சிறுகதை 7 : ‘அட்ரஸ்’ பாலாஜி – சிவஷங்கர் ஜெகதீசன்
காவேரி காரனர் டீ ஸ்டால், அருணாச்சலம் ரோடு, சாலிகிராமம், சென்னை. காலை 10 மணி.
செமக்கூட்டம். சுமார் 200 பேர் இருப்பார்கள். ஓரமாக அமர்ந்து டீ, வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலாஜி. காலையிலேயே எழுந்து தயாராகியிருந்தான். ராஜேஷ் இன்னும் எழுந்திருக்கவேயில்லை.
டீ ஸ்டாலில் இருந்து 5 நிமிடத்தில் உள்ள ஓர் ரெஸ்டெண்ஸியில் இருவரும் தங்கி சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்கள். பாலாஜி ராஜேஷூக்கு போன் செய்தான்.
‘சொல்றா’

‘எழுந்தியா? இல்லையா?
‘இப்ப தான்டா எந்திரிருக்கிறேன். என்னை விட்டுட்டு கிளம்பிட்டயா?’
‘எத்தனை தடவ கத்தறது? நீ எழுந்திருக்கிற மாதிரியே தெரியல.இங்க செம கூட்டம்.’
‘என்னடா சொல்ற?ஆடிஷன் நடக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?’
‘தெரியல. நீ சீக்கிரம் வா.’
ராஜேஷ் போன் கட் செய்துவிட்டு அவசரமாக டீ ஸ்டாலுக்கு விரைந்தான்.
காவேரி கார்னர் எதிரே உள்ள ஸ்டுடியோவில் ஒரு உச்ச நட்சத்திரம் நடிக்கும் படத்தில் நடிக்க நடிகர்/நடிகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஊரில் இருந்து சினிமா வெறியுடன் நடிகனாக வேண்டும் என வந்தவன் ராஜேஷ். முதலில் சிறு வேடங்களில் நடித்து சினிமாவை கற்றறிருந்து நடிகனாகவும் இயக்குநராகவும் வர வேண்டும் என்ற வெறியுடன் வந்தவன் பாலாஜி.
இருவருக்கும் சினிமா தான் கனவு, லட்சியமாக இருந்தது.
ராஜேஷ் காவேரி கார்னர் வந்த போது பாலாஜி மனோவுடன் பேசிக் கொண்டிருந்தான். மனோ பல வருடமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தான்.
‘பாஸ்…இந்த படத்துல மட்டும் ஒரு சின்ன சீன் கிடைச்சா போதும். அது வெச்சே எங்கேயோ போயிடலாம்.’ என்றான் மனோ.
‘நல்ல வேஷமே கிடைக்கும் பாஸ், கவலைப்படாதீங்க’ இது பாலாஜி.
‘வாடா..நல்லவனே..ஒன்பது மணி ஆடிஷனுக்கு 10:30 வர்றாம் பாருங்க…’ என மனோவிற்கு ராஜேஷை அறிமுகம் செய்தான் பாலாஜி.
‘டீ சாப்பிட்டு உள்ளே போய் பேர் கொடுத்துட்டு வா’ .
பாலாஜி சொன்ன மாதிரி பேர் கொடுத்துவிட்டு டோக்கன் நம்பர் வாங்கி வந்தான் ராஜேஷ்.
அந்த படத்தின் இயக்குநரின் கார் ஸ்டுடியோவிற்கருகே வந்தது.
காவேரி கார்னர் டீக்கடையே பரபரப்பானது. அந்த இயக்குநரை பார்க்க, வணக்கம் வைக்க அந்த காரை ஒரு கூட்டம் நெருங்கியது.
ஆடிஷன் துவங்கியது. ஒரு துணை இயக்குநர் பேடில் உள்ள பெயர்கள் ஒவ்வொன்றாக வாசித்து அவர்களை அழைத்துப்போனார்.
