கவியரசர் கண்ணதாசன் ‘செப்பு மொழி பதினெட்டு’ என எழுதி வந்ததின் தொகுப்பு இந்த நூல்.
2 மணி நேரத்தில் படித்து விடலாம்.
சில ‘செப்பு’ மொழிகள் அட்டகாசமானவை.
செப்பு மொழி என்று இதை ஏன் கூறுகிறீர்கள் என்று ஒரு நபர் கேட்கிறார். இது ‘பொன்’ மொழி அல்ல. வெறும் ‘செப்பு’ தான். பொன்னிலே கலவை உண்டு. செம்பிலே கலவை இல்லை என்று கண்ணதாசன் இந்தப்புத்தகத்திலேயே கூறுகிறார்.
படித்ததில் பிடித்த செப்பு மொழிகள் இங்கே தொகுத்திருக்கிறேன்.
- நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே; தூரத்திலேயே இரு. பக்கத்தில் இருக்கும் இமையைப் பார்க்க முடியாத கண்கள், தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து விடுகின்றன.
- வயது ஆக ஆகத் தலைமுடி நரைத்துப் பற்கள் விழுவதற்கு பதிலாக, நாக்கே விழுந்துவிடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால், நாட்டில் குழப்பமே இருக்காது!
- கொம்பில்லாத மாடுகள் கிராம ங்களில் இருக்கின்றன. மூளை இல்லாத மனிதர்கள் நகரங்களில் இருக்கிறார்கள்.
- மக்கள் ஒரே ஒரு அயோக்கியனை சமாளிப்பதற்கு பெயர் சர்வாதிகாரம்! ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்!
5. கூத்து நடத்துபவன் ‘மழை வரக்கூடாது’ என்று பிரார்த்திக்கிறான். விவசாயி ‘மழை வர வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறான். எது நடந்தாலும் இறைவனுக்கு இரண்டு தேங்காய் கள் கிடைக்கின்றன.
6.ஆந்தைகள், வௌவால்கள், தாசிகள், கள்வர்கள், அரசியல்வாதிகளுக்கு இறைவன் கொடுத்த சலுகை – இரவு!
7.அறிவுள்ளவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாள்களாகவே இருக்கின்றன – நிழலில் வளரும் செடி ‘சோகை’ யாக இருப்பது போல.
8. அன்பிலே நண்பனை வெற்றி கொள். களத்திலே எதிரியை வெற்றி கொள்; பண்பிலே சபைகளைவெற்றி கொள்;மஞ்சத்திலே மனைவியை வெற்றிகொள்.
9.’தந்தி’ அடிக்கிற ஊருக்கு போய்ச்சேரும். ‘வதந்தி’ பேசுகிறவனிடமே திரும்பி வரும்.
10.தாசிக்கு இளமை யும், வியாபாரிக்கு விளம்பரமும், அரசியல்வாதிக்கு நீலிக்கண்ணீரும் லாபம் தருகின்றன.
11. சபையேறிப்பேசும் போது நீ ஒருவன் தான் முட்டாள் என்று நினைத்துக்கொண்டு பேசு. பேச்சு கெட்டிக்காரத்தனமாக இருக்கும். நீயே கெட்டிக்காரன் என்று நினைத்துப்பேசினால் பேச்சு மடத்தனமாக இருக்கும்.
பணிவு உயர்த்துகிறது. திமிர் தாழ்த்துகிறது.