சிறுகதை 18: ஆன்லைன் ரம்மி – சிவஷங்கர் ஜெகதீசன்
வருடம் 1990.
நுங்கம்பாக்கம். மாலை 6 மணி.
ராஜசேகருக்கு சென்னை புதுசு. ஈரோடு அருகே உள்ள குமாரபாளையம் அருகே உள்ள ஓர் கிராமத்திலிருந்து சென்னை வந்து தன் நண்பன் பிரசாத் அறையில் தங்கியிருந்தார்.
ஒரு ஹார்டுவேர் கம்பெனியில் பிரசாத் வேலைக்கு ஆள் தேவை எனக் கேள்விப்பட்டு நுங்கம்பாக்கம் வந்திருந்தார். நேராக கடைக்கு போய் முதலாளியை பார்த்ததில் அவரும் குமாரபாளையத்தை சேர்ந்தவராய் போய் விட வேலை சுலபமாக கிடைத்து விட்டது.
பக்கத்தில் உள்ள தேநீர் கடையில் பஜ்ஜி, டீ சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது ஓர் நடிகரை பார்த்தார். அவர் அப்போது வளர்ந்து வரும் நடிகராவார். ஏற்கனவே இரண்டு படங்கள் வெள்ளி விழா கண்டிருந்தாலும் சமீபத்திய படங்கள் படு தோல்வி. இப்போது வேறு ஏதேதோ பிசினஸ் செய்கிறார் என பத்திரிக்கைகளில் படிதாதார். அந்த நடிகரை பின் தொடர்ந்து சென்றார் ராஜசேகர்.
அந்த நடிகர் ஒரு கிளப்பிற்கு சென்றார். அங்கே வட்டமான டேபிள்களில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். நடிகரும் தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு கை காட்டி விட்டு ஒரு டேபிளில் அமர்ந்தார். ராஜசேகரையும் அவரைப்போல் நடிகரை பின் தொடர்ந்து வந்த மற்றவர்களையும் செக்யூரிட்டி எந்த கேள்வியுமின்றி உள்ளே விட்டான். ஆச்சர்யபட்டாலும் தான் வேலை கிடைத்து உயர்ந்து விட்டதால் இனி இப்படி தான் என் நினைத்து கொண்டார் ராஜசேகர்.
ராஜசேகர் மற்றும் அவருடன் வந்தவர்களை ஒவ்வொரு டேபிளில் ஒவ்வொருவராக உட்கார வைக்கப்பட்டனர். ராஜசேகர் நடிகர் அமர்ந்திருந்த டேபிளில் சென்று அமர்ந்தார். ஒரு பக்கம் அசைவ வகைகள் ட்ரேக்களில் வந்து விளையாடுபவர்களுக்கு வழங்கப்பட்டது. இன்னோரு பக்கம் விலையுயர்ந்த மது பாட்டில்கள் சிலரது டேபிளில் காணப்பட்டன.
ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரை ஒரு டேபிளில் உட்கார சொன்னார்கள். அனைவருக்கும் கேட்காமலேயே மது வகைகள் பரிமாறப்பட்டது. இரண்டு சீட்டுகளை குலுக்கி டேபிளில் இருந்த ஐந்து பேருக்கு ஒருவர் சமமாக போட்டார்.
ராஜசேகரும் கார்டுகளைஎடுத்து வைத்துக் கொண்டார். சிறு வயதில் தன் நண்பன் ரகு வீட்டில் சீட்டுகட்டு விளையாடுபவர்களை பார்த்திருக்கிறார். இங்கு ராஜசேகரை பேச விடாமல் ஆட்டம் வேகமாக நடக்க 5 நிமிடம் கழித்து தான் இவர்கள் அனைவரும் பணம் வைத்து விளையாடுவது ராஜசேகருக்கு பிடிபட்டது. நைசாக எழுந்து சென்று விடலாமா என பார்த்த போது பாதியில் எழுந்து போகக்கூடாது எனக்கூறி விட்டனர். கண்ணாடி கோப்பைகளில் விஸ்கி ஊற்றி இரண்டு முறை குடித்திருந்தார். இதற்கேல்லாம் நிறைய பணம் கேட்பார்களே என சுதாரித்துக்கொண்டு எழுந்த போது எங்கிருந்தோ மூலையில் இருந்து வந்த இருவர் பிடித்து உட்கார வைத்தனர்.
ஜெயித்தவர்கள் பூரிப்புடன் வெற்றியை கொண்டாட நான்கு , ஐந்து ஆட்டங்கள் முடிய பணமில்லாமல் கார்டுகளை எடுப்பதும், அடுக்குவதும் போடுவதுமாக இருந்த ராஜசேகருக்கு பயம் தொற்றிக் கொண்டது.
