் எடுத்து வெச்சுட்டுருக்கேன்”
“இங்க கெளதம் ஏற்கெனவே கத்த ஆரம்பிச்சுட்டான்”
“என்னாச்சு. அரை மணி நேரத்துல வந்திடறேன்”
“இப்பவே மணி சிக்ஸ் தெர்ட்டி. சீக்கிரம் வா.”
“ம்ம்..ஓகே..பை..”
ஃபோனை அணைத்து பில் கவுண்டருக்கு விரைந்தாள்.
சந்தியா வீட்டுக்கு செல்ல வீடே குதூகலமாக இருந்தது. பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் பிள்ளைகள் இருவரும் ஹில் ஸ்டேஷன் போகலாம் என நச்சரிக்க ஊட்டி போவதாக முடிவானது.
சந்தியா வீட்டிற்குள் நுழைய கெளதமும், மிருதுளாவும் சந்தியாவை கட்டிக் கொண்டனர். அவர்களை கொஞ்சி விட்டு விலக்கி காய்கறிகளை தனது ஹையர் ஃப்ரிட்ஜில் அடுக்கி வைத்தாள். தக்காளிகள் கீழ் ரேக்குகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
ரேவதி ஆசையாக ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிய தக்காளி ஃப்ரிட்ஜில் அடிமட்டத்தில் இருந்தது. சந்தியா காய்கறிகளை அடுக்கி வைத்த கையோடு குளித்து முடித்து டூருக்கு தயாரானாள்.
இரவுப் பயணமாக ஊட்டிக்கு காரில் சந்தியா குடும்பம் சென்றது. ஒரு வாரத்திற்கு பிறகு சென்னை திரும்பிய சந்தியா…காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து சமைக்கலானாள்.
இரண்டு கிலோ தக்காளி களை மொத்தமாக வாங்கி ஃபிரிட்ஜில் அடைந்திருந்தாள். மற்ற காய்கறிகளும் அதே போல் 2,3 கிலோ கணக்கில் ஒரு மாதத்திற்கு வாங்கியிருந்தாள். இப்படி ஒரு மாதத்திற்கு காய்கறிகளை வாங்கி ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என சந்தியாவின் தாய் லட்சுமி கூறியதை அலட்சியப்படுத்தி…
‘போம்மா…யாரால ..தினம் போய் அலைஞ்சு காய்கறி வாங்கறது?” என தப்பை சுட்டிக் காட்டிய லட்சுமியை ஆஃப் செய்தாள்.
ரேவதி ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிய தக்காளி ஃபிரிட்ஜீக்கு வந்து இரண்டு வாரங்கள் முடிந்திருந்தது. 15 ம் நாள் காலையில் ஃபிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணர்ந்தாள் சந்தியா. ஒவ்வொரு ரேக்காக முகர்ந்து பார்த்தவள்..கிடைசி அறையில் இருந்த தக்காளிகளை எடுத்தாள். அவை பறித்து 15 நாட்களுக்கு மேலானதால் இயற்கையாகவே அழுகி போயிருந்தது. இவை அனைத்தையும் முதல் வாரத்தில் சமைத்திருக்க வேண்டியவை. இரண்டாவது அளவு பார்த்து அரை கிலோ வாங்கி அதை முதல் வாரத்தில் பயன்படுத்தியிருக்க வேண்டும். விதைத்து, பாத்தி கட்டி, குச்சி வைத்து, களைகளை பிடுங்கி, உரமிட்டு, பூச்சி கொல்லி மருந்துகளை அடித்து, மேலும் சில உரமிட்டு வளர்ந்த தக்காளிகள் சரியாக பயன்படுத்தப்படாமல் 15 நாட்களுக்கு மேல் ஃப்ரிட்ஜில் இருந்ததால் அழுகி போயிருந்தன.
ஒரு கருப்பு கார்பேஜ் பேகை எடுத்து மொத்த தக்காளிகளையும் அதில் போட்டுக் கட்டி குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்தாள்.. சந்தியா..