வாசிப்பனுபவம்: அம்பறாத்தூணி – கபிலன் வைரமுத்து
கபிலன் வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி சிறுகதைத்தொகுப்பு. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு.
வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்கள் கதைகளாக புனையப்பட்ட 15 கதைகள். இரவு முழுவதும் சிரத்தையாக ஒரு பள்ளி மாணவனை போல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
1.வள்ளி
1806 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சி காலகட்டத்தில் நடந்த செய்திகளை வைத்து புனையப்பட்ட கதையாக வருகிறது.
தன் காதலன் ஒய்மாவின் சாவிற்கு காரணமான சின்னானைக் கொல்ல தக்க சமயம் பார்க்கிறாள் வள்ளி. ஆயுதக்கிடங்கில் எப்படியும் சின்னானை கொன்று விடலாம் என குறுவாளோடு செல்லும் வள்ளி சின்னானின் மார்பை பிளந்தாள். திடிரென வந்த அகழிகாவலன் உமரை வள்ளி எதிர்பார்க்கவில்லை. அவனையும் கொல்ல முயலும் போது வள்ளிக்கு பாதுகாப்பு தரச் சொல்லி வந்ததாக இளவரசியின் மெய்காப்பாளர் உத்தரவிட்டதாக சொல்கிறார்.
சின்னானோடு ஆயுதக் கிடங்கில் தன் காதலன் ஒய்மாவை பிய்த்தெறிந்த பீரங்கியையும் சேர்த்து புதைக்கும் படி வள்ளி கேட்டுக் கொள்ள அதை உமர் செய்து முடிக்கிறார்.
அழகாக புனையப்பட்ட கதையாக அமைந்திருந்தது.

2. ‘கோஸ்ட்’ குருநாதன்
திருமணமாகப்போகும் ஜோடி குருநாதன்-பூங்கோதை. பூங்கோதைக்கு எழுத்தாளர், வசனகர்த்தா என திருமணப்பத்திரிக்கையில் குருநாதன் பெயருக்கு பக்கத்தில் எழுத வேண்டும் என்ற விருப்பம்.
ஆனால், குருநாதன் பெயர் திரையில் உதவியாளர்கள் வரிசையில் தான் இதுவரை வந்திருக்கிறது.
குருநாதன் இயக்குநர் அரிச்சந்திரதாசனிடம் கெஞ்ச ‘கூடுதல் வசனம் குருநாதன்’ என புதிய படத்தில் டைட்டிலில் வருகிறது.
தப்புதப்பாய் புள்ளி விவரங்கள் வசனங்களில் தந்து எக்குத்தப்பாக மாட்டும் குருநாதன், அமைச்சர் மாணிக்கவாசகத்துக்கு ‘சிலப்பதிகாரம் எழுதிய சீர்காழி கோவிந்தராஜனே’ என எழுதி கொடுக்க , அமைச்சர் அதை பேசும் வீடியோவை பூங்கோதை ஆட்டோவில் பார்த்து பெரிதாக சிரிப்பதும், அவள் பெருமையில் சிரிக்கிறாள் என குருநாதன் நினைப்பதும், அந்த தவறான புரிதலை பூங்கோதை தவறை திருத்த விரும்பாமல் விடுவது அருமை.
3. வாமன்
வானம் பொய்யாமொழி தன் தாய் திலகசாந்தியிடம் அன்று நடந்தவற்றை மறைக்க முயலும் கதை.
பொய்கள் பற்றி எழுதும் போது எப்போது பொய்கள் இனிமை, எப்போது அவை துர்நாற்றம் என வகைப்படுத்தியிருந்தார்.
“நல்லெண்ண பொய்களுக்கு மலைத்தேன் வாசம்.
கேளிக்கை பொய்களுக்கு புகையிலை வாசம்.
நம்பினோரை வஞ்சிக்கும் துரோகப்பொய்களுக்கு துர்நாற்றம்.
