சிறுகதை 14: பெருமூச்சு – சிவஷங்கர் ஜெகதீசன்

சிறுகதை 14: பெருமூச்சு – சிவஷங்கர் ஜெகதீசன்

ஜெயராஜ் காலை நடைப்பயிற்சி சென்று வந்ததில் இருந்து சோர்வாக காணப்பட்டார். மாலை ஆறு மணிக்கு தொலைக்காட்சி யில் வரும் பக்தி பாடல்களையும், அதைத் தொடர்ந்து வரும் செய்திகளையும் கேட்பார். இன்று படுக்கையை விட்டு எழமுடியவில்லை.

தசை வலியும், முதுகு வலியும் அதிகமாகியிருந்தது. மருமகள் உமா காபி கொண்டு வந்து கொடுத்தார். மாமனார் காலையிலிருந்து படுக்கையை விட்டு எழாமலிருப்பது அவளுக்கு சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

மகன் ரவி இன்னோரு அறையில் கணினியில் மூழ்கியிருந்தான். கொரோனா பொதுமுடக்கத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க பழகியிருந்தான்.

ரவி – உமாவின் நான்கு வயது மகன் ஆதித்யா டேப்லெட்டில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு மாமா? காலைலேர்ந்து பெட்லயே இருக்கீங்களே?” என்றாள் உமா.

“ஒண்ணுமில்லேமா. கொஞ்சம் முதுகு வலி, தசை வலி கால்ல” என்றார் ஜெயராஜ்.

டைனிங் டேபிளில் வைத்து சாப்பாடு அப்படியே இருப்பதை பார்த்தாள் உமா.

“மத்தியானம் சாப்பிடலயா மாமா?”

“நான் வேணா இப்ப சூடா காபி போட்டு தரட்டுமா?” – உமா.

“சரிம்மா.இரு ஹாலுக்கு வரேன்” எழுந்து ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தார் ஜெயராஜ்.

மனைவி உமா, ரவிக்கு மாமா உடம்பு சரியில்லை என சொல்ல ரவி ஹாலுக்கு வந்தான்.

“எதுக்கு தேவையில்லாம காலைல, சாயங்காலம் வாக்கிங் போறீங்க? அதுதான் வலிய கிளப்பி விட்டுடுச்சு” என்றான் ரவி.

சரியாக இரும ஆரம்பித்தார் ஜெயராஜ்.

“என்னப்பா ஆச்சு? சந்தேகமாக கேட்டான் ரவி.

“ஒண்ணும் இல்லப்பா. கொஞ்சம் முதுகு வலி அவ்ளோ தான்”

“ஆஸ்பத்திரி போலாமா மாமா?” என்றாள் உமா.

உமா ரவியை கவலையுடன் பார்க்க ரவி டீஷர்ட் – பேண்ட் க்கு மாறினான்.

ஜெயராஜ் க்கு இது கொரோனாவாக இருக்குமோ என சந்தேகம். ஆனால் பெரிய ஜுரம் இல்லை. தொண்டை அரிப்பு, இருமல், சளி இருந்தது. ஆனால் மகனிடம் சொல்லவில்லை.

சொன்னால் ரவி வாக்கிங் போவதற்கு வானுக்கும் பூமிக்கும் குதிப்பான். உமாவுக்கு சந்தேகம் அதிகமானாலோ… ஜெயராஜின் உடல்நிலை மோசமானாலோ தஞ்சாவூரில் இருக்கும் ரவியின் தம்பி சந்திரன் வீட்டுக்கு ஜெயராஜ் அனுப்பிவைக்கப்படுவார்.

உமா ஹெல்மெட் எடுத்துக் கொடுக்க ரவி ஜெயராஜை அழைத்துக்கொண்டு குரு மருத்துவமனை சென்றான். டாக்டர் ஜெயராஜுக்கு அத்தனை டெஸ்ட்களும் எழுதி கொடுத்தார். கொரோனா ஸ்வாப் டெஸ்டகள் எடுக்கப்பட்டது.

பாராஸிடமால், அசித்ரோமைசின், ஜிங்க் மாத்திரைகள், விட்டமின் சி மாத்திரைகள் ஜெயராஜுக்கு எழுதிக் கொடுத்தார் டாக்டர் சிவசுப்பிரமணியம்.

“நாளைக்கு ரிசல்ட் காக வெயிட் பண்ணுவோம். ஜுரம் அதிகமாக இல்ல. இப்ப இவரை அழைச்சுட்டு போகலாம். நாளைக்கு லேப்லேர்ந்து கால் பண்ணுவாங்க”.

“தேங்க்யு டாக்டர்” என்று எழுந்தான் ரவி.

ஜெயராஜுக்கு உடனடியாக ரிசல்ட் தெரியாதது என்னமோ செய்தது. கொரோனா உறுதியானால் இவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என பயப்பட ஆரம்பித்தார்.

சரியாக தூங்காமல் புரண்டு புரண்டு ஒரு வழியாக 5 மணி நேரம் தூங்கினார் ஜெயராஜ்.

அடுத்த நாள் ரவியின் தொலைப்பேசிக்கு கால் வந்தது. ரவியின் முகம் மாறியது.

