வாசிப்பனுபவம்: கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்
இலங்கையில் கொழும்பிற்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் படும் அவதிகள், Lodge களில் தங்கி வேலை செய்யும் தமிழர்கள், விசா எடுத்து கனடா, France , Switzerland என நாட்டை விட்டு போக முடிவெடுத்தாலும்….விசா மற்றும் பாஸ்போர்ட் எடுக்க கொழும்பில் தமிழர்கள் தங்கியிருக்கும் போது படும் பாடு என பல கதாப்பாத்திரங்களை கொண்டு ஈழத்தமிழர்களின் வலியை பதிவு செய்திருக்கிறார்.
வாசு முருகவேல் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களை வாசகனிடத்தில் கொண்டு சேர்ப்பதிலும், காட்சிகள் நடக்கும் கலாதீபம் லொட்ஜ் மற்றும் கொழும்பின் வீதிகளை எழுத்தில் கொண்டு வருவதிலும், அதே போல் கதையை நகர்த்திச் செல்வதில் திறமையான எழுத்தை நிருபித்திருக்கிறார்.

விசாகப்பெருமாள், தாரணி, சந்திரன் ஆகிய மூவரின் கனடா இடம்பெயர்வுக்கு கொழும்பில் தங்கி அவர்கள் பாஸ்போர்ட், விசா எடுத்தனர் என்பதை பற்றிய கதை என்றாலும் பல கதாபாத்திரங்களின் கிளைக்கதைகள் படு சுவாரஸ்யம்.
குறிப்பாக கொழும்பன்ரி மற்றும் சங்கர்.
கொழும்பன்ரி கதாப்பாத்திரம்…இங்கே தமிழ்நாட்டில் அற்புதம்மாள் அவர்களை ஞாபகப்படுத்தியது.
கருவாட்டுக்கடைகளில் வேலை பார்க்கும் சங்கர் மற்றும் 3 சிறுவர்களை கைது செய்து சித்ரவதை செய்வது போல் பலருக்கு நடந்திருக்கும் எனத் தோன்றியது.
சங்கர், ராஜன், சுரேஷ், லொட்ஜின் மேனேஜர் பஞ்சவர்ணம், லாரிகளின் கணக்காளர் அபயசேகர, ‘குடு’ தர்மபால, முதலாளி மணிவாசகத்தார், டாக்டர். மங்கையர்க்கரசி, மெண்டிஸ் என ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் விவரித்த விதம் நம் கண் முன்னே கதை நடப்பது போலிருந்தது.
ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் காவல்துறை மற்றும் ராணுவம் அந்த பகுதியை அடைந்து செய்யும் அட்டூழியங்களை தெளிவாக எழுதியிருக்கிறார்.
மேலும் இலங்கை அரசியல் களத்தில் நடந்த பிரச்சனைகளையும் மோதல்களையும் பதிவிட்டிருக்கிறார்.
கொழும்பன்ரி கதாப்பாத்திரம் எழுதிய விதம் அருமை. அதே போல் சங்கர் கதாப்பாத்திரம் படும் துயரங்கள்.
பொறுப்புள்ள அக்காவாக தாரணி சந்திரனை காக்கிறார். அன்றைய சூழலில் 90 களில் புலம்பெயர்பவர்களின் வாழ்க்கையை விசாகர், தாரணி, சந்திரன் கதாப்பாத்திரங்கள் கண்முன் காட்டுகிறது.
சந்திரன் தன் வயதிற்கே உண்டான சந்தோஷங்களை ஆங்காங்கே கண்டு கொள்வது போல் எழுதியிருக்கிறார். மேனேஜர் பஞ்சவர்ணம் போல் கூழைக்கும்பிடு போடும் முகங்களை நாம் பலரின் மூலம் வாழ்வில் பார்த்திருக்கிறோம், அவர்களை திரும்பி பார்த்த நினைவு, பஞ்சவர்ணத்தை படிக்கும் போது வந்தது.
தன் தாய் மண்ணை விட்டு பிரிந்த ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்ல முடியா துயரங்களும் , சந்தித்த சித்ரவதைகளையும் இந்த நாவல்
முழுமையாக காட்சிப்படுத்துகிறது.