சிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்
மணி ஒன்று. செம்மலர் மதிய உணவு எடுத்து வந்து பரிமாறினாள்.
‘சூடா குடிக்க வெந்நீர் போடட்டுங்களா?’
‘இப்ப வேணாம். ரெண்டு மணிக்கு மாத்திரை போடும் போது போடு’ என்றான் வித்யுத்.
வித்யுத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வாரமாக சஞ்சனா போஃன் எடுக்கவில்லை. WhatsApp மெசேஸ்களுக்கு பதிலில்லை.தன்னை கழட்டி விட்டுவிட்டாளோ என நினைக்க ஆரம்பித்தான்.
செம்மலர். முனியம்மாளின் பெண். முனியம்மாள் இறந்த பிறகு செம்மலர் தான் வேலை செய்யும் பொறுப்புகளை
எடுத்துக் கொண்டிருக்கிறாள். +2 வரை நன்றாக படித்தாலும் B.Sc (Computers) வரை மட்டுமே படிக்க வைத்தாள் முனியம்மாள்.

‘நம்மகிட்ட எங்கம்மா காசு இருக்கு இஞ்சினியரிங் படிக்க வைக்க? இது போதும்டா நமக்கு’ என செம்மலருக்கு சொல்லி சொல்லி B.Sc படிக்க வைத்தாள்.
ரேவதி வித்யுத்தின் தாய். ரேவதிக்கு செம்மலரை ரொம்ப பிடிக்கும். முனியம்மாள் சில நாட்கள் செம்மலரையும் வீட்டு வேலை செய்யும் வீடுகளுக்கு அழைத்துப் போவாள்.
‘கருப்பா இருந்தாலும், எவ்வளவு அமைதியா, நல்லபடியா பேசுது இந்த பொண்ணு’ , என செம்மலரை பற்றி வித்யுத்திடம் புகழ்ந்து தள்ளுவாள் ரேவதி.
‘செம்மலர் போல பொண்ணு தான் நான் என் பையனுக்கு பார்ப்பேன்’ என்று முனியம்மாளிடம் சொல்லுவாள்.
வித்யுத் செம்மலரை பார்க்கும் போதெல்லாம் நமுட்டு சிரிப்பு சிரிப்பான். கருவாச்சி என வெறுப்பேற்றுவான். அது செம்மலரின் காதுகளுக்கே கேட்கும்படி சொல்வான்.
‘கலர் என்ன கலர், குணம் தான்டா கடைசிவரைக்கும் நிக்கும், அது அந்த பொண்ணுகிட்டே இருக்கு’ என்பாள் ரேவதி.
முதல்முறை 15 வயதில் வித்யுத்தை பார்த்தாள் செம்மலர். முதல் முறை பார்வையிலேயே அவனுடைய அழகில் மயங்கி விட்டாள். வித்யுத் இருக்கும் ரூமிற்கு வந்து துணிகளை மடித்து வைக்கிறேன் என்று அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள்.
சில நாட்கள் வித்யுத் வெளியே செல்வதற்குள் அவனைப் பார்க்க ஆசைப்பட்டு காலையிலேயே முனியம்மாளை துரிதப்படுத்தி வித்யுத்தை பார்க்க வந்து விடுவாள்.
‘இந்த கருவாச்சிய போய் எனக்கு ரெகமண்ட் பண்றியே? என் ரேஞ்ச் என்ன? என் டேஸ்ட் என்ன? ‘ வித்யுத் ரேவதியைப் பார்த்துக் கேட்டான்.
‘நிறம், அழகுல்லாம் கொஞ்ச நாள்ல அலுத்துப் போயிரும் தம்பி. அப்பறம் செவப்பு, கறுப்பு எல்லாம் ஒண்ணு தான்” என்பாள் ரேவதி.
30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு துணிகளை மடிப்பாள் செம்மலர். 30 நிமிடங்களும் கடைக்கண் பார்வையில் அவ்வப்போது வித்யுத் பார்க்க மாட்டானா, பேச மாட்டானா என ஏக்கத்துடனேயே இருப்பாள். வித்யுத் லேப்டாப்பிலோ புத்தங்களிலோ மூழ்கியிருப்பானே தவிர இவளை கண்டு கொள்ள மாட்டான்.
