சிறுகதை 9 : அலங்கரிக்கப்பட்ட பொய்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்
வைகைச் செல்வன் ஒரு தனியார் பள்ளியில் தமிழாசிரியர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கே உண்டான சாபக்கேடாக எவ்வளவு உழண்டு வேலை செய்தாலும் சம்பளம் மிகவும் குறைவு. ஒவ்வொரு மாதமும் சொற்ப தொகையே மாதக்கிடைசியில் மிஞ்சியிருக்கும். மற்ற பாடங்களை எடுப்பவர்கள் டீயுஷன் எடுத்து கொஞ்சம் சம்பாதித்து விடுவார்கள். இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. பணத்தை சம்பாதிக்க பல வழிகளில் எப்போதும் முயல்பவராய் இருந்தார்.
அதே பள்ளியில் ராஜ் கணக்கு பாடமும் சுரேஷ் ஆங்கிலமும் எடுத்துக் கொண்டிருந்தனர்.
ராஜ் ஒரு வகுப்பு முடித்து ஸ்டாஃப் ரூமிற்கு வந்தார்.
‘சார். இந்த ஞாயிற்றுக்கிழமை சட்டசபை தேர்தலுக்கு 3 நாள் வொர்க். ₹2500 பேமெண்ட் ஒரு நாளைக்கு. கேள்விப்பட்டீங்களா?’
‘இல்லை சார் எந்த ஸ்கூல்ல?’
‘நம்ம நேஷனல் ஸ்கூல்ல..’

‘நானே அதப்பத்தி உங்ககிட்ட கேட்கணும் நினைச்சுட்டு இருந்தேன் சார்’ என்றார் வைகைச் செல்வன்.
‘மூணு நாள் வித் ஃபுட் ₹2500.’ வோடர்ஸ் லிஸ்ட் சரி பார்க்கணும் முதல் நாள். பூத் கோ ஆர்டினேஷன் பண்ணனும். பூத் ரூம்ல இருக்கிற ஸ்டாஃப் ஸோட தேர்தல் அமைதியாக நடக்க கோ ஆர்டினேட் பண்ணனும். Evening குயின் மேரீஸ் காலேஜ்க்கு போய் டோட்டல் வோட்டர்ஸ், சீல் பண்ண வோட்டிங் மெஷின்ஸ் லாம் எடுத்துட்டு போவாங்கல்ல அப்ப இந்த ஸ்கூல் லிஸ்ட் அவங்களுக்கு கொடுத்துட்டு வரணும்’. என்று விளக்கினார் ராஜ்.
‘ஓ..கண்டிப்பா நானும் வர்றேன் சார். யார்கிட்ட அப்ளை பண்ணனும்?’
‘நம்ம நேஷனல் ஸ்கூல் ஞானப்பிரகாசம் சார் கிட்ட ஃபார்ம் வாங்கி ஃபில் பண்ணி கொடுத்தா போதும். வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாளைக்கு டீயுட்டி’
‘இன்னிக்கு ஈவினிங் போறேன். வர்றீங்களா?’ ராஜ் அழைத்தார்.
‘ஓகே சார். உங்களோடயே வந்துடறேன்’
ராஜ் இந்த தேர்தல் பணியை சுரேஷிடமும் சொல்ல அவரும் தேர்தல் பணிக்கு விருப்பம் தெரிவித்து இவர்களுடன் வந்தார்.
ஆனால் மூவருக்கும் இந்த தேர்தல் பணிக்கு செல்வதில் ஒரு சிக்கல் இருந்தது.
ஸ்கூலுக்கு வெள்ளிக்கிழமை லீவு போட வேண்டும். தலைமை ஆசிரியர் ராஜராஜனுடைய கோபமும் கண்டிப்பும் அனைவரிடமும் தினமும் கொப்பளிக்கும் குணமம் மூவரும் அறிந்ததே. அவரிடம் எப்படி லீவு சொல்வது?
புதன்கிழமை சுரேஷ் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று சொந்த ஊர் செல்வதாய் சொன்னார். லீவு மறுக்கப்பட்டது.
ராஜ் ஸ்டாஃப் ரூமிற்கு வந்தார்.
‘வைகை, இந்தாள்கிட்ட உண்மைய சொல்லிலாம் லீவு வாங்க முடியாது. வைஃப்க்கு கிட்னி பிராப்ளம், ஹாஸ்பிடல் போனும்னு சொல்லி தான் பெர்மிஷன் வாங்கப் போறேன். அதுவும் வெள்ளிக்கிழமை காலைல கால் பண்ணி சொல்லப் போறேன். அப்ப தான் இந்தாள் கிட்ட லீவு கிடைக்கும்’ என்றார் ராஜ்.
‘நானும் வெள்ளிக்கிழமை தான் ஃபோன் பண்ணி லீவு சொல்லலாம்னு இருக்கேன் ராஜ். இப்பல்லாம் உண்மைய சொன்னா லீவு கிடைக்காது.’ என்றார் வைகை.
வெள்ளிக்கிழமை வந்தது. தன்னை வளர்த்த பாட்டி ஊரில் இறந்து விட்டதாகவும் அதற்கு கண்டிப்பாக போக வேண்டும் என்றும் சுரேஷ் எப்படியோ லீவு வாங்கி விட்டார்.
வைகை ராஜராஜனுக்ககு ஃபோன் செய்தார்.
‘சொல்லுங்க வைகை’
‘சார். டூவிலர்ல போகும் போது வழுக்கி விழந்துட்டேன்….இது…accident sir. கீழ விழம் போது கைல பேலன்ஸ் பண்ணப்போய் கைல அடி. டாக்டர் ஒரு வாரம் பெட் ரெஸ்ட் சொல்லிருக்காங்க.’
‘ஓகே. புதன்கிழமைக்குள்ள வரப்பாருங்க. டேக் கேர்.’ என்று ஃபோனை வைத்து விட்டார் ராஜராஜன்.
மூவருக்கும் சந்தோஷம். மூன்று நாள் தேர்தல் பணிகளுக்கு சென்றார்கள். செம சாப்பாடு, ஸ்நேக்ஸ் இதற்கு நடுவில் பூத் ரூம் கோ-ஆர்டினேட் செய்வது.
மூன்று நாள் முடிவில் பணம் கைக்கு வந்ததும் சந்தோஷத்தில் இருந்தார் வைகைச் செல்வன். இந்நிக்கி நைட்டும் நம்ம செலவிலேயே நன்றாக சாப்பிட வேண்டும் என நினைத்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் முடிந்தவுடன் ஒரு கன்ஸாலிடேட்டட் லிஸ்ட் வைகைச்செல்வனிடம் கொடுக்கப்பட்டது. அதை குயின் மேரிஸ் கல்லூரியில் உள்ள மற்றொரு தேர்தல் ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க சொன்னார்கள்.
வைகைச் செல்வன் தேர்தல் வண்டிகளிலேயே சென்று குயின் மேரீஸ் காலேஜ் சென்றடைந்தார்.
சென்னை மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அறையில் ஒவ்வொரு பகுதியின் கண்ஸாலிடேட்டட் லிஸ்டை ஒவ்வொருவராக கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள்.
தன்னுடைய முறை வந்ததும் உள்ளே சென்ற வைகைச்செல்வன் உறைந்து போய் நின்றார்.
அந்த அறையில் கன்ஸாலிடேட்ட் வோட்டர் லிஸ்ட்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் ராஜராஜன்.