மலைத்தேன் வாசம் புகையிலையாக மாறி பின் துர்நாற்றமாக திரிந்த போது திலகசாந்திக்கு விவாகரத்து நடந்தது” ❤️❤️❤️
“உண்மைக்கு பக்கத்தில் இருக்கும் போது தான் பொய் பாதுகாப்பாக இருக்கிறது” ❤️❤️
“சுருக்கமான பொய்கள் நீண்ட நாள் உழைக்கும். விரிவான பொய்கள் விரைவில் உடையும்” ❤️
4. யாழ்மதி
“மதங்களை கடந்த மனிதம்” என்ற வீதி நாடகத்திற்கு நூலகத்தில் பதாகைகள் வரைய ஆரம்பிக்கிறாள் யாழ்மதி. அவளுக்கு அந்த இரவு என்ன நடந்தது என்று செல்கிறது கதை. அண்மையில் நடந்த ஓர் பல்கலைக்கழகச் சம்பவத்தை ஓர் கதையாக புனைந்திருக்கிறார்.
5. அறிவுடைநம்பி
கார்ட்டூன் தொடர்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் தன் தந்தை அறிவுடைநம்பி, நிஞ்சா ஹட்டோரியின் தமிழ் மொழி மாற்றுத் தொடருக்கு பின்னணி குரல் கொடுக்க வேண்டும் என அறிவுடைநம்பி யின் மகன் ஆசை கொள்கிறார். அந்த ஆசை நிறைவேறியதா என கதை போகிறது.
6. பின்க்மேன்
யூடுயுபில் ப்ராங்க்ஸ்டர் வீடியோக்களை பதிவிடும் பிங்க்மேன் என்னும் பசுபதி. தனக்கு ஒரு ஒளிப்பதிவு டீமை வைத்துக் கொண்டு ஏடிஎம், வணிக வளாகங்கள் என ப்ராங்க் வீடியோக்களை ஒளிப்பதிவு செய்யும் பிங்க்மேனுக்கு வரும் பழைய ஞாபகங்கள் இந்த சிறுகதை.
‘Memory is a nasty Prankster’ ❤️
7. மணியமுதன்
மணியமுதன் தன் நண்பர்களுடன் மொட்டை மாடியில் விளையாடிய நெகிழிப் பந்து கிரிக்கெட் பற்றிய கதை. ‘மொட்டை மாடி’ கிரிக்கெட்டின் விதிமுறைகளை எழுதிய விதம் அட்டகாசம்.
காலங்கள் கடந்து அமேரிக்காவில் திருமணமாகி வேலை செய்து கொண்டிருக்கும் போதும் தன் சூளைமேட்டு வீட்டை, மாடியை கூகுள் மேப்பில் பார்த்துக்கொள்ளும் மணி ❤️.
8. இருதய பிரகாசம்
‘ஆண் குழந்தை’ வேண்டும் என நினைக்கும் வானொலி செய்தி வாசிப்பாளர் இருதய பிரகாசம். பெண் தேவதை குழந்தையாக வேண்டும் என நினைக்கும் மனைவி. பிறந்த பெண் குழந்தை ‘கார்லஸை’ ஆணாகவே நினைத்து வளர்க்கும் இருதய பிரகாசம், அவளின் பூப்பெய்திய செய்தி எப்படி எடுத்துக் கொண்டார் எனகதை போகிறது.
9. மூலா
31 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. பசலை என்ற வார்த்தையை அறிந்து கொள்ள விரும்பும் மூலா.
“கன்று முண்ணாது காலத்தினுள் படாது
நல்லான் றீன்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமக் கவினே”
என்ற பாடலில் வரும் பசலை எனும்சொல்லை கண்டுபிடித்து…பிரிவு நேரும் போது உடலில் ஏற்படும் வினோதமான மாற்றங்கள் பசலையாக இருக்க வேண்டும் என கண்டுபிடித்து அதை தெரிந்து கொள்ள நியுரோ தேசத்துக்கு அனுமதி பெற்று செல்லும் கதை.
“நிலவில் எடை இழந்த போது எதையும் இழந்த உணர்வில்லை. பிரிவில் எடை இழந்த போது எல்லாவற்றையும் இழந்த தாய் உணர்ந்தேன்.”
10. சிவநேசன்
1876-1878 வரை சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய உணவுப் பஞ்சம், அதில் ரொட்டித்துண்டுகளை சாப்பிட்டு மீதியை பாக்கேட்டில் வைத்துக்கொள்ளும் மேஜர் வில்லியம் ஹுப்பர், அதை வாங்கி பசி போக்கிக் கொள்ள நினைக்கும் சிவநேசன். மேஜர் பாடச் சொன்னவுடன் சிவநேசன் பாடும் பாடலின் வரிகள் அருமை.
