சிறுகதை 11: மேய்ப்பர் – சிவஷங்கர் ஜெகதீசன்
கண்ணகி நகர், துரைப்பாக்கம், சென்னை.
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்” – சங்கீதம் 23:1
பைபிள் வசனத்தை வாசித்தாள் எஸ்தர். மருத்துவ படிப்பை கனவாக கொண்டு படித்து வந்தாள்.
வடிவான முகம், மாநிறம், சரியாக வகிடு எடுத்து வாரிய முடி, கைகளில் கண்ணாடி வளையல், கம்மல் என அணிந்து கொண்டு நீட் தேர்வுக்கான கோச்சிங் செல்ல தயாரானாள்.
இந்த ப்ரத்யேகமான கோச்சிங் சென்டரில் படிப்பவர்கள் தான் நல்ல கட்ஆஃப் மதிப்பெண்களுடன் நல்ல தரமான மருத்துவ கல்லூரிகளில் சேர்கிறார்கள்.
தந்தை சாமுவேல் ஆளுங்கட்சியின் தொண்டன். எஸ்தரின் தாய் ஆரோக்ய மேரி வீடுகளில் வேலை செய்து வந்தாள். சாமுவேலுக்கு பெரிதாக சம்பாத்தியமில்லை. மேரி சம்பாத்தியத்தில் மட்டுமே குடும்பம் ஓடியது.
‘டாக்டருக்கு படிக்க வைக்கலாம் நம்மளால முடியாதும்மா. நீ பி.எஸ்.ஸி படி. நல்ல எடுத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கறோம். அவ்ளோ தான் எங்களால முடியும்’ என்றாள் மேரி.

‘இவ ஒருத்தி, புள்ள ஆர்வமா கிளம்பும் போது…நீ கிளாசுக்கு போம்மா..அப்பா தலய வித்தாவது உன்ன டாக்டராக்கிடுவேன்’ என்ற சாமுவேல் எஸ்தரை வழியனுப்பி வைத்தார்.
எஸ்தருக்கு நடந்து போகும் வழியெல்லாம் யோசனை. நமக்கு நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் கூட கொறஞ்சது வருஷத்துக்கு ₹50000 ஆகுமே, அந்த செலவை ஏத்துக்க என்.ஜி.ஓ க்களிடம் கேட்கலாமா? எப்படியும் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரிகளிலேயே கிடைக்க வேண்டும்.
‘என் தேவனே..என் தேவனே. என்னை ஆசிர்வதியும்.’
“கர்த்தாவே..உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருக்காலும் வெட்கமடையாதயடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்”
சங்கீதம் 31:1
எஸ்தர் மனதில் பிரார்த்தனை செய்தபடியே நீட் கோச்சிங் சென்டர் வந்தடைந்தாள். பல நாட்கள் இரவு பகலாக படித்து மாக் எக்ஸாம்ஸ் எழுதி உண்மையான நீட் பரிட்சையும் எழுதி முடித்து விட்டாள்.
நீட் ரிசல்ட் வந்தது. சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சேரவே எஸ்தருக்கு விருப்பம்.
மார்க் வெளியாகும் நேரம் படபடப்போடு இருந்தாள் எஸ்தர். அப்பாவின் திறன் பேசியை வாங்கி ரிசல்ட் பார்த்தாள்.
575/750 என்று கட்ஆஃப் மார்க் வந்திருந்தது. இந்த கட்ஆஃப்க்கு கண்டிப்பாக சென்னையிலேயே மருத்துவ சீட் கிடைக்கும் என உறவினர்கள் வாழ்த்தினார்கள்.
நண்பர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என பலரும் வாழ்த்தினார்கள். மேரி மருத்துவ படிப்பிற்கு ஆண்டிற்கு ஆகும் செலவை பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.
சாமுவேல் நீ கவலைப்படாதே எப்படியும் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துருவோம்..நீ பயப்படாம தூங்கு என ஒவ்வொரு நாளும் தைரியம் கொடுத்தார்.