அருகே இருந்த சஃபாரி அணிந்த மேலாளரை அழைத்து ‘பணம் இல்லீங்க..இதுக்கு கொடுக்க..எவ்ளோ ஆச்சுன்னு பில் போட்டு கொடுத்தீங்கன்னா…நாளைக்கு இதே நேரத்துக்கு குடுத்துர்ரேனுங்க…நான் கிளம்புறேனுங்க’ என்றார்.
மேலாளர் அவரை ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே முதலாளி நாற்காலியில் இருந்தவரிடம் பணமில்லாமல் விளையாட வந்திருக்கிறார். ரூபாய் 350 தர வேண்டும் எனக்கூறி விட்டு மேலாளர் சென்று விட்டார்.
அந்த அறையில் 4 பேர் ராஜசேகரை சூழ்ந்தனர். ராஜசேகரின் சட்டை கழற்றப்பட்டது. வளைத்து வளைத்து நான்கு பேரும் ராஜசேகரை போட்டு பின்னி எடுத்தனர். வலி தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தார் ராஜசேகர்.
‘சார்…சார்…சார்…விட்ருங்க சார். நான் திரும்ப ஊருக்கே போயிடறேன். இனிமே இந்த பக்கமே வர மாட்டேன்’ என்று கெஞ்சினார்.
5 நிமிடங்கள் சரமாரியாக அடிவாங்கிய பின் கும்பலில் ஒருவன் போதும் என மற்றவர்களுக்கு சைகையில் கை காட்ட மற்றவர்கள் அடிப்பதை நிறுத்தினர். ராஜசேகர் பொறுமையாக எழுந்து வெளியேறினார்.
கிளப் வாசலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி இப்போது நக்கலாக சிரித்தான். சட்டை கிழிந்து பட்டன்கள் கழண்டு தலை கலைந்து கிட்டதட்ட பிச்சைக்காரனை போல தெருவில் நடந்தார் ராஜசேகர். வலி தாங்க முடியவில்லை. இரண்டு கிலோமீட்டர் நடந்து ரயில்வே ஸ்டேஷன் போய் அங்கிருந்து கிண்டி போய் அங்கிருந்து ரூமுக்கு நடந்து செல்ல வேண்டும். வழியில் வந்த ஒரு ரிக்ஷாக்காரனை கை போட்டு நிறுத்தினார்.
ரிக்ஷாக்காரர் மதிப்பதாய் தெரியவில்லை. கையெடுத்து கும்பிட்டு வண்டியை நிறுத்த வைத்தார் ராஜசேகர். ஏழுமலை வண்டியை நிறுத்தினார். ராஜசேகர் ஏறிக்கொண்டு நடந்ததை ஏழுமலையிடம் சொல்ல இந்த மாதிரி பணக்கார கிளப்புக்கு நீ போலாமா என ஏழுமலை திரும்ப கேட்டார்.
கிண்டியில் உள்ள ராஜசேகர் ரூமிற்கு ரிக்ஷா வண்டி போய் நின்றது. கைத்தாங்கலாக ஏழுமலையும் ரகுவும் ராஜசேகரை பெட்டில் படுக்க வைத்தனர். ராஜசேகர் அன்று முடிவெடுத்தார். சென்னையும் வேண்டாம்…வேலையும் வேண்டாம்…கால் காசு சம்பாதித்தாலும் அது தன் சொந்த ஊரிலிருந்தே சம்பாதிப்பது என முடிவெடுத்தார். ஒரு வாரத்தில் உட்காயங்களின் வலி குறைந்தது. டாக்டர் ஃபீஸ், மருந்து மாத்திரைகள் என ரகு தான் செலவழித்து நண்பனை பார்த்துக் கொண்டார்.
ராஜசேகர் ஊருக்கு செல்ல தயாரானார். ரகு அன்ரிசேர்வ்ட் டிக்கெட் எடுத்து கொடுக்க சென்ட்ரல் ஸ்டேசனில் தன் சொந்த ஊருக்கு கோவை செல்லும் ரயிலில் ஏறிக் கொண்டார். நெரிசலில் இருந்த அந்த கம்பார்ட்மெண்ட்டில் ராஜசேகருக்கு தூக்கமே வரவில்லை. வழி நெடுக தான் அவமானப்பட்ட அந்த கிளப் மற்றும் பார் மனதில் வந்து போனது.
மதுவையும், சீட்டுக்கட்டுகளையும் இனி தொட மாட்டேன் என மனதிற்குள் கூறிக் கொண்டார்.
சொந்த ஊர் சென்றவர் அங்கே ஒரு ரைஸ்மில் ஆரம்பித்தார். பிறகு வேட்டி, பனியன்கள் என காட்டன் துணிகளை விற்க ஆரம்பித்தார். சில வருடங்களில் ‘தர்ம ராஜ் வேட்டிகள் மற்றும் ஷர்ட்கள்’ விற்க ஆரம்பித்தார். தொலைக்காட்சி, வானொலி என ‘தர்மராஜ்’ வேட்டிகளின் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருந்தன.
வருடம் 2020.
ஒரு எஸ்யெம்யெஸ் மூலமாக தன் கணக்கில் ரூபாய் 5250 போடுவதாகவும்..கோடிகணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் ஒரு ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் கூறியிருந்தது.
பழைய எண்ணங்களும் அவமானங்களும் ராஜசேகர் மனதில் வந்து போயின. இப்போது மனைவி, குழந்தைகள் என மனநிறைவான வாழ்க்கை. கோடிக்கணக்கில் பணம். இருந்தாலும் 30 வருடம் முன் தான் பட்ட அவமானம் மனதை போட்டு வாட்டியது.
ரம்மி ஆப்பை டவுன்லோட் செய்தார். தன் கணக்கில் ரூபாய் 5250 வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆப் நோடிவிகேஷன் சொன்னது.
முதலில் மிகச் சுலபமாக ஜெயிக்க ஆரம்பித்தார். இவ்வளவு சுலபமான ரம்மி தெரியாமல் இப்படி 30 வருடங்கள் முன்னால் தோற்று அவமானப்பட்டு விட்டோமே எனத் தோன்றியது.
வேலை நேரம் போக மீத நேரங்களில் ரம்மி விளையாட ஆரம்பித்தார். ஒரு லட்ச ரூபாய் ஜெயித்து விட்டதாக ஆப் காட்டியது. மகிழ்ச்சியில் மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் ராஜசேகர்.
ஒரு மாதத்தில் ஒரு ஆஃபர் அந்த ஆப்பில் வந்தது. அதில் ஆன்லைனில் இருக்கும் மற்றவர்களுடன் 1கோடி வரை பேரம் வைத்து விளையாடலாம் என்ற ஆஃபர்.
வங்கிக் கணக்கில் இருந்து ஆப் நிறுவனத்திற்கு சுலபமாக பணம் செலுத்த ஆப்சன்கள் இருந்ததால் எவ்வளவு பணம் போனது என்றே ராஜசேகருக்கு நினைவில்லை.
தன் நண்பர்கள் சந்திர சேகர், மணிக்கும் ரம்மி ஆப் பற்றி சொல்லி அவர்களும் ஆன்லைன் ரம்மி விளையாட ஆரமாபித்திருந்தனர்.
முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த நிறுவனம் ஆட்டத்தை கடுமையாக்கியது. கம்ப்யூட்டரோடு விளையாடுபவர்கள் தோற்றுப்போய் பணத்தை இழந்தனர்.
மூன்று மாதங்களாக ஜெயித்து வந்ததில் ராஜசேகருக்கு தன்னம்பிக்கை அதிகமானது. கோடி ரூபாய் வரை பணம் பறிமாறி ஆட ஆரம்பித்தார். திடீரென தான் தோற்று வருவதை உணர்ந்தார். ஆனால் இது தற்காலிக தோல்வி தான் என உணர்ந்தார். தொடர்ந்து கம்யூட்டரிடம் ரம்மி விளையாடியதில் தொடர் தோல்விகளாக 3 கோடி ரூபாய் இழந்திருந்தார்.
ராஜசேகர் பணத்தை கட்டாததால் கெடு முடிந்து ஆன்லைன் நிறுவனம் காவல்துறைக்கு புகார் அளித்தது. பல இடங்களில் விசாரித்தும் ராஜசேகரால் 3 கோடி ரூபாய் புரட்ட முடியவில்லை. ஒரு நாள் மாலை 6 மணிக்கு ராஜசேகரை போலீஸ் கைது செய்தது.
30 வருடங்களுக்கு முன்னால் அடித்த அதே நால்வர் திரும்ப காக்கி சட்டையுடன் அடித்தது போலிருந்தது. போலீசார் 3 கோடி ரூபாய் டீஃபால்ட் ஆனதற்கு வேறு வழிகளில் விசாரிக்க தொடங்கினார்கள். ராஜசேகரின் வழக்கறிஞர்கள், மகன்கள் அவசர அவசரமாக வந்து ஜாமீனுக்கு அப்பீல் செய்தனர். அடுத்த நாள் கோர்ட் ஜாமீன் வழங்கியது.
கோர்ட் வாசலில் இந்த அதிர்ஷ்டம் என்னும் குரங்கை நம் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்து வைத்திருக்கிறோம்…இந்த ஆழ்மனதின் ஆசைகளையும், அசட்டுநம்பிக்கைகளையையும் தான் இந்த ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் பயன்படுத்தி கொண்டுவிட்டன…இனி இந்த ஸ்மார்ட் ஃபோன் எனக்கு வேண்டாம் எனத் தன் கையிலிருந்த திறன் பேசியை தூக்கி எறிந்தார் ராஜசேகர்.