மனோ ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி பேசும் வசனத்தை பேசி நடித்திருந்தார். ராஜேஷ் ‘நாயகன்’ படத்தில் கமல் பேசும் வசனத்தையும், பாலாஜி ‘சிட்டிசன்’ படத்தில் அஜித் பேசும் வசனத்தையும் பேசி நடித்திருந்தார்கள். அது தவிர அவர்களுக்கு வசனம் சொல்லித்தரப்பட்டது. அதை நடித்து காட்டினார்கள்.
மதியம் 1 மணியளவில் போன் செய்து பிறகு கூப்பிடுவதாக வந்திருந்த அனைவரையும் திரைப்படக்குழு அனுப்பி வைத்தனர்.
மதிய உணவு மூவரும் ஒன்றாக சாப்பிட்டனர். பிறகு ஒன்றாகவே மூவரும் நடிக்க வாய்ப்புகள் தேடினார்கள்.
பாலாஜிக்கு காவேரி கார்னரில் தினமும் கூடும் கூட்டம் மலைப்பைக் கொடுத்தது. 200 பேர் ஆடிஷன் என்றால் கூடி இருந்தனர். இது போல் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு எங்கு ஆடிஷன் நடக்கிறது, எந்த படத்திற்கு, OTT, டீவி சீரயல்களுக்கு நடிகர்கள் தேவைப்படுகிறார்கள், வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு இந்த தகவல்களை திரட்டி கொடுத்து அதற்கொரு பணம் வாங்கி கொள்ளலாம் என கணக்கு போட்டான்.
அடுத்த நாள் முதல் பாலாஜி காவேரி கார்னரில் காலை ஆறு மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பான். நடிக்கும், இயக்குநராகும் ஆசையில் வரும் அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிகள், இயக்குநரின் ஆஃபிஸ் முகவரி என கொடுத்து அதற்கென்று ₹50, ₹100 பெற்றுக் கொள்வான்.
மனோ சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தான். ராஜேஷ் வாய்ப்பு கிடைக்காமல் துபாய்க்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
பாலாஜிக்கு இதுவே ஒரு தொழிலாகி போனது. எல்லாரும் ‘அட்ரஸ்’ பாலாஜி என கூப்பிட ஆரம்பித்தனர். நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க, சினிமாவில் புதுமுகங்கள் அறிமுகமாக பாலாஜி காரணமாயிருந்தான். துணை இயக்குநர்கள், கேஸ்டிங் இயக்குநர்கள் பாலாஜியை தேடி வந்து புதுமுகங்களின் நம்பர்களை வாங்கிச் சென்றனர்.
இயக்குநர்களின் தேவைகளுக்கும், நடிப்பில் ஆர்வம் இருப்பவர்களுக்கும் பாலாஜி ஒரு பாலமாகியிருந்தான்.
பத்து வருடத்திற்கு பிறகு.
சென்னை வந்திருந்தான் ராஜேஷ். பாலாஜி அவனுடைய தொடர்பில் இல்லை. மனோ தொடர்பிலிருந்தான்.
மனோவிடம் பாலாஜி அட்ரஸ் வாங்கி பாலாஜியை தேடிப்போனான்.
‘பாலாஜி ரேஞ்சே வேற, அவன் வேற லெவலில் இருக்கிறான். அட்ரஸ் அனுப்பறேன்’ என வாட்சப்பில் அட்ரஸ் அனுப்பியிருந்தான்.
சினிமா உச்ச நட்சத்திரங்கள் வசிக்கும் நீலாங்கரை.
ஒரு பெரிய பங்களாவின் முன் தான் தேடி வந்த தன் ரூம் மெட் பாலாஜியின் வீடு தானா என ‘அட்ரஸ்’ சரிபார்த்தான்.
பங்களாவின் வாசலில் பளிங்கு கற்களால் ஆன சுவரில் கருப்பு நிற சிறிய கல்லில் ‘Dr. Balaji’ என எழுதியிருந்தது.
அருகில் ஒரு போர்டில் ‘Admissions Open’ என்ற கொட்டை எழுத்துகளின் கீழ் ‘Dr.Balaji Film and Television Academy’ என்றும் , மற்றோரு போர்டில் ‘Dr. Balaji Cine Consultancy Services’ என்றும் எழுதியிருந்தது.