அன்று மாலை சோழிங்கநல்லூரில் ஆளுங்கட்சியின் கட்சிக்கூட்டம். 500 பேருக்கு மேல் வந்திருந்தனர்.
சாமுவேல் ஓடியாடி நாள் முழுவதும் கூட்டத்திற்காக வேலை செய்திருந்தான்.
மீன்வளத்துறை அமைச்சர் விஜயகுமார் வழக்கம் போல் தனது பாணியில் எதிர்கட்சிகளை நக்கலடிக்க கூட்டத்தில் இருந்த எதிர்கட்சியினரிடையே சலசலப்பு தொடங்கியது.
சிறிது நேரத்தில் எதிர்க்கட்சியின் தொண்டர்கள் மீன்வளத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சேர்களை உடைக்க ஆரம்பித்தனர்.
செருப்புகள் மேடை நோக்கி வீசப்பட்டன. பதட்டத்தை உணர்ந்து போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது எதிர்கட்சியினர் வீசிய கல் சரியாக சாமுவேலின் பின்னந்தலையில் தாக்கியது. மிகப்பெரியதாக சத்தம் எழுப்பிய சாமுவேல் கீழே விழந்து இறந்து போனார். சாமுவேல் இறந்த செய்தி மேரி, எஸ்தருக்கு தெரிந்து மாநாடு நடந்த இடத்திற்கு ஓடி வந்து அழுதார்கள்.
சாமுவேல் இறந்ததோடு தன் மருத்தவராகும் கனவும் தொலைந்தது போனதாகவே எஸ்தர் நினைத்தாள்.
சாமுவேல் இறந்த செய்தி முதல்வர் ராஜேஸ்வரிக்கு தெரிவிக்கப்பட்டது. துடிப்பான தொண்டனான சாமுவேல் பற்றி முதல்வரும் அறிந்திருந்தார்.
அடுத்த நாள் முதல்வர் ராஜேஸ்வரி சாமுவேலின் உடலுக்கு இரங்கல் தெரிவிக்க வருவார் என அறிவிக்கப்பட்டது.
முதல்வருக்காக செக்யூரிட்டி அந்த தெருவிலேயே பலப்படுத்தப்ட்டிருந்தது.
மேரி, எஸ்தர் காலையிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.
முதல்வரின் கார்கள் அணிவகுத்து வந்து நிற்க அந்த இடமே பரபரப்பானது.
கண்டிப்புக்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் பேர் பெற்றிருந்த முதல்வர் மேரியை முதலில் தேற்றினார். பிறகு எஸ்தரிடம் வந்தார்.
‘அழாதேம்மா. நீ தான அம்மாக்கு தைரியம் சொல்லணும். நீயே அழலாமா?’
பதில் சொல்லாமல் மேலும் தேம்பி தேம்பி அழுதாள் எஸ்தர்.
‘என்ன படிக்கிற’ என்றார் முதல்வர் ராஜேஸ்வரி.
‘+2 முடிச்சுருக்கேன். நீட் எக்ஸாம் எழுதியிருக்கேன் மேடம்’ என்றாள் எஸ்தர்.
‘எந்த காலேஜ் படிக்கணும்னு ஆசைப்படற?’
‘ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்’
கேட்டுவிட்டு தலைமைச் செயலாளரை அழைத்து எதோ சொல்லிவிட்டு சென்று விட்டார் முதல்வர்.
கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் சாமுவேலை நல்லடக்கம் செய்தனர்.
ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது.
அதில் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜில் வந்து சேர அட்மிஷன் லெட்டர் இருந்தது. அரசே கல்விக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்ளும் என்ற முதல்வரின் கடிதமும் இருந்தது.
மிகுந்த சந்தோஷத்தில் பைபிளை பிரித்தாள் எஸ்தர்.
“அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டு போய் விடுகிறார்” – சங்கீதம் 23: 2
என்றிருந்தது.
அருமை
LikeLike