ஆனால் இப்போது நிலைமையே வேறு. இரண்டு மாதத்திற்கு முன் நியு இயர் கொண்டாட்டங்களுக்கு மணாலிக்கு சஞ்சனாவோடு சென்ற போது, பேரஷூட் ரைடில் பழுதடைந்து தவறி விழுந்ததில் கால்கள் செயலிழிருந்தன.மணாலி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பிய போது, கால்கள் செயலிழந்ததை அறிந்து கதறி அழுதான்.
சஞ்சனா ஆறுதல் கூறி அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள்.
தன் தாய் ரேவதி இறந்த பின், தனிமையில் இருக்கக்கூடாது என்பதற்காக தன் மாமா வித்யுத்தையும், சஞ்சனாவையும் வெகேஷன் சென்று வாருங்கள் எனக்கூறி இருந்தார். மணாலியில் நடந்த விபத்து வித்யுத்தின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது.
சக்கர நாற்காலியில் வீட்டிலேயே இரண்டு மாதங்களாக வாழ்கிறான்.
பெரும் வலியெடுத்தது வித்யுத்திற்கு.
‘மலர்….’ என்று கத்தினான்..
செம்மலர் ஓடி வந்து வலி மாத்திரைகள் கொடுத்து, காலை நீட்டி விட்டு வலி நிவாரணி களையும் எடுத்து தேய்த்து விட்டாள்.
இம்முறை வலது காலின் வலி அதிகமாகியிருந்தது.
‘புது பேண்ட தோய்க்கட்டுங்களா?’
‘ அதெல்லாம் வேணாம். துணி மடிச்சு வெச்சுட்டு, பெருக்கிட்டு கிளம்பு’
ரேவதி இறந்த பின் செம்மலருக்கு வித்யுத்திடம் கேட்டு கேட்டு வேலை செய்வது கஷ்டமாயிருந்தது.
வீடே பல நேரங்களில் அசுத்தமாக இருக்கும். காலையில் வெஜ் சான்ட்விச் செய்கிறேன் என்று காய்கறிகள் நறுக்கி,ஏதோ சாப்பிட்டு விட்டு ஆஃபிஸுக்கு ஓடுவான் வித்யுத். செம்மலரிடம் ஒரு சாவி கொடுத்திருந்தான். அவள் வந்து சமையலறை, பெட்ரூம் என சுத்தப்படுத்துவாள்.
இப்போது நிலைமையே வேறு. மற்ற வீடுகளை விட்டு விட்டு செம்மலர் முழு நேரமும் வித்யுத்திற்கு உதவியாக இருந்தாள்.சஞ்சனா அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
சஞ்சனா போஃன் எடுக்காதது உறுத்தலாகவே இருந்தது வித்யுத்திற்கு. அதே போல் இந்த இரண்டு மாதங்களில் செம்மலர் மீதான மதிப்பு அதிகமாகியிருந்தது.
ஓடி ஓடி எல்லா வீட்டு வேலைகளையும் செய்தாள். சமைத்தாள், பரிமாறினாள், துணிகள் மடித்து வைத்தாள், ஆதரவாக உடனிருந்தாள்.
வெறுமையாக உணர்ந்தான் வித்யுத். அழகை விட குணம் தான்டா முக்கியம் என ரேவதி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
மணி இரண்டு. மாத்திரைகள் மற்றும் வெந்நீருடன் வந்தாள் மலர்.
‘இந்தாங்க, மாத்திரை போட்டுக்கோங்க’ என்றாள்.
‘மதியம் மட்டுமே போடற அந்த பெயின் கில்லர்….’
‘இங்க இருக்கு’ என ப்ரவுன் கலரில் இருந்த கேப்சுயுலை காட்டினாள்.
நிமிர்ந்து அமர்ந்து மாத்திரைகளை போட்டுக்கொண்டான் வித்யுத்.
‘தேங்க்ஸ் மலர். இவ்வளவு நாள் உன்னை ஏதாவது காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுக்கோ’ என்று அவள் கைகளை பிடித்தான்.
‘அய்யோ. அதெல்லாம் இல்ல’
‘நான் ஒண்ணு கேட்கட்டுமா?’
‘ம்ம்’
‘வாழ்க்கை முழுக்க என் கூட வருவியா?’
செம்மலர் வார்த்தையில்லாது புன்னகைத்தாள். தலையாட்டினாள்.
வித்யுத் அவளை நேரே நிறுத்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.