சிறுகதை 16: தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் – சிவஷங்கர் ஜெகதீசன்
வளசரவாக்கம் சிக்னல் மதியம் 3 மணி.
போக்குவரத்து காவலர் தெய்வ நாயகம் மாரிமுத்து மதிய உணவு முடித்து சிக்னலுக்கு திரும்பியிருந்தார்.
கையில் ரெட் சிக்னல் லைட் வைத்து சமாளித்து கொண்டிருந்தார். பெண்ணுடைய ஸ்கூல் ஃபீஸ், மியுஸிக் கிளாஸ், வீட்டு வாடகை, ஈபி பில் என வரப்போகும் மாத செலவுகளை மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்.
100 மீட்டர் தொலைவில் வேகமாக ஒரு டூவிலர் சிக்னல் தாண்டப்போவதை உணர்ந்தார்.
கையில் உள்ள ரெட் சிக்னல் காட்டி டூவிலரை ஓரங்கட்ட சொன்னார்.
டூவிலரில் வந்த சதீஷ் நேரே நிறுத்த முடியாமல் பேலன்ஸ் இல்லாமல் அவரை கடிந்து கொண்டே நிறுத்தினான்.
டூவிலர் சாவியை உடனே எடுத்த தெய்வ நாயகம்…’இறங்கு…எறங்கு’ என சதீஷை இறங்க வைத்தார்.
மற்றவர்களுக்கு சிக்னல் கொடுத்து விட்டு சதீஷ் பக்கம் வந்தார்.
“அவசரமா போயிட்டிருக்கேன் சார். சாவியக் குடுங்க சார்”
“ஏன்டா…இந்த ஸ்பீட்ல போறியே? உன்னல்லாம் வச்சுட்டு என்னடா பன்றது?”
“சாரி சார். மருந்து வாங்க போயிட்டுருக்கேன். உட்ருங்க சார்”
“உன்ன உட்டா நேரா போயி மோதிருப்படா..உன்ன யெல்லாம் புடிச்சு ஃபைன் போட்டு உட்றாம….சோறு தண்ணியில்லாம ரெண்டு நாள் உள்ள வச்சா தான்டா புத்தி வரும் ”
“சார்..அவனவன்..இதே ரோட்ல கஞ்சா கடத்திட்டு போறாங்க..அவனுங்களலாம் வுட்டுறீங்க..என்ன மாதிரி புள்ளி பூச்சிங்க கிட்ட தான் உங்க வீரத்தை காட்றீங்க” சதீஷ் சொல்லி முடிக்கவும் தெய்வ நாயகம் சதீஷ் சட்டையை பிடிக்கவும் சரியாக இருந்தது.
தெய்வ நாயகம் ஒரு கையால் சதீஷின் சட்டையை பிடித்து சதீஷை மற்றொரு கையால் குட்ட ஆரம்பித்தார்.
“சார்…சார்..சார்…சாரி சார்…உட்ருங்க சார்…” சதீஷ் அலறினான்.
“இனிமே..ஓவர் ஸ்பீட்ல வண்டியோட பாத்தேன்…கேஸ் தான் போடனும்…போடா..” விட்டு விட்டார் தெய்வ நாயகம்.
சதீஷ் அலறியடித்து வண்டியெடுத்து ஓடினான்.
வீட்டுக்கு போன சதீஷ் யாருடனும் பேசாமல் அமர்ந்து கொண்டான். மகேஷ் வீட்டுக்கு வர அவனிடம் நடந்ததை சொன்னான்.
தெய்வ நாயகத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று துடித்தான்.
மூன்று முறை தான் குட்டினார் தெய்வ நாயகம். பெரிய அடியோ உள்காயமோ வலியோ இல்லை. ஆனால் அந்த வாலிப வயதிற்கே உரிய கோபத்தில் பழி வாங்க துடித்தான் சதீஷ்.
மகேஷ் தந்தை போக்குவரத்து காவலர் துறையில் இருப்பதால்… வளசரவாக்கம் சிக்னலில் இருப்பது தெய்வம் அங்கிள்…அப்பாவோட ஃபெரண்ட் தான் எனக்கூறி யிருந்தான்.
இன்டெர்நெட் மூலம் போக்குவரத்து காவலர்கள் வெப்சைட்டில் காவலர் தெய்வ நாயகத்தின் போட்டோ, திறன்பேசி எண், முகவரி கிடைத்தது.
ஒரு வாரம் ஆனது. தெய்வ நாயகம் வேலைகளில், குடும்ப சுமைகளில் மூழ்கினார். சதீஷ் சம்பவத்தையெல்லாம் மறந்திருந்தார்.
சதீஷ் மகேஷை வீட்டுக்கு அழைத்தான்.
தனக்குத்தானே முகம், கையென கட்டு கட்டி அமர்ந்திருந்தான் சதீஷ்.
தன்னை தெய்வ நாயகம் தாக்கியதால் தான் இந்த நிலைமைக்கு வந்ததாக போட்டோ எடுத்து பேஸ்புக், டிவிட்டர், வாட்சப், இன்ஸ்டாகிராம் எனப் போட போவதாகவும் தெய்வ நாயகத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறினான்.
“அந்தாள் உன்ன பெருசா அடிக்கவே இல்ல..நீயே தேவையில்லாம வம்புக்கு போயி பெருசா மாட்டிக்காத” எச்சரித்தான் மகேஷ்.
” எல்லாம் எனக்கு தெரியும் மச்சி..என் மூஞ்சில கட்டு போட்டிருக்கிறதால போட்டோ எடுத்து போட்டாலும் கண்டுபுடிக்க முடியாது. என் பேரும் …ஒவ்வொரு போஸ்டலயும் மாறிக்கிட்டே இருக்கும்” நகங்களை கடித்துக் கொண்டே பழி தீர்க்க முடிவு செய்தான் சதீஷ்.
“இவரை இந்த நிலைமைக்கு ஆக்கியவர் தெய்வ நாயகம் மாரிமுத்து. வளசரவாக்கம் சிக்னலில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் இவர் மக்களை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட சுரேஷின் நிலைமையை பாருங்கள். இவரை டிஸ்மிஸ் செய்யும் வரை ஷேர் செய்யுங்கள். தெய்வ நாயகத்திற்கு ஃபோன் செய்து எதிர்ப்பை தெரியுவிங்கள்…” என்ற வரிகளின் கீழ் தெய்வ நாயகத்தின் திறன் பேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது.
கடைசியாக…”தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” என முடித்து அதை ஃபேக் ஐடி மூலம் வாட்சப்பில் பரப்பினான் சதீஷ்.
‘மச்சி…எனக்கு இது சரின்னு தோணல…நீ மட்டும் மாட்டுன…ஸ்டேசன்ல வெச்சு காட்டு..காட்டுனு காட்டுவாங்க..”
“அதெல்லாம் மாட்ட மாட்டேன்..என் பேரும் வராது…என் மூஞ்சியும் தெரியாது”..
அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தெய்வ நாயகத்திற்கு ஃபோன், மெசேஜுகள் வர ஆரம்பித்தன.
“பச்சப்புள்ளன்னு பாக்காம இப்படி போட்டு அடிச்சுருக்கியே… உனக்கெல்லாம்…என்ன…பாகுபலின்னு நினைப்பா…”
“தெய்வமே…எங்கேயோ போயிட்டீங்க..
போக்குவரத்து துறையில இப்படி ஒரு ஆக்சன் கிங்கா? “
“காக்கி சட்டைய போட்டா பெரிய சிங்கம் னு நினைப்பா? அவன பெத்தவங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்? இந்த வயித்தெரிச்சல்லாம் உன்ன சும்மா விடுமா?”
“மாரி…அந்த பச்சப்புள்ள எப்படி இருந்து..இப்ப…நோஞ்சான் மாதிரி ஆயிடுச்சு…சரியான சோ..மாரி…”
“நமக்கு ஒரு கஷடம்னா…தெய்வத்துக்கிட்ட முறையிடலாம்…அந்த தெய்வமே…கஷ்டத்துக்கு காரணம்னா… யார்கிட்ட முறையிடறது”
“என்ன..பெரிய பாக்ஸிங் சேம்பியன்னு நினைப்பா…இந்தா வாங்கிக்கோ…”
“வேங்கை மவன்…தெய்வம்…சிக்னல்ல…ஒத்தையா…இருக்கேன்…தைரியம் இருந்தா…வாங்கலே…”
“தெய்வம் நின்னு…கொல்லும்னு சொல்வாங்களே… வளசரவாக்கம் சிக்னல்ல நின்னு குட்டியிருக்கு…”
“(பாடல்)மாரி….ரொம்ப.நல்ல மாரி….இல்ல..வேற..மாரி….மாரி…..”
இணையத்தில் மீம்ஸ்கள் பறந்தன. எல்லா கால்களையும், மீம்ஸுகளையும் படித்து அசதியானார் தெய்வ நாயகம்.
உயரதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்தது. சரியான பதில் கூற வேண்டும், “ஷோ..காஸ்” நோட்டிஸ் வீட்டுக்கு வரும் எனக் கூறினார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்சப் என தெய்வ நாயகத்தை இணையப் போராளிகள் துவைத்து காயப்போட்டனர்..திட்டித் தீர்த்தனர்.
தெய்வ நாயகம் ஒரு வாரத்திற்கு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தார்.
அதன் பிறகும் யாரோ ஒருவர் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஃபோன் செய்து கொதிப்பார்கள்.
‘யார் சுரேஷ்? அவன நான் எப்ப அடிச்சேன்’ தெய்வ நாயகம் குழம்பி போனார்.
ஒரு வாரத்தில் தெய்வ நாயகம் தவறு செய்ததாக காவல் துறையினரும் நம்பினார்கள். தெய்வ நாயகம் தானே வேலையை விடுவதாக எழுதிக் கொடுத்தார். பிறகு சமரசம் செய்யப்பட்டு வேலையை தொடர்ந்தார்.
ஆனால் இணையப் போராளிகளின் அழைப்புகள் அவரை விடுவதாக இல்லை. இந்த சங்கிலித் தொடர் மெசேஜுகளையும் யாரோ ஒருவர் ஃபார்வர்ட் செய்ய அது பல வருடங்களாக சோசியல் மீடியாக்களில் சுழன்று கொண்டேயிருந்தது.
வருடம் 2040.
தெய்வ நாயகம் தன் பேத்திக்கு ஸ்பூனில் இனிப்பை ஊட்டிக் கொண்டிருந்தார்.
ஃபோன் அடித்து, மறுமுனையில் இருந்தவர் பேசினார்…
“அந்த பச்சப்புள்ளைய..போட்டு இந்த அடி அடிச்சுருக்கியே…. நீயெல்லாம்….”
“நான் ரிட்டையர் ஆயிட்டன்மா” என்றார் தெய்வம்.