ஜெயராஜுக்கு கொரோனா உறுதியானது.
உமா ஆதித்யாவை ஹாலில் இருந்து அழைத்துப்போய்  பெட்ரூமில் தள்ளிவிட்டு வெளியே வரக்கூடாது என சத்தம் போட்டு விட்டு ஹாலுக்கு வந்தாள்.

“அப்பாவ அட்மிட் பண்ண சொல்லிருக்காங்க. வேன் 5 மணிக்கு வந்துடுமாம். துணி, மொபைல், டூத்பெஸ்ட் னு எடுத்து வெச்சுட்டு ரெடியா இருக்க சொன்னாங்க. ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போலாம்னு சொல்றாங்க” என்று இருவருக்கும் சொல்லி முடித்தான் ரவி.

ஜெயராஜூக்கு பயம் வர ஆரம்பித்தது. சரி நம் விதி அவ்வளவு தான். மனைவி இறந்த பிறகும் 5 ஆண்டுகள் கடவுள் கூடுதலாக கொடுத்தானே போதும் என யோசனையில் ஆழ்ந்தார். ஜெயராஜூக்கு இரண்டாவது மகன் போனில் ஆறுதல் சொல்லி தைரியமாக போய் வர சொன்னான்.

ஆம்புலன்ஸ் சத்தம் கேட்க ஜெயராஜ் எழுந்து துணிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார், ரவி இல்லாமல்.

தனியறை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது. இரவு உணவாக உப்மா, முட்டைக்குழம்பு கொடுக்கப்பட்டது.

ஜெயராஜிற்கு ஜுரம் அடிக்க ஆரம்பித்திருந்தது. அன்றிரவு தூங்க முடியவில்லை. அடுத்த நாள் டூத் பேஸ்ட், குளியல் சோப், 8 மாஸ்க் வழங்கப்பட்டது. காலையில் கபசுரக்குடிநீர், நெல்லித்தண்ணீர் என சரியான நேரத்தில் வழங்கினார்கள்.

இரண்டு நாட்கள் மாத்திரை கபசுர குடிநீர், மஞ்சள் பால், சுண்டல் என நோய் எதிர்ப்புக்கும் ஆரோக்கியத்திற்கும் தினமும் அக்கறையுடன் கொடுக்கப்பட்டது.

ஐந்தாவது நாள். ஜெயராஜீக்கு ஜுரம், இருமல் அதிகமானது. சளிக்கு தனியாக கெர்ச்சீப் தேவைப்பட்டது. ரவி போன் செய்ததும் அவை கொடுக்கப்பட்டது.
ரவி வரக்கூடாது என்று மருத்துவனையில் தெளிவாக கூறி விட்டார்கள்.

ஏழாவது நாள். மூச்சுத்திணறலை உணர்ந்தார் ஜெயராஜ். சரியாக தூங்க முடியவில்லை. நடைப்பயிற்சி குறைவாக தூரத்திற்கு நடக்க தினமும் வந்து கூப்பிடுவார்கள். இன்று அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. செவிலியர்கள் கவலையானார்கள். மூச்சுத்திணறலை கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நரக வேதனை அனுபவித்தார் ஜெயராஜ். முதுகு தண்டு வலி, முட்டி வலி, பிரண்டு படுக்க முடியாமல் வலி பின்னியெடுத்தது. ஜூரம், இருமல், சளி வேறு. ரவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரவி, உமா, சந்திரன் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

பத்தாம் நாள். மூச்சுத்திணறல் குறைந்திருந்தது. சளி, ஜூரம் கட்டுக்குள் வந்தது. சரியாக ஏழு மணிநேரம் தூங்கினார். அட்மிட் ஆன பின் முதல் முறையாக ரத்தப்பரிசோதனை எடுக்கப்பட்டது.

“கவலைப்படாதீங்க தாத்தா. ரெண்டு தடவை நெகட்டிவ் வந்துடுச்சுன்னா போதும். வீட்டுக்கு போயிடலாம்” என்றார் சிஸ்டர்.

“எப்ப ரிசல்ட் வரும்?”

“இன்னிக்கு சாயங்காலம். லாவண்யா சிஸ்டர் சொல்வாங்க”.

மாலை லாவண்யா சிஸ்டர் டேபிள் சுற்றிக்கூட்டம். சமூக இடைவெளி காற்றில் போனது.

லாவண்யா சிஸ்டர் ஒவ்வொரு பேராக நெகட்டிவ் பாசிடிவ் ரிசல்ட் படிக்கத் தொடங்கினார்.

ஜெயராஜ் ஆவலுடன் எழுந்து அவர் அருகில் நின்றார். ஒரு கூட்டமே அவருக்கு முன் நின்றுக்கேட்டுக்கொண்டிருந்தது.

“ஹரிப்பிரசாத் நெகடிவ்…ஆஷிஷ் பாசிடிவ்.. சரவணன் நெகட்டிவ்..கனகசபாபதி நெகட்டிவ்.. ஜெயராஜ் பாசிடிவ்…”

“ஸாரி…ஸாரி… கனகசபாபதி பாசிடிவ்.. ஜெயராஜ் நெகடிவ்”

சிறு புன்னகையுடன் பெருமூச்சு விட்டார் ஜெயராஜ்.







Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.