சிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்
விஜய்சாந்தி அபார்ட்மெண்ட்ஸ், வடபழனி, சென்னை.
காலை மணி 11.
கொரோனா லாக்டவுன் ஆரம்பித்த முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரம் தொடங்கியிருந்தது.
பிருந்தாவின் சமையல் வேலைகள் இந்த ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியிருந்தன. திங்கட்கிழமை காலை கணவர் மனோஜூம் மகன் ஆதித்யாவும் ஹாலில் அமர்ந்திருப்பது ஒரு புதிய பார்வையை, வித்யாசமான உணர்வை பிருந்தாவிற்கு கொடுத்தது.

மனோஜ் கொரோனா செய்திகளை கேட்டவாறும் ஆதித்யா ஃப்ரீஃபயர் வீடியோ கேமிலும் பொழுதை கழித்தனர்.
‘இப்படி 24 மணி நேரம் கொரோனா நியுஸ் பாக்குறதுக்கு எனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணலாம்ல?’ பிருந்தா மனோஜை பார்த்து கேட்டாள்.
காய்கறிகளை கழுவி கொடுப்பது, வெங்காயம் வெட்டிக் கொடுப்பதை தவிர மனோஜ் இத்தனை வருடங்களில் எந்த சமையல் உதவியும் பிருந்தாவிற்கு செய்ததில்லை.
பிருந்தா சத்தம் போட ஆரம்பித்ததும் ஆதித்யா ஹெட்போன் மாட்டிக்கொண்டு பெட்ரூமிற்கு சென்று விட்டான்.
‘அடியே..என்னடி ஓவரா பேசுற? இப்ப வந்து பண்றேன் பாரு சமையல். சமையல் வாசனைக்கே பக்கத்து ஃப்ளாட் எல்லாம் வந்து லஞ்ச் டைம்ல கதவ கட்டுவாங்க பாரு’
மனோஜ் சமையலறைக்குள் நுழைந்தான். வெங்காயம், கேரட் சேர்த்து குழம்பு வைக்க முடிவு செய்தான்.
ஏற்கனவே பிருந்தா சாதம் வைத்து விட்டாள். குழம்பு, பொறியல் செய்யலாம் என மனோஜ் கேரட்களை குழப்புக்கு ஏற்றவாறு வட்டமாக நறுக்கினான்.
பிருந்தா சிரித்துக் கொண்டே கிச்சன் வந்தாள்.
‘அடியே..ஆனாலும் பொம்பளைங்களுக்குலாம் என்ன நினைப்பு, ஏதோ உங்களுக்கு தான் சமையல் செய்ய தெரிஞ்ச மாதிரியும் நாங்கலாம் சோறு திங்க மட்டும் தான் லாயக்குன்னு நினைப்பு’…
‘நாங்க கெரவுண்டலயும் ஆல்ரவுண்டர், சமையல்லயும் ஆல்ரவுண்டர்’
‘ ஆமா ஆமா…ஆல்….ரவுண்டர்’…என கையால் காற்றில் வட்டம் போட்டு காட்டி இன்னும் வேகமாக சிரித்தாள் பிருந்தா.
மனோஜ் விடுவதாக இல்லை.
கோஸ் எடுத்து வெட்டி பொறியல் செய்யவும் தயாரானான்.
பெரிய அடுப்பில் வாணலி வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து காய்கறிகளை அதில் போட்டான்.
துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்தான். எலுமிச்சை சைசில் புளியை உருட்டி எடுத்து அதை தண்ணீரில் கரைத்து அதை வாணலியில் ஊற்றினான். உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள், பெருங்காயம் என கலந்து கொதிக்க வைத்தான்.
இதில் புலி அளவுக்கு அதிகமாக சேர்ந்திருப்பது அப்போது அவனுக்கு தெரியவில்லை. பிருந்தா ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியை மட்டுமே கரைத்து குழம்புக்கு பயன்படுத்துவாள்.
மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு அதுவே அதிகமாக இருக்கும். குழம்பு வாசனை தூக்கியது.
ஆதித்யா சமையலறை வந்து பார்த்தான்.
‘சூப்பர் பா…உங்கிட்டேருந்நு இத எதிர்பாக்கவேயில்ல பா’
‘ம்ம். அப்பாவுக்கு என்னென்ன விஷயம் சமையல்ல தெரியும், தெரியுமா? ஏதோ இவளுக்கு தான் சமையல் தெரிஞ்ச மாதிரி அலட்டிக்கிட்டிருந்தா இவ்ளோ நாள்’
பிருந்தா முறைக்க ஆரம்பித்தாள்.
