சிறுகதை 6 : பணமதிப்பிழப்பு – சிவஷங்கர் ஜெகதீசன்
08 Nov 2016
PR Jewellers, திருவான்மியூர், சென்னை. மாலை 6 மணி.
கங்காதரன் சில கடைகளை மூடி விடுவது எனவே முடிவெடுத்திருந்தார். வருடத்தின் இறுதி மாதங்களான நவம்பர், டிசம்பர்களில் பெரிய வியாபாரம் இல்லை. 15 கிளைகளில் நகைகள் தேங்கியிருந்தது தவிர பெரிதாக விற்கவில்லை.
ஆடிட்டர் பாபுவுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை கணக்கு பார்க்கும் போது கடந்த வருடத்துடன் YoY கம்பேர் செய்து பாரக்கையில் ₹14 கோடி நஷ்டம்.
PR Jewellery புதிதாக தென் தமிழ்நாட்டில் திறந்த கிளைகளில் சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் மட்டுமே லாபகரமாக சென்று கொண்டிருந்தது.

ஆடிட்டர் அறிவுரைப்படி நாளை தென் தமிழ்நாட்டில் தொடங்கிய மூன்று கிளைகளை மூடி விடலாம் என முடிவெடுத்திருந்தார். ஆடிட்டர் பாபு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்யலாம் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
மேனேஜர்கள் சுப்ரமணியம், அசோக், மார்ட்டின், ஜோசப் போன்றவர்கள் இதற்கு மாறாக மீட்டிங்கில் கருத்து சொன்னதால் இப்போதைக்கு ஊழியர்கள் சம்பளம் குறைப்பு பற்றி பேச வேண்டாம் என முடிவெடுத்தனர்.
இரவு 8 மணிக்கு பாரதப் பிரதமரின் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக ஃப்ளாஷ் நியுஸ் ஓடிக் கொண்டிருந்தது.
இரவு 8 மணிக்கு சரியாக கடையிலிருந்தே செய்திச் சேனல்களை மாற்றி பார்க்க ஆரம்பித்தார் கங்காதரன்.
கருப்புப் பண நடவடிக்கைகளையும், சட்ட விரோத பரிவர்த்தனைகளையும் தடுக்க ₹500, ₹1000 நோட்டுகளை திரும்ப பெறுகிறோமென்ற அறிவிப்பை கேட்டார்.
ஆடிட்டர் பாபுவிற்கு போன் அடித்தார் கங்காதரன்.
‘சொல்லுங்க சார்’
‘நியூஸ் பார்த்தீங்களா?’
‘ஆமா சார். ₹500, ₹ 1000 night லேர்ந்து செல்லாது ன்னு சொல்றாங்க. இதப்பத்தி ஆடிட்டர்ஸ் குரூப்லயும் பேசிச்சிட்டிருக்கோம். இது பிசிஸனுக்கு நல்லதான்னு நான் இதபத்தி விசாரிச்சுட்டு கூப்பிடுறேன் சார்’ என்று கட் செய்தார் பாபு.
அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பிரதமரின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். டிவிட்டரில் பல பிரபலங்கள் பிரதமரை வாழ்த்தினர்.
மறுபக்கம் ஆபிஸிலிருந்து வீடு திரும்புவோர் பார்க்கும் இடத்திலிலெல்லாம் ₹ 500 , ₹1000 கொடுத்து பொருட்களை வாங்கினர்.
பெட்ரோல், டீசல் போட ஒரு பெரிய கூட்டமே காரோடு காத்திருந்தது. எப்படியாவது தன்னிடம் உள்ள ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை தள்ளிவிடுவதற்கு மக்கள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினர்.
பல கடைகள் உடனடியாக 9 மணிக்கு மூடப்பட்டன. நம்மிடம் பழைய நோட்டுகளை தள்ளி விடுவார்கள் என்று பெட்ரோல் பங்க் களிலும் ₹500, ₹ 1000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என எழுதியிருந்தனர்.
கங்காதரன் கடைகளை மூடச் சொல்லி மேனேஜர்களுக்கு உத்தரவிட்டார்.
கங்காதரன் கார் டிரைவருக்கு போன் அடித்து வரச் சொன்னார். இரவு 9:30 pm அனைவரும் புறப்பட தயாரானார்கள்.
பாபு மறுபடியும் அழைத்தார்.
‘சொல்லு பாபு’
‘சார்…இது ஒரு Golden Opportunity சார். இது மாதிரி கிடைக்காது.’
‘என்னப்பா சொல்ற? ‘
‘இப்ப ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை தள்ளிவிடுவதற்கு மக்கள் ஒவ்வொரு கடையா தேடறாங்க. நாம நகைக்கடைகள திறந்து வெச்சோம்னா…தங்கத்துல முதலீடு செஞ்சுடலாம்னு நிறைய பேர் நைட் வந்து வாங்கிட்டு போய்டுவாங்க. நம்ம Excess Inventory எல்லாத்தையும் கூட வித்துடலாம்’
‘என்னப்பா சொல்ற? நம்மளால ₹ 500, ₹ 1000 நோட்டுகளை எப்படி டிஸ்போஸ் பண்ண முடியும்? நம்ம செல்லாத நோட்டுகளை வெச்சு என்ன பண்றது?’
‘சார், இன்னும் 3 நாளைக்கு இந்த நோட்டுகள் செல்லும்னு சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள நம்ம 1200 ஊழியர்கள வெச்சு ஏதாவது ஐடியா பண்ணலாம் சார்’.நீங்க கடைகளை திறந்து விக்க ஆரம்பிங்க’
கங்காதரன் போன் கட் செய்துவிட்டு சுறுசுறுப்பானார். மேனேஜர்கள் அனைவரையும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கிளைகளையும் திறக்கப் சொன்னார். PR Jewellery இரவு முழுவதும் திறந்திருக்கும் தகவல் WhatsApp group களில் பரவியது.
மக்கள் 10:30 pm முதல் PR Jewellery இன் கடைகளுக்கு வரத் தொடங்கினர். எல்லோரும் ₹ 500, ₹1000 பெட்டி பெட்டியாக கொண்டு வந்து நகை வாங்கினார்கள்.
மொத்தத்தில் ₹ 23 கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டது.
அடுத்த நாள் முதல் மக்கள் வங்கிகள், ATM முன் குவிவதும் பணமில்லாமல் திரும்புவதும் வாடிக்கையானது. மக்கள் படமெடுக்க முடியாமலும் ₹ 100, ₹50,₹20, ₹10 சுழற்சியில் இல்லாமலும் பொருட்கள் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டனர்.
கங்காதரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. இந்த பணத்தை மூன்று மாத சம்பளமாக ஊழியர்களுக்கு வழங்கி விடலாம் என்று.
அடுத்த நாளே பைனான்ஸ் டீமுக்கு அறிவுருத்தப்பட்டு 3 மாத சம்பளத்தை 1200 ஊழியர்களுக்கு வழங்கி வந்து சேர்ந்த பணத்தை விநியோகம் செய்தார்.
மகிழ்ச்சியில் ஆடிட்டர் பாபுவை வெகுவாக பாராட்டினார் கங்காதரன்.
கஷ்டகாலத்தில் 3 மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்கிய கங்காதரனை ‘கருணைத்தலைவன்’ , ‘கலியுக கர்ணன்’ என ஊடகங்கள் பாராட்டிக் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.