11. எல்விஸ்
பப்புவா நியு கினியா தீவுப் பகுதியில் தனியார் ஆழ்கடல் சுரங்கப்பணியில் ஈடுபட்டிருக்கும் எல்விஸ் கிரேடன் மற்றும் அவருடைய குழுவினர் ஆக்சிலரி கட்டர், பல்க் கட்டர் உதவியுடன் பணியைத் தொடங்குகிறார். கடலில் இருக்கும் கணிம வளங்களை பீப்பாய்களில் அடைத்துக் கொண்டிருக்கும் போது சிறு அதிர்வுகள் ஏற்பட்டு மீண்டும் தொடர்கிறார்.
அவர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எதிராகவும், சூழலியலுக்கு எதிராகவும் இந்தப் பணியை தொடர விரும்பாமல் தலைமை செயலர் கெவினுக்கு ஓர் அறிக்கை அனுப்புகிறார்.
12. நாகமன்
கொத்தமங்கலம் வடிவமைப்பதில் வல்லவனான நாகமன் புலித்தேவன் அரசவையில் பணிபுரிகிறான். ஆற்காடு நவாபின் உளவாளி நாகமன் என்பது தெரிய வர நாகமன் மற்றும் அவனது வீட்டைச் சுற்றி ஊர்க்காவல் படையினர் குவிகிறார்கள். நாகமன் குடும்பத்தோடு புலித்தேவன் காவலர்களிடமிருந்து தப்பித்தானா அல்லது புலித்தேவனின் படைகளால் கொல்லப்பட்டானா என்று கதையை எடுத்துச் சென்றிருக்கிறார்.
13. ரய்யான்
நிரஞ்சனாவுக்கு ரய்யான் எழுதும் கடிதமாக இந்த சிறுகதை. சமூகவலைதளங்கள் தனிமனித அந்தரங்களில்
நிலா, ஆழ்கடல் சுரங்கம், மனிதர்களின் அந்தரங்கம் இவை தான் எதிர்கால உலக பொருளாதாரம் என்று ரய்யான் நிரஞ்சனாவிற்கு எழுதுவது போல் வருகிறது. உண்மை தான்.
இது ஒரு feel good story ஆக இருந்தது.
14. டிமிட்ரி
கதை 1899 இல் நடக்கும் சம்பவமாக வருகிறது. புடர்கா சிறைக்கைதிகள் டிமிட்ரி, கார்ப், அவகூம் மூவரையும் சைபீரிய சிறைக்கு மாற்ற திட்டம் வகுக்கப்படுகிறது. சைபீரிய சிறைக்கு மாற்றம் செய்யும் முன் சிறையிலிருந்து தப்பிக்க மூவரும் திட்டம் தீட்டுகிறார்கள். கால்வாய்கள் வழியே இரவில் தப்பிக்கும் போது அவகூம் நெற்றியில் குண்டடி பட்டு இறக்கிறான். கார்ப், டிமிட்ரி கனடா செல்லும் கப்பலை வந்தடைகிறார்கள். அங்கே கார்ப் கைது செய்யப்படுகிறான். கப்பலுக்குள் ஒரு வழியாக சென்று விடும் டிமிட்ரி தப்பித்தாரா, காவலர்களிடம் சிக்கி உயிரழந்தாரா என கதை செல்கிறது.
மூவரும் செய்த குற்றங்கள், சிறைக்கு வந்த விதம் என ஒரு detail ஆன எழுத்து இந்த கதையில் இருந்தது.
15. சீவகன்
மஞ்சவேலம்பட்டி ஜமீன்தார் சீவகன் வஞ்சிக்கொடியை பெண் பார்க்க மாட்டு வண்டிகட்டி செல்கிறார். தந்தை பெரிய ஜமீன்தார் அழகர்சாமி காசநோயில் இறக்க, காண்டாமிருக வண்டுகள் தென்னந்தோப்பை அழித்துக் கொண்டிருக்க அதை எப்படி தடுப்பது என யோசித்தவாறே செல்கிறார். சீவகனின் பாகவதர் போன்ற தலைமுடியை வைத்து ‘பாகவதரு ஜமீன்தாரு’ என்றே அழைக்கிறார்கள். வஞ்சிக்கொடியை மணம் புரிந்தாரா…காண்டாமிருக வண்டுகளிடமிருந்து தென்னந்தோப்பை காப்பாற்றினாரா என கதை போகிறது.
1945 இல் நடக்கும் கதையாக வருகிறது. கிராமத்து வட்டார வழக்கு மொழியில் இந்த கதையை எழுதிய விதம் அருமை.