‘பாப்போம்..டேஸ்ட் பார்ப்போம்..அப்புறம் பேசலாம்’ என்றாள் பிருந்தா.
‘கண்ணா..நீ டைனிங் டேபிள்ல போயி உட்காரு. அப்பா சுடச்சுட டீஷ் எடுத்துட்டு வர்றேன்’
பிருந்தா பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
‘என்னடி லுக்கு…இன்னொரு வாணலிய எடுத்து கொடு அப்பளம் பொறிக்க’
அப்பளம், வெள்ளரிக்காய் பச்சடி, முட்டை கோஸ் பொறியல், கேரட் வெங்காயம் போட்ட குழம்பு தயாரானது.
ஆதித்யா விற்கும், தனக்கும், பிருந்தாவிற்கும் டைனிங் டேபிளில் பரிமாறினான் மனோஜ்.
அடுப்பின் அருகிலேயே ஒரு மணி நேரத்திற்கு மேல் சமைத்தால் உடம்பெல்லாம் வியர்வையில் நனைந்து போயிருந்தான்.
துண்டு எடுத்து தன் வியர்வைகளை துடைத்துக்கொண்டு கை கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தான்.
‘இனிமே…அப்பா சமையல் தான்..எப்படி இருக்குன்னு சொல்லு. என்னமோ இவளுக்கு தான் தெரிஞ்ச மாதிரி…செஞ்சோம்ல…’
‘சூப்பர்பா நீ’ என்றான் ஆதித்யா.
ரெண்டு பேரும் ஹைஃபை அடித்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
‘அப்பா’ என்றான் ஆதித்யா.
‘என்னடா?’
‘புளிக்குது பா…’
‘குழம்புனா புளிக்க தாண்டா செய்யும். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிடறல்ல..அப்படி தான் இருக்கும்…’
‘எங்க இங்க காட்டு’ பிருந்தா ஒரு பிடி குழம்பும் சாதமும் பிசைந்து சாப்பிட்டாள்.
புளியை அள்ளிக் கொட்டி புளித்தண்ணீர் ஊற்றியதில் புளியின் சுவை அதிகமாகவே இருந்தது.
ஆதித்யா தடாடை நகர்த்தி வைத்து விட்டான்.
‘அப்பா..சாப்பிடமுடியப்பா…நல்லா இல்லப்பா’
‘நல்லாருக்கும் சாப்பிடுறா’ சமாளித்தான் மனோஜ்.
‘இப்படியா புளியை அள்ளி கரைப்பீங்க? கொஞ்சமா கரைக்கணும்’ முனகினாள் பிருந்தா.
‘பொறியல்லயும் உப்பு ஜாஸ்தியா இருக்கு’
‘எங்க இப்படி காட்டு’ சாப்பிட்டு பார்த்து அதிர்ந்து போனான் மனோஜ்.
மனோஜ் முகம் தொங்கி போயிற்று.
பச்சடியை வைத்து சமைத்து சாப்பிட்டு எழுந்தார்கள்.
அடுத்த நாள் காலை 11 மணி.
‘என்ன இன்னிக்கும் உட்கார்ந்து நியுஸ் பார்த்ததுட்டு இருக்கீங்க. சமைக்க வாங்க’ என்றாள் பிருந்தா.
‘நீ தான் ஆல்ரவுண்டர்னு ஒத்துக்கறேன். என்னை வுட்டுரு’ கையெடுத்து கும்பிட்டான் மனோஜ்.
ஆதித்யாவை பார்த்தாள் பிருந்தா.
அவனும் இருகை சேர்த்து தன்னையும் விட்டு விடும்படி கும்பிட்டான்.
பிருந்தா பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள்.
கொரோன காலத்தில் இன்று ஒவ்வொரு நாலும் ஒரு யுகமாகத்தான் கழிகிறது . அன்றாட வாழ்க்கையில் அனுதினமும் நடக்கும் நிகழ்வுகள்
சிறுகதையாக பதிவிட்டுள்ளார் .
சமையல் என்பது பொதுவாக பெண்கள் ராஜ்யம் , ஆனால் சில சமயங்களில் பெண்களால் முடியாத சமயங்களில் ஆண்கள் உதவி செய்வது பல வீடுகளில் சகஜம் தான்
ஆனாலும் ஒரு பெண் சமையல் செய்வது போல ஆணால் செய்ய இயலாது தான் , ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான்
ஆனால் பெரிய ஹோட்டல் களில் ஏன் பெண்களை சமையல் காரியங்களுக்கு ஈடு படுத்து வைத்து இல்லை.
கேள்வி பட்ட வரையில் எல்லா ஹோட்டல்களிலும் ஆண் கள்தான் அரசாட்சி செய்கிறார்கள் .
LikeLike