சிறுகதை 17 : மாற்றுக் கொலை – சிவஷங்கர் ஜெகதீசன்
தருமபுரி மாவட்டம்.
“அவள கொன்னுட்டு வாங்க. அவனையும், அவளையும் கொல்லாம வராதீங்க” வெள்ளையம்மாள் கர்ஜித்தாள்.
“அவன மொதல்ல விடமாட்டோம்..சேகரு…அவன் இங்கே வந்திருக்கிறது நெஜந்தானே? ” பெரியசாமி கேட்டான்.
“ஆமா மச்சான். வனிதாவும் கூட வந்திருக்கு” என்றான் சேகர்.
“எவ்ளோ தைரியம் இருந்தா, நம்ம ஊர்ல சுத்திக்கிட்டு திரியுதுங்க”
வெள்ளையம்மாளுக்கு கோபம் தாளவில்லை. மூச்சு முட்ட கொம்பில் உள்ள தண்ணீரை எடுத்து மடக்கென குடித்தாள்.
3 மாதங்களுக்கு முன்…
‘இது நடக்காது. என்னை மறந்துடு இளங்கோ’ என்றாள் வனிதா.
“ஏன் நடக்காது? நம்ம ஊர்ல இருக்கிற வரைக்கும் தான் உயர்ந்த சாதி…தாழ்ந்த சாதி எல்லாம். சென்னை போறோம். அங்க நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கறோம்”, என்றான் இளங்கோ.
இளங்கோ பிடிவாதமாய் இருந்தான். வனிதாவிற்கு தன் தாய் பயமும் வாந்தியும் வந்தது. எச்சில் முழுங்கினாள்.
பெரியசாமியும் பெரிய கோபக்காரர். யாராவது கொஞ்சம் உசுப்பேத்தி விட்டாலே சண்டைக்கு போய் விடுவார்.
மானம், மரியாதை, கௌரவம், சாதி வரையறைகள் என அனைத்தையும் உயிர் போல் எண்ணுபவராய் இருந்தார். ஊருக்குள் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்தவரை ஊரே மதிப்பதற்கு தன் சாதியும் தன் முன்னோர்கள், பரம்பரையே காரணம் என நினைத்தார். தன் பரம்பரையில் நடக்கும் அத்தனை நல்லது, கெட்டதுக்கும் பெரியசாமி தான் தலைமை தாங்கினார். சில நேரங்களில் வெள்ளையம்மாளையும் அழைத்துச் செல்வார்.
தான் புதிதாக வாங்கிய நகைகள் அனைத்தும் போட்டுக் கொண்டு பெரிய குங்குமப் பொட்டுடன் வெள்ளையம்மாள் கம்பீரத்துடன் பெரியசாமியுடன் அந்த சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வாள்.
இளங்கோ அந்த ஊரில் ஒடுக்கப்பட்ட சாதியினர் வாழும் பகுதியில் வாழ்பவன். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததால் ஏற்படும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவன்.
டீ குடிக்க போனால் அங்கே இவர்களுக்கென்று தனிக்குவளை. ஊரில் உள்ள உயர்ந்த சாதியினர், இடைநிலை சாதியினர் ஒன்றாகவும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றொரு பகுதியிலும் வாழ்ந்தனர்.
இவர்களின் பகுதிகளுக்கு நடுவே ஒரு சுவர் இருந்தது. ஒடுக்கப்பட்ட சாதியினர் சுவரைத்தாண்டி வராமலிருக்கவும் இங்கிருக்கும் மக்கள்,குழந்தைகள் அந்த பக்கம் சென்றுவிடாமலிருக்க சுவரின் மேல் சோடா பாட்டிலின் கண்ணாடிகள் உடைத்து குத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஒடுக்கப்பட்ட சாதியினரில் உள்ள பெரியவர்கள் இந்த சுவரைப்பற்றியோ, தீண்டாமை பற்றியோ அதற்கு எதிராக போராடாமல் இப்படியாவது வாழ வழி விட்டிருக்கிறார்களே என நினைத்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்கள் சுவரைத்தாண்ட ஒரு போதும் யோசித்ததில்லை.
மீறி சுவரை இடிக்க சொல்லி தர்க்கம் செய்த இளைஞர்களை கரண்ட் கம்பங்களில் கட்டி வைத்து ஒரு கும்பல் அடித்தனர். அந்த இளைஞர்களின் போராட்டத்திற்கு அர்த்தமிருந்தது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு பேருந்து வசதிகள் இல்லை. சுற்று சுவர் இருந்ததால் ஊரைச் சுற்றி கொண்டு பேருந்து நிலையத்தை அடைவதற்கே 30 நிமிடங்கள் ஆகி விடும்.
சுவர் இல்லையென்றால் 5 நிமிட பயணம், சுற்று சுவரால் 30 நிமிட பயணமாக மாறியிருந்தது. ஒருவர் இறந்து விட்டாலோ இன்னும் மோசமாகும் நிலை. ஒடுக்கப்பட்ட சாதியினரின் இடுகாட்டுக்கு இறந்தவரை எடுத்துச் செல்ல 4 மணி நேரமாகும். சுற்று சுவர் இல்லையென்றால் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.
பெரியசாமியும், வெள்ளையம்மாளின் தம்பி சேகரும் அந்த ஊரின் முக்கிய பிரமுகர்கள். அனைத்து சமூக விழாக்களுக்கும் அவர்கள் அழைக்கப்பட்டனர். அப்படி ருத்ரய்யா வீட்டு விசேஷத்தில் தான் இளங்கோ வனிதாவை முதன்முதலில் பார்த்தான்.
வனிதாவை கண்டவுடன் ஓர் இனம் புரியாத மாற்றம் உடலுக்குள். காதல் உடனே பற்றிக் கொண்டது. வனிதா விற்கும் இளங்கோவின் மேல் ஈர்ப்பு இருந்தது. கண்களாலேயே இளங்கோவிற்கு தான் காதலுற்றதை சொன்னாள். இளங்கோ அந்த சுபநிகழ்ச்சியில் பார்த்ததற்கு பின்னர் அவளை காண துடித்தான். 30 நிமிடம் நடந்து பேருந்து நிலையத்தில் அவளைக் காண தினமும் சென்றான்.
சரியாக குளித்து, தலை வாரி, துணிகளை தானே அயர்ன் செய்து, நெற்றிக்கு விபூதியிட்டு, வாட்ச் கட்டி, தினமும் தவறாமல் அவள் பஸ் ஸ்டாப்பிற்கு வரும் முன்னரே இவன் அங்கிருந்தான். அவளும் தினமும் இவனைப் பார்த்து புன்னகைத்தாள். தினமும் அவள் கண்கள் இளங்கோவை தேடின.
ஒரு பிப்ரவரி 14 ஆம் நாள் இளங்கோ தன் காதலை வனிதாவிடம் ரோஸ் கொடுத்து சொன்னான். தன் சாதியை பற்றியோ, ஊரைப்பற்றியோ பெரிய புரிதல் இல்லை அப்போது.
இருவரும் ஊருக்கு வெளியே இருக்கும் முட்புதர்களின் அருகே சந்திக்கத் தொடங்கினர்.
இளங்கோ- வனிதா காதல் அரசல் புரசலாக ஊரில் உள்ளவர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. வனிதா நடந்து போகும்போதெல்லாம் ஊரில் உள்ளவர் கள் நமட்டு சிரிப்பு சிரிப்பதை வைத்து தன் காதல் வெளியில் கசிய ஆரம்பித்திருப்பதை உணர்ந்து கொண்டாள். இளங்கோவிடம் இனி இந்த ஊருக்கு அருகில் உள்ள டவுனில் சந்திக்கலாம்; இங்கே சந்தித்தால் அது பேராபத்து என இளங்கோவை எச்சரித்தாள். வெள்ளையம்மாளின் காதுகளுக்கு இவர்கள் காதல் வரவில்லை. ஆனால் பெரியசாமிக்கு வனிதாவின் காதல் தெரிய வந்தது. இளங்கோவை தனக்கு சொந்தமான அரிசிமில்லுக்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பினார்.
“தம்பி. நீ எங்க புள்ளையோட பழகறதா பேசிக்கறாங்க. இதெல்லாம் சரிபட்டு வராது. இதெல்லாம் நிறுத்திட்டு வேலையைப் பாரு” பெரியசாமி சொல்லியனுப்பினார்.
இளங்கோ B.Sc (MicroBiology) முடித்திருந்தான். எந்த வேலையும் செய்யாமல் 3 மாதங்களாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். வனிதா ஒரு மகளிர் கல்லூரியில் பி.எஸ்ஸி(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து வந்தாள். இளங்கோ பெராயசாமி கண்டித்ததை பெரிதாக பொருட்படுத்தவில்லை. இளங்கோவின் அப்பா, அம்மா, தங்கை சரண்யாவிற்கு இளங்கோ காதலிப்பது தெரிய வந்தது. அவர்களும் இந்த வயதில் வேலை தேடி வேலையில் பேர் எடுக்க வேண்டும், காதலில் பேர் எடுக்க க்கூடாது என அறிவுரை வழங்கினார்கள்.
ஒரு வாரத்திற்கு பிறகு, மாலையில் இளங்கோ, வனிதா இருவரும் அனுமன் கோயில் பின்புறம் சந்தித்தார்கள். ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என ஐடியா கொடுத்தான் இளங்கோ. சென்னையில் இந்த சாதியெல்லாம் கிடையாது. அங்க போய் நம்மளோட புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றான். வனிதா அடுத்த வாரமே.ஒரு இரவில் பீரோவில் இருந்த நகைகளையும் பணத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு இவனைத்தேடி முள்காட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
இருவரும் சென்னைக்கு பேருந்தில் பயணம் செய்தார்கள். இளங்கோ- வனிதா ஓடிப்போனது ஊருக்கு தெரிய ஆரம்பித்தது. வெள்ளையப்மாளுக்கு கோபம் தலைக்கேறியது. காட்டுக்கூச்சலிட்டாள். பெரியசாமியின். உறவினர்களும், வேலையாட்களும் இளங்கோ வீட்டிற்கு வந்து இளங்கோவின் தாய் தந்தையரை மிரட்டினர்.
சரண்யா இளங்கோவின் ஒரே அக்கா. திருமணமாகி பக்கத்து ஊரில் வசித்து வந்தாள். சரண்யா கர்ப்பமாக இருக்கும் செய்தி கேட்டு இளங்கோ மற்றும் வனிதா சரண்யாவை பார்க்க வரப்போவதாக வெள்ளையம்மாளுக்கு செய்தி கிடைத்தது.
ஒருவர் பின் ஒருவராக இளங்கோ ஊருக்கு வந்திருக்கும் சேதியை சொல்ல வெள்ளையம்மாள் கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.
“இப்படி ஒரு பொண்ணு பொறந்துச்சுங்கறதையே நான் மறந்துடறேன். அவன், அவ இரண்டு பேரையும் வெட்டிட்டு வா..நீ போறியா? இல்ல நான் போகட்டுமா? “
பெரியசாமியை உசுப்பேத்தி விட்டாள் வெள்ளையம்மாள்.
பெரியசாமியும், வெள்ளையம்மாள் தம்பி சேகரும் அருவாள், கம்பு ஆயுதங்களுடன் சரண்யா வீட்டிற்கு இரவு 8 மணிக்கு சென்றனர். அங்கே இளங்கோ- வனிதா ஜோடி மாலை 4 மணிக்கே வந்து பார்த்து சென்று விட்டது.
‘அந்த ஓடுகாலி எங்கடி?’
‘தெரியாது. யார் நீங்க? எதுக்கு அரிவாளோட வநதிருக்கீங்க?’
“மரியாதையா சொல்லு. இளங்கோ எங்கேடி?” சேகர் இம்முறை கர்ஜித்தான்.
” தோ பாருங்க..ஏதோ பிரச்சினை பண்ண வந்திருக்கீங்க..என் புருஷனுக்கு ஃபோன் போட்டு சொல்லிடுவேன். மரியாதையா வெளியே போங்க. இங்க யாரும் இல்ல..” பயத்தில் உறைந்து போய் கால்கள் நடுங்க சரண்யா கூறினாள்.
‘விசாரிச்சுட்டு தாண்டீ வந்திருக்கோம். உங்க அண்ணன் எங்க?’ பெரியசாமி அதட்டினார்.
‘மரியாதையா போயிடுங்க. இங்கே யாரும் வரல. இப்ப போக போறீங்களா இல்ல போலீஸ கூப்பிடவா?’
‘என்னடி ஓவரா பேசறே? இளங்கோ எங்கடி இருக்கான்? எங்கே ஒளிச்சு வெச்சுருக்க? சேகர் இம்முறை அதட்டினான்.
போலீஸுக்கு ஃபோன் செய்யப் போவதாக ஃபோனை எடுத்தாள் சரண்யா.
மறுநொடி தன் கையிலிருந்த அரிவாளால் சரண்யா கழுத்தில் வெட்டினார் பெரியசாமி. ரத்தம் பொலபொலவென கொட்ட கீழே சரிந்தாள் சரண்யா.
சரண்யா உயிர் போகவில்லை என அறிந்த சேகர் இன்னும் தன் பங்குக்கு அரிவாளால் வெட்டினான். சரண்யா விற்கு முதல் வெட்டு கழுத்தில் பட்ட பிறகும் நினைவிருந்தது. அதன் பிறகு சேகர் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் வெட்ட துடிதுடித்து இறந்து போனாள் சரண்யா.
“மாற்றுக்கொலை. இளம் பெண் வெட்டிக்கொலை. ஓடிப்போன பெண்ணின் பெற்றோர் அட்டூழியம்” மறுநாள் செய்திகளில் தர்மபுரி சம்பவத்தை பற்றி எழுதியிருந்தார்கள்.
பெரியசாமி, வெள்ளையம்மாளையும், சேகர் மற்றும் அவனுடைய கூட்டாளிகளை கைது செய்தது காவல்துறை. சேகர் தன் அரசியல் நண்பர்கள் மூலமாக தன்னுடைய பெயரிலும், தன் கூட்டாளிகளின் பெயரிலும் கேஸ் வராமல் பார்த்துக் கொண்டான். தன்னை இந்த கேஸில் முக்கிய குற்றவாளியாக சேர்க்காமல் பாரத்துக் கொண்டான்.
2 ஆண்டுகளுக்கு பிறகு..
‘தர்மபுரி கொலை வழக்கில் தம்பதிக்கு தூக்கு தண்டனை’ – செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தாக செய்தி வந்தது.
குற்றத்தை செய்வதற்கு பெரிய காரணமாக இருந்தவர் வெள்ளையம்மாள். பெரியசாமிக்கும், சேகருக்கும் வெள்ளையம்மாள் கொலை வெறியை உண்டு செய்தார். அதன் மூலமாக சரண்யா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இவர்களது வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத சரண்யா கொலை செய்ய்ப்பட்டிருக்கிறார். இவர்களுடைய கொலைவெறியை தனியாக வீட்டிலிருந்த கர்ப்பிணிப் பெண் சரண்யா மீது காட்டியதால் இவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.
இவ்வழக்கில் முதல் பெரும் குற்றவாளியாக வெள்ளையம்மாளை அறிவித்தார். ஒரு குழுவினரை கொலைக்குற்றம் செய்ய தூண்டியவர், கொலை வெறி அனைவருக்கும் பரவ காரணமாயிருந்தவர் என்று வெள்ளையம்மாளுக்கும், பெரியசாமிக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
