நேற்று ஒரே நாளில் இந்த புத்தகத்தை படித்து முடித்தேன்.
இயற்கை பற்றிய எஸ்.ரா வின் பதிவுகள் ஆழமானவை..Detail அதிகம் உள்ளவை..
மழை, மலைகள், நிழல், பறவைகள், இரவு, அருவிகள்,மரங்கள், தும்பைப்பூ, ஆடுகளின் நடனம் என ஒவ்வொன்றைப் பற்றியும் அதன் தன்மைகளையும் அலசி அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
மழை பற்றி சொல்லும் போது
மழை ஒரு அடிபட்ட புலி போல அலைந்து கொண்டிருக்கிறது. சில வேளை மழை ஒரு யுத்தம். அதன் நோக்கம் மனிதர்களை பயங்கொள்ளச் செய்வது மட்டுமே என்று தோன்றுகிறது. வலுவான மழை யார் மீதோ தீராத கோபம் கொண்டது போல ஆவேசமான மழை.காற்றும் துணைக்கு சேர்ந்து கொண்டால் நொய்ந்த பொருட்களை, விளம்பர பலகைகளை, துணிபடுதாக்களை அது பிய்த்து வீசுகின்றது.
கால்களை பற்றி எழுதுவதில், உடல் ஓர் அதிசயம் அதில் கால்களின் மேல் கட்டப்பட்ட கோட்டை என்று தோரோ சொன்னதை குறிப்பிடுகிறார். பாதயாத்திரை செல்பவர்களுக்கு ஆன்மீகத்தைத் தவிர நடந்து நடந்து…. நம்பிக்கையும், மன உறுதியும் அதிகமாகி விடுகிறது எனக்கூறுகிறார்.
மழையைப்பற்றி மேலும் சில இடங்களில்…
மழை எப்போதும் ஆனந்தமானதில்லை. எல்லோருக்கும் விருப்பமானதில்லை.ஆனாலும் மனித விருப்பங்களுக்காக மழை எப்போதும் பெய்வதில்லை. பெய்வது மழையின் இயல்பு. ஆராதிக்கபடுவதும், தூற்றப்படுவதும் பற்றி மழை கவலை கொள்வதில்லை. மழை கற்றுத் தருகிறது. உலகைப் புரிய வைக்கிறது. மழையை எதிர்கொள்வது ஒரு கலை. அதை மனிதர்கள் கற்றுக்கொள்ளவேயில்லை.
மாநகரம் கிராமங்கள் பற்றிய ஒப்பிடுகையில்…
மாநகரம் அதிவேகமாய் நெருக்கடியான ஒரு தளத்திலும், கிராமம் கைவிடப்பட்ட தனிமை, நிராகரிப்பு, அக்கறையின்மை என்றும் ஒரே நேரத்தில் இரண்டு வேறு காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வேறுபாட்டையாவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழக கிராமங்களைப் பற்றியுள்ள அபரிமிதமான சாதிய வளர்ச்சியும் சகமனிதன் மீதான வெறுப்பும், எவரையும் எதையும் ஏமாற்றலாம் என்ற மனப்போக்கையும்தான் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.
எலிக்கடி, விருந்தாளிகளின் தலையணை, தொலைத்த ஆடைகள் என்று தன்னுடைய அனுபவங்களாக எழுதியவையும் சுவாரஸ்யமாக இருந்தது.