சிறுகதை 15 : எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்

சிறுகதை 15 : எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்

நீலாங்கரை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அன்று ஓய்வு எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு வெளியே செல்ல தயாராகியிருந்தார். அவர் மகள் ரேஷ்மா, மனைவி அமுதா, மாமியார் லட்சுமியுடன் வெளியே செல்வதாக ப்ளான்.

சிறுகதை 16: எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்ரேஷ்மா கல்லூரி விடுமுறையில் சென்னை வந்திருந்தாள். வந்த நாள் முதல் ஈசிஆரில் உள்ள ஏதாவது ஓர் ரிசார்ட்க்கு சென்று நாள் முழுவதும் அங்கே ஜாலியாக பொழுதை கழிக்கவும் விதவிதமாக சாப்பிடவும் திட்டம் போட்டாள்.

‘நீ மட்டும் மால், ரிசார்ட் னு போயிட்டு வா. நாங்கல்லாம் அங்க வந்து என்ன செய்யப்போறோம்? வீணா செலவு செய்ய வேணாம்’ என்றாள் அமுதா.

ரேஷ்மா விடுவதாக இல்லை.

‘ப்ரீத்தியோட போறதா ப்ளான். அப்புறம் நாளைக்கு ப்ரீத்தியோட ஃபாரம் மால் போலாம், இன்னிக்கு உங்களோட ரிசார்ட் னு ப்ளான மாத்தியாச்சு’…

‘ரொம்ப சீன் போடாம வர்றத பாருங்க… நீங்க இதுவரைக்கும் சாப்பிடாத ரெசிப்பீஸ் இந்த ரிசார்ட்ல இருக்கு’ என்றாள் ரேஷ்மா.

ராஸ்குமாரும், அமுதாவும், லட்சுமியும் தயாரானார்கள்.

ரேஷ்மா அலைகளில் கால் நினைப்பது, பிறகு குளிப்பது என விதவிதமான ட்ரஸ்களை எடுத்து வைத்திருந்தாள். குறிப்பாக 3/4.

இந்த 3/4 பேன்ட்கள் சிலருக்கு தான் கத்திதமாக இருக்கின்றன. ரேஷ்மாவை 3/4 இல் பார்க்கும் போதெல்லாம் சுரேஷ்…‘உனக்குன்னே அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருக்கு’ என்பான்.

வெள்ளை நிற டாப்ஸ், வெள்ளை நிற 3/4 பேண்ட், சில மினி ஷார்ட்ஸ் எடுத்து பையில் வைத்துக் கொண்டாள்.

ஒரு பெரிய நீல நிற Gown எடுத்துக் கொண்டாள். போட்டோகிராபரை கூப்பிட்டு இன்று ஒரு போர்ட்ஃபோலியோ எடுத்து விடலாமா என ரவிச்சந்திரன் என்னும் ‘ஸ்டில்ஸ்’ ரவியை அழைத்தாள்.

ரவி 12 மணிக்கு ஈசிஆரில் உள்ள ரிசார்ட்க்கே நேரே வருவதாக சொன்னார்.

ராஜ்குமார் தானே டிரைவ் செய்வதாக சொன்னார். டிரைவர் பழனியை தன் டொயோட்டா காரை துடைத்து விட்டு கிளம்புமாறு சொல்லி விட்டு போனில் அன்றைய வேலையை துவங்கினார்.

சுரேஷ் ரேஷ்மாவை அழைத்தான்.

‘நானும் வர்றேன்’

‘என்ன விளையாடறியா? நாங்க பேமிலியா வெளிய போறோம். அப்பாக்கு மட்டும் நீ போன் பண்ணது தெரிஞ்சதுன்னா, நீ காலி’ என்றாள் ரேஷ்மா.

ஏற்கனவே சுரேஷை கண்டித்து தன் மகளோடு இனி பார்த்தால் ஸ்டேஷனில் வைத்தே கொன்று விடுவேன் என மிரட்டியிருந்தார் ராஜ்குமார்.

சுரேஷ் இதற்கெல்லாம் அசரவில்லை. அவன் வயது இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட வைக்கவில்லை.

‘ரவிய வர சொல்லியிருக்கேன் போட்டோஸ்க்கு. எடுத்துட்டு வாட்சப்ல அனுப்பறேன்..இப்ப ஆள் விடு.’ என்றாள் ரேஷ்மா.

‘நானும் ரிசார்ட் க்கு வர்றேன்..உன் பேமிலிக்கு நான் இருக்கிறதே தெரியாம பார்த்துக்கிறேன். உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன்’ என்று சிரித்தான் சுரேஷ்.


‘வெரி..ஃபன்னி. ஓகே. நான் அப்புறம் கூப்பிடறேன்’ என்று கட் செய்தாள் ரேஷ்மா.

ப்ரீத்தி தானும் வருவதாக சொல்லியிருந்தாள். ப்ரீத்தி தன்னுடைய மேக்கப்பிற்கு உதவி செய்வாள், அது தவிர அவளுக்கு செம ஃபோட்டோகிராபி சென்ஸ் என்பதால் அவளை வீட்டிற்கு வரச் சொன்னாள் ரேஷ்மா.

காலை 10:30 மணிக்கு ப்ரீத்தி வர ரேஷ்மா வீடு களை கட்டியது.

ராஜ்குமார் மிகவும் தன்மானம், சுயகௌரவம் பார்ப்பவராகவே வளர்ந்தவர். அளவாகவே பேசுவார். சிறு வயதில் உறவினர்களிடம் பேச்சில் வந்த சண்டைகளில் நிறைய பாடம் கற்றுக் கொண்டார். வயது ஏற ஏற பொறுமை, நிதானம் அதிகமானாலும் சுய கௌரவம் உள்ளுக்குள் இருக்கும் மிருகத்தை அவ்வப்போது வெளியே கொண்டு வந்தது.

ஐவரும் காரில் கோவளத்தில் இருக்கும் ரிசார்டிற்கு பயணம் செய்தார்கள். ராஜ்குமார் காரை ஓட்ட அமுதா முன்சீட்டில் அமர்ந்து கொள்ள
பின் சீட்டில் ரேஷ்மா, ப்ரீத்தி, லட்சுமி அமர்ந்து கொண்டார்கள்.

தன்னுடைய பக்கமிருந்த கார் கண்ணாடியை இறக்கி விட்டார் ராஜ்குமார். இயற்கையான வெளிக்காற்று அவருக்கு அவசியமாக இருந்தது.

10 நிமிட பயணத்தில் அக்கரை அருகே ஒரு கேடிஎம் பைக் குறுக்கே அவர்களை ஓவர்டேக் செய்வதும் பின் விட்டு கொடுப்பதும் என இருந்தது.

ரேஷ்மா கண்டுபிடித்து விட்டாள். அது சுரேஷ் தான். தன்னுடைய பைக்கில் காருக்கு முன்னும் பின்னரும் வித்தை காட்டிக் கொண்டிருந்தான்.

‘டாக்..உன்ன தான் வரவேணாம்னு சொன்னேன்ல’ போனை எடுத்து சுரேஷுக்கு வாட்சப் செய்தாள்.

சுரேஷ் காரை ஓவர்டேக் செய்வதும் பின்னர் ஜகா வாங்கி பின் செல்வதுமாக இருந்தான்.

கடுப்பானார் ராஜ்குமார், ஆனால் குடும்பத்தோடு செல்லும் பயணம் என்பதால் காட்டிக் கொள்ளவில்லை.

அக்கரை சிக்னலில் சுரேஷ் கேசுவலாக ரோட்டில் எச்சில் துப்பினான்.
அது அவனுடைய கேடிஎம் பின் இருந்த ராஜ்குமார் மேல் பட்டது.

அவருடைய கண்களில் எச்சில் பட்டதால் கோபத்துடன் கத்த ஆரம்பித்தார் ராஜ்குமார். சுரேஷ் நடந்தது புரிந்து வேகமாக ஆக்சிலெரேட்டரை கிளப்பி பறந்தான்.

சுரேஷ் ஹெல்மெட் போட்டிருந்ததால் ராஜ்குமாருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ரேஷ்மா, ப்ரீத்தி பதட்டமானார்கள். ரேஷ்மா மொபைலை எடுத்து 5,6 மெசேஜ்களில் சுரேஷை திட்டித் தீர்த்தாள்.

கார் ரிசாட்டை அடைந்திருந்தது. ராஜ்குமாருக்கு அந்த பார்ட்டி மூடை‌ சுரேஷ் கெடுத்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

ராஜ்குமார் குடும்பத்தினரிடம் ஈவினிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என்று சொல்லி விட்டு நீலாங்கரை கிளம்பினார். போகும் வழியெல்லாம் எச்சில் துப்பிய அவமானத்தை பற்றிய சிந்தனையே இருந்தது. ஒரு நாள் கையில் மாட்டுவான் என நினைத்தார்.

நீலாங்கரை காவல் நிலையத்தில் சுரேஷை ஓவர் ஸீபீடிங், வீலிங் என ஈசிஆரில் வித்தை காட்டியதற்காக பிடித்து உட்கார வைத்திருந்தனர்.

ஸ்டேஷன் வாசலில் கேடிஎம் பைக்கை பார்த்த ராஜ்குமார் ஆர்வத்துடன் உள்ளே சென்றார்.

“யார் பைக் அது?’ ரைட்டரை கேட்டார்.

‘ஓவர் ஸ்பீடிங் கேஸ் சார். உள்ளே உட்கார வெச்சுருக்கோம்’ என்றார் ரைட்டர்.

ஆர்வமிகுதியில் உள்ளே சென்ற ராஜ்குமார் சுரேஷை பார்த்து ஆச்சர்யப்பட்டார். நம் பெண்ணை இவன் இன்னும் ஃபாலோ செய்து கொண்டிருக்கிறான் என புரிந்து கொண்டார்.

லத்தி கொண்டு வரப்பட்டது. லாக்கப்பிற்குள் சுரேஷை அழைத்துப் போய் பொளந்து கட்டினார். ஒவ்வொரு அடிக்கும் உயிர் போய் திரும்பி வந்தது போலிருந்தது சுரேஷீக்கு.

தன் மேல் எச்சில் துப்பியது, தன் பெண்ணை ஃபாலோ செய்வது தான் முக்கிய காரணமென்றாலும்…அது எதையும் காட்டிக் கொள்ளாமல் ரோட் வையலேஷனுக்கு அடிப்பது போலவே காட்டிக் கொண்டார். அதை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார்.

சுரேஷ் அடங்கிப்போய் ஒரு மூலையிலிருந்தான்.

திடிரென ராஜ்குமாருக்கு ஒன்று ஞாபகம் வந்தது.

எச்சிலை வாயில் திரட்டி அவனைப்போலவே அவனுடைய கண்ணில் துப்பினார்.

சுரேஷ் கண் இமைகளை மெதுவாக திறந்து ‘சைக்கோ வாய்யா நீ?’ என்று நினைத்துக் கொண்டான்.

பழிக்கு பழி வாங்கிய திருப்தியில் சிறு புன்முறுவலோடு திரும்பி நடந